Home108 திவ்ய தேசம்கேது தோஷம் நீக்கும் அற்புத பரிகார திவ்ய தேசம்-திருவைகுந்த விண்ணகரம்

கேது தோஷம் நீக்கும் அற்புத பரிகார திவ்ய தேசம்-திருவைகுந்த விண்ணகரம்

திருவைகுந்த விண்ணகரம் ( திருநாங்கூர் )

திருநாங்கூரில் அமைந்த மற்றொரு புண்ணியத் திருக்கோயில் இது. பெருமாளுக்கு திருநாங்கூர் மிகவும் பிடித்த இடம் போலும்,எனவேதான் அடுத்தடுத்து கோயில் கொண்டு ஆனந்தமாக அமர்ந்திருக்கிறார்.

சிறிய கோயில் என்றாலும் கீர்த்திகள் நிரம்பியது. பெருமாளின் திருமேனியை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று நினைக்கத் தோன்றும். கோவிலுக்கு இரண்டு பிராகாரங்கள் உண்டு.

திருவைகுந்த விண்ணகரம்

மூலவர் வைகுந்தநாதன் தாமரைப் பீடத்தின் மீது வலது காலை மடக்கி குத்திட்டு வைத்து இடது காலைக் கீழே தொங்கவிட்டும் இடதுகரம் அரவத்தின் மேல் வைத்தும் , பின்னிரு கரங்கள் சக்கரம் , சங்கும் தலைக்குப் பின்புறம் ஐந்து தலைகள் கொண்ட ஆதிசேஷன் மீது அமர்ந்த கோலம்.

திருமகள் வலது காலைக் கீழே தொங்கவிட்டு இடது காலை மடித்து வைத்து அமர்ந்த நிலை. பூமிதேவியும் இதே நிலையில் காட்சி.

உற்சவர் வைகுந்தநாதன் என்று பெயர்.

தாயார் வைகுந்தவல்லி.

விமானம் அனந்த சத்யவர்த்தக விமானம்.

பகவானது சேவை பரமபதத்தில் எப்படி இருந்தாரோ – அப்படியே இருக்கிறது. அங்கு தேவர்களுக்கு எப்படிக் காட்சி கொடுத்தாரோ அப்படித்தான் இந்தக் கோயிலும் காட்சியளிக்கிறார்.

பெருமாளின் கருணையின் காரணமாக உத்தங்க முனிவருக்கு இத்தலத்தில் மோட்சம் கிடைத்தது. ஹிம்சகன் என்னும் கொடிய அரக்கனைத் திருத்துவதற்காக இறைவன் , அவனை இத்திருத்தலத்திற்கு வரச் செய்து இங்குள்ள திருக்குளத்தின் நீரைப் பருக வைத்தார். அந்த புஷ்கரணி நீரைப் பருகியதும் ‘ ஹிம்சகனுடைய ‘ கெட்ட எண்ணங்கள் அவனை விட்டு விலகியது. எவ்வளவுக் கெவ்வளவு கொடிய செயல் புரிந்தானோ அத்தனைக் கத்தனை தரும காரியங்களில் இறங்கி நிறைய புண்ணியத்தைச் சம்பாதித்து இறைவனது அன்புக்குப் பாத்திரமானான்.

திருமங்கையாழ்வார் பாடல் பெற்ற ஸ்தலம்.

மற்ற திருமால் கோயிலிலுள்ள விமானத்திற்கும் இந்த வைகுந்த விண்ணகரப் பெருமாள் கோயில் விமானத்திற்கும் நிறைய வித்தியாசம் உண்டு.விமானத்தின் கிரிவலப் பகுதியில் தென்புறத்தில் நரசிம்மரும் , மேற்குப் பக்கத்தில் அரங்கநாதரும் , வடக்குப் பக்கத்தில் வைகுந்த நாதர் உருவமும் சுதையில் வடிக்கப்பட்டுள்ளன.

திருவைகுந்த விண்ணகரம்

பரிகாரம் :

குடும்பப் பிரச்சனைகள் ஏற்படாமலிருக்கவும் , குழந்தைகள் எதிர்காலம் எந்தவித வில்லங்கம் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கவும், நோய்களால் எந்தவிதத் தொல்லையும் ஏற்படாமல் இருக்கவும்,எதிரிகளாலும், உறவினர்களாலும் போட்டி பொறாமை ஏற்படாமல் தடுக்கவும்,ஆப்ரேஷன் நல்லபடியாக வெற்றியைத் தரவும்,பில்லி , சூனியம் , ஏவல் இவைகளினால் பாதிக்கப்படாமல் இருக்கவும் இங்கு வந்து பெருமாளை முறைப்படி வேண்டி பிரார்த்தனை செய்தால் நிச்சயம் எதிர்பார்த்த பலனை அடைய முடியும். அதோடு பூமியிலேயே வைகுந்தத் தரிசனத்தைக் காணும் பாக்கியம் ஏற்படும்.

கோவில் இருப்பிடம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!