புத்திர தோஷம்
புத்திர தோஷம்(Puthra Dosham) என்பது ஒவ்வொரு லக்கினத்திற்கும் வேறுபடும். பொதுவாக எந்த லக்னமாக இருந்தாலும் 5ஆம் இடம் புத்திர ஸ்தானத்தை குறிக்கும்.
ஆண் பெண் இருவருக்கும் நட்சத்திரப் பொருத்தங்கள் பார்ப்பது மட்டுமின்றி ஜாதகரீதியாக புத்திர ஸ்தானம் பலமாக உள்ளதா? என ஆராய்வது அவசியம். புத்திர ஸ்தானமான 5ம் பாவம் பாதிக்கப்பட்டால் குழந்தை யோகம் உண்டாக தடை உண்டாகும்.
மேஷ லக்னம்(Mesha Lagnam):
மேஷ லக்னத்திற்கு 5ஆம் இடம் சிம்மம். சிம்மத்தின் அதிபதியான சூரியன் கன்னி, துலாம், விருச்சிகம், மீனம் போன்றவற்றில் இருந்தால் புத்திரதோஷம் உண்டாகும்.
ரிஷப லக்கினம்(Rishba Lagnam):
ரிஷப லக்கினத்திற்கு ஐந்தாம் இடமான கன்னியில் சுக்கிரன் இருந்தாலும், புதன் துலாம், மேஷம், தனுசு ராசிகளில் இருந்தாலும் புத்திர தடை ஏற்படும்.
மிதுன லக்கினம்(Mithuna Lagnam):
மிதுன லக்னத்திற்கு ஐந்தாம் இடம் துலாம். துலாமின் அதிபதி சுக்கிரன்.சுக்கிரன் ஐந்தாம் இடமான கன்னியில் இருந்து துலாமில் சூரியன் இருந்தாலும், சுக்கிரன் மகர, ரிஷப ராசியில் இருந்தாலும் புத்திரதோஷம் ஏற்படும்.
கடக லக்கினம்(Kadaga Lagnam):
கடக லக்கினத்தின் ஐந்தாமிடம் விருச்சகம். லக்னாதிபதி விருச்சகத்தில் இருந்து செவ்வாய் கடகத்தில் நின்றால் புத்திர தடை உண்டு. அது மட்டுமல்லாமல் விருச்சகத்தில் புதன் இருந்து, கேது மற்றும் சனி நின்றாலும் அது புத்திர தோஷ ஜாதகம் ஆகும்.
சிம்ம லக்னம்(Simma Lagnam):
சிம்ம லக்னத்திற்கு ஐந்தாம் இடம் தனுசு. தனுசுக்கு அதிபதியான குரு ஆறாம் இடமான மகரத்திலும், ஆறாமிடத்துக்குரிய சனி தனுசு ராசியில் இருந்தாலும் அந்த ஜாதகம் புத்திரதோஷம் உடையதாகும்.
கன்னி லக்னம்(Kanni Lagnam) :
கன்னி லக்னத்திற்கு ஐந்தாம் இடம் மகரம். மகரத்தில் சனி இருப்பது தோஷம் இல்லை என்றாலும் சூரியனுடன் இணைந்து இருந்தால் 5-ஆம் இடமும் 5-ஆம் பாவாதிபதியும் கெடுகிறார். எனவே இது புத்திர தோஷ அமைப்பாகும்.
துலாம் லக்கினம்(Thulam Lagnam):
துலாம் லக்னத்திற்கு ஐந்தாம் இடம் கும்பம். கும்பத்திற்கு அதிபதியான சனி மேஷத்தில் இருந்து, கும்பத்தில் செவ்வாய் நின்றாலும், சனி கன்னி ராசியில் இருந்து கும்பத்தில் குரு பார்வை செய்தாலும், செவ்வாய் சிம்மத்தில் நின்று பார்த்தாலும் புத்திரதோஷம் ஏற்படும்.
விருச்சிக லக்னம்(Viruchiga Lagnam):
விருச்சிக லக்னத்தின் ஐந்தாம் இடம் மீனம். மீனத்தில் சனி இருந்து மகரத்தில் குரு சஞ்சாரம் செய்தால் தோஷம் ஆகும். மீனத்தில் குரு இருந்து மகரத்தில் சனி நின்றால் புத்திரதோஷம் உண்டாகும்.
தனுசு லக்னம்(Dhanusu Lagnam):
தனுசு லக்னத்தின் ஐந்தாம் இடம் மேஷம். மேஷத்தின் அதிபதியான செவ்வாயுடன் சனி தொடர்பு ஏற்பட்டாலும், செவ்வாய் எட்டாமிடத்தில், சனி 5-ம் இடமான மேஷத்தில் இருந்தால் ஜாதகருக்கு புத்திர தோஷம் உண்டு.
மகர லக்னம்(Magara Lagnam):
மகர லக்னத்திற்கு ஐந்தாம் இடம் ரிஷபம். ரிஷபத்தின் அதிபதி சுக்கிரன் கன்னியில் நீசம் அடைந்து, ஐந்தில் ராகு கேது சூரியனுடன் இணைந்து இருந்தால் புத்திரதோஷம் ஏற்படும்.
கும்ப லக்னம்(Kumba Lagnam):
கும்ப லக்னத்திற்கு ஐந்தாம் இடம் மிதுனம். மீனத்தில் புதன் நின்று பாவிகள் பார்த்தால் புத்திர தடை உண்டாகும்.
மீன லக்னம்(Meena Lagnam):
மீன லக்னத்திற்கு 5ஆம் இடம் கடகம். கடகத்தில் சூரியன் சஞ்சரித்தாலும், சுக்கிரன் சஞ்சரித்தாலும் புத்திரதோஷம் உண்டாகும்.
புத்திர தோஷம் வர காரணம்என்ன ??
நமக்கு ஏற்படும் தோஷங்கள் அனைத்தும் நாம் முற்பிறவியில் செய்த கர்ம வினையை பொருத்து அமையும். முற்பிறவியில் பெற்றோர்களை மதிக்காமல் கொடுமைப்படுத்தினால், அவர்களின் சாபத்தால் புத்திர தோஷம்(Puthra dosham) வரும் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகிறது. முன்னோர்களுக்கு முறையாக ஈமக்கடன் செய்யாமல் இருந்தால் புத்திரதோஷம்(Puthra dosham)ஏற்படும் என்று கூறப்படுகிறது.
முற்பிறவியில் ஆன்மீக அடியார்களையும், மகான்களையும் அவமானப்படுத்தி இருந்தால் புத்திர தோஷம்(Puthra dosham)ஏற்பட்டு பிறக்கும் குழந்தை வளர்ச்சியற்ற குழந்தையாகவும், ஊனமுற்ற குழந்தையாக இருக்கும்.
அந்தணரைக் கொன்றாலோ , குல தெய்வ குற்றத்தாலோ ,பூ, பிஞ்சு உடன் உள்ள மரங்களை காரண காரியம் என்று வெட்டியதால் உண்டான சாபத்தால் புத்திரதோஷம் ஏற்படும்.
கருச்சிதைவு செய்தாலும் பெற்ற குழந்தைகளை சரிவர கவனிக்காமல் விட்டாலும் புத்திரதோஷம் உண்டாகும்.
புத்திரனால் சொத்து இழப்பு
புத்திர ஸ்தானாதிபதி 5 ,8 , 12 போன்ற இடங்களில் இருந்தாலும் அவர்களின் பார்வை பெற்றாலும் அவருடைய பிள்ளைகள் கெட்ட புத்தி உள்ளவர்களாகவும் திருடர்களாகவும் இருப்பர்.
அதுபோல ஐந்தாம் வீட்டின் அதிபதி பலவீனமடைந்து விரையாதிபதி என்று சொல்லப்படும் பன்னிரண்டாம் வீட்டில் அதிபதியோடு கூடினாலும் புத்திரனால் பணவிரயம் சொத்து இழப்பு போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும்.
புத்திர ஸ்தானாதிபதி பாவக்கிரகத்தின் நவாம்சம் அடைந்தாலும் புத்திரனால் பொருள் இழப்பு உண்டாகும். எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.
புத்திர வழியில் சந்தோஷம் யாருக்கு
புத்திரஸ்தானாதிபதி புத்திர ஸ்தானத்தில் அமையப் பெற்று ஒன்பதாம் வீட்டின் அதிபதி 9 ஆம் வீட்டில் இருந்தால் புத்திர வழியில் சந்தோசம் ஏற்படும். மேலும் பத்தாம் அதிபதியோடு புத்திர காரகனாகிய குருவும் இணைந்து காணப்பட்டால் புத்திர வழியில்சந்தோஷமும் பூரிப்பும் ஏற்படும்.
புத்திர வழியில் கெடுதி யாருக்கு
புத்திர ஸ்தானத்தில் 6-ம் வீட்டின் அதிபதி அமையப் பெற்றாலும் புத்திர ஸ்தானாதிபதி பலம் இழந்தாலும் அல்லது பகைவர்களோடு கூடி பலம் குன்றி யிருந்தாலும் புத்திர வழியில் சஞ்சலம், பொருள் இழப்பு போன்ற அனுகூலமற்ற பலன்களே ஏற்படுகிறது.
புத்திரர்களால் செல்வம் செல்வாக்கு யோகம் யாருக்கு
மனிதனின் வாழ்க்கையில் பிள்ளைகளால் செல்வம் மற்றும் செல்வாக்குப் பெறும் பெற்றோர்கள் யார் ?என்றும் அது போன்ற யோகம் யாருக்கு? என்றும் ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ளது.
ஐந்தாம் அதிபதி நீர் ராசிகளில் நிற்க பெற்றாலும் அல்லது ஐந்தாம் அதிபதி பதினொன்றாம் வீட்டில் அமையப் பெற்றாலும் புத்திரர்களால் பெரும் செல்வாக்கு கிடைக்கப்பெறுவீர்கள்.
சிம்ம வீட்டில் ராகு ,செவ்வாய், கேது, சனி போன்ற தீய கிரகங்கள் சஞ்சரிக்காத நிலையில் உள்ள புத்திரர்கள் சூரியன் ராகு இணைந்து சஞ்சரிக்காத நிலையிலும் பெற்றோர்களுக்கு பேரும், புகழும் கிட்டும்.மேலும் செல்வாக்கும் மிகுந்த சமுகத்தில் மிகச்சிறந்த ஆளாக விளங்கி எல்லாவிதமான சுகங்களையும் பெற்று வாழ்வார்.
இதுபோன்ற நிலைகளில் பிறக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் அனைத்து விதமான செல்வம், செல்வாக்கு யோகம் பெறும் வாய்ப்புகள் உள்ளது என ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
புத்திர தோஷம் நீங்க பரிகாரங்கள்
- குருபகவானுக்கு வியாழக்கிழமைகளில் செய்து வழிபட்டால் தோஷம் விலகும். முருகனுக்கும், சிவனுக்கும் அபிஷேகங்கள் செய்து வழிபட்டால் தோஷம் நீங்கும்.
- ஆறு கார்த்திகை நட்சத்திரங்கள் முருகனுக்கு உகந்தவை. முருகனுக்கு ஆறுமுகங்கள் உள்ளதால் சஷ்டி திதி முருகனுக்கு உரியதாகச் கூறப்படுகிறது சிவனின் குமாரனான முருகப்பெருமானை வளர்பிறை சஷ்டி திதியில் வணங்கினால் குழந்தைப்பேறு கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
- எந்த கிரகம் புத்திர தோஷத்தை உருவாக்கியதோ அந்த கிரகத்தின் திசை அல்லது புத்தி காலத்தில் அந்த கிரகத்தின் அதிதேவதைக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் தோஷம் விலகி புத்திர பாக்கியம் உண்டாகும்.
- ஏழை குழந்தைகளுக்கு உடைகள் ,விளையாட்டுப் பொருட்கள், நூல்கள் வாங்கிக் கொடுத்தால் புத்திரபாக்கியம் உண்டாகும்.
- பவுர்ணமி ,மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு அன்று அன்னதானம் செய்வதன் மூலமாகவும் வம்ச விருத்தி கிடைக்கும்.
- திருவெண்காடு ,திருக்கருகாவூர் தலங்களுக்கு சென்று உரிய வழிபாடு பூஜைகள் செய்தால் சந்தான பாக்கியம் கிட்டும்.
- குலதெய்வம் கோவிலில் அவரவர் ஜன்ம நட்சத்திரத்தன்று அன்னதானம் செய்தால் புத்திர தடை நீக்கம்.
- எந்த தோஷமாக இருந்தாலும் அது பிரதோஷத்தில் நீங்கிவிடும் பிரதோஷ நாளில் அபிஷேகம் செய்தால் தோஷம் விலகி புத்திரபாக்கியம் கிடைக்கும்.
- சந்தான கோபால கிருஷ்ணன் யாகம் வீட்டில் வளர்த்து கிருஷ்ணனை வழிபட்டு வந்தால் புத்திர பாக்கியம் கிடைக்கப் பெறுவீர்கள்.
புத்திர தோஷ பாதிப்பு குறைய செல்ல வேண்டிய கோயில்கள்
- அருள்மிகு சோமநாதர் திருக்கோயில், நீடூர், நாகப்பட்டினம்
- அருள்மிகு ஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் ,காஞ்சிபுரம்
- அருள்மிகு அமரபணீஸ்வரர் திருக்கோவில் ,பாரியூர் ,ஈரோடு
- அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில், வெஞ்சமாங்கூடலூர், கரூர்
- அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில், உறையூர், திருச்சி
- அருள்மிகு கோணேஸ்வரர் திருக்கோயில், குடவாசல், திருவாரூர்
- அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், இலுப்பைக்குடி, சிவகங்கை
- அருள்மிகு வீரசேகரர் திருக்கோயில், சாக்கோட்டை, சிவகங்கை
- அருள்மிகு திருநேத்திரநாதர் திருக்கோயில், திருப்பள்ளி முக்கூடல் ,திருவாரூர்
- அருள்மிகு ஆழிகண்டிஈஸ்வரர் திருக்கோயில் ,இடைக்காட்டூர், சிவகங்கை
- அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில், திருப்பரங்குன்றம், மதுரை
- அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில், உறையூர், திருச்சி