பொங்கல்
மாதங்களில் மிக உயர்வானது தை மாதம். ஒருவன் தன்னுடைய வாழ்வின் முன்னேற்றத்திற்கு விடியலை எதிர்பார்ப்பது போல தை மாதத்தை ஆவலோடு எதிர்பார்ப்பான். காரணம் “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்று பழமொழியே இருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்று சொன்னால் தை மாதத்தை ‘மகர மாதம்’ என்பார்கள். மகர ராசியில் சூரியன் பிரவேசிக்கக்கூடிய மாதம் சூரிய உதய மாதம் என்று சொல்வார்கள்.
அதாவது நமக்கு ஒரு ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள் தேவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 2 மணி நேரம். அதில் ‘தட்சிணாயனம்’ என்பது இரவு நேரம். ‘உத்தராயணம்’ என்பது பகல் நேரம். அந்தப் பகல் நேரத்தில் துவக்கம் தை மாதம். பல பெருமாள் கோயில்களில் இதையொட்டி வாசல்கள் உண்டு. ‘திருவெள்ளறை’,குடந்தை சாரங்கபாணி கோயில் போன்ற ஆலயங்களில் இந்த வாசல்கள் உண்டு. உத்தராயன காலத்தில் வடக்கு வாசல் மூலமாக பெருமாளை சேவிக்க செல்ல வேண்டும். தட்சிணாயன காலத்தில் தெற்கு வாசல் மூலமாக பெருமாளை சேவிக்க செல்ல வேண்டும்.
தைமாத கிரக நிலைகள்
இந்த ஆண்டு தை மாதம் பிறக்கக்கூடிய காலத்தை நாம் ஆராய்ந்து பார்ப்போம்! மேஷ ராசியில் குரு இருக்கிறார். அவர் வக்கிரகதி நீங்கி சுபயோகத்தோடு இருக்கின்றார். கன்னியில் கேதுவும், மீனத்தில் ராகவும் இருக்கின்றார்கள். கும்ப ராசியில் சனி பிரவேசித்திருக்கிறார். சதய நட்சத்திரத்திலேயே தை மாதம் பிறக்கிறது. இது அற்புதமான கிரக நிலை. மாத ராசியான ‘மகர ராசி’ எந்த தீய கோள்களாலும் பார்க்கப்படவில்லை என்பதால் இந்த தை மாத பிறப்பு அடுத்து வரும் மாதங்களில் மங்களகரமான பலன்களைத் தரும். அதற்கான பிரார்த்தனையை இந்த தை முதல் நாள் முதல் தொடங்க வேண்டும்.
பொங்கல் வைக்க உகந்த நேரம்
நிறைய மழையை பொழிய வைத்து பூமியின் செழிப்புக்கு காரணமான இந்திரன். பயிர், தானியங்களை நன்கு விளைவிக்க காரணமான சூரியன். இந்திரனுடைய சகோதரன் உபேந்திரன். இவர்களை முன்னிட்டு நடத்தப்படும் பண்டிகை பொங்கல். கூடத்தில் புதுப்பானை வைத்து புது நெல், அரிசி, புது வெல்லம், நெய் இவைகளைக் கொண்டு சர்க்கரை பொங்கல் செய்து பொங்கி வரும் போது “பொங்கலோ பொங்கல்” என்று கூவி மேலே குறிப்பிட்ட மூன்று தேவர்களுக்கும் படையல் வைத்து வணங்கும் பண்டிகை பொங்கல் பண்டிகை. பொங்கல் வைக்க 3 அல்லது 1 பானையை வைத்து பொங்கல் செய்யலாம்.
பொங்கல் வைக்க வேண்டிய நேரம் காலை 6:00 மணி முதல் 07:30 மணிக்குள்
பொங்கல் பானை வைக்கவேண்டிய நேரம்!
தை 1-ம் தேதி, மகர சங்கராந்தி !! உத்தராயண புண்ணிய காலம் !!!
15-01-2024, திங்கள்கிழமை: பொங்கல் பண்டிகை,
சுக்கிலபட்சம் (வளர்பிறை), சதுர்த்தி திதி, சதய நட்சத்திரம் கூடிய சுபயோக, சுப நன்னாளில், வீட்டைச் சுத்தம் செய்து, காலை 6:30 முதல் 7:30, காலை 9:30 முதல் 10:30 மகர லக்னத்தில், கோலமிட்டு, மலர்கள், கனிகள், கரும்புத் துண்டு ஆகியவற்றால் பொங்கல் புதுப் பானையை அலங்கரித்து, குலதெய்வம், இஷ்ட தெய்வம், பித்ருக்கள் ஆகியோரை மனதால் வணங்கி, புதுப் பானை வைத்து, பொங்கல் செய்து சூரிய பகவானுக்கு அமுது செய்வித்தல் வேண்டும். வருடம் முழுவதும் குடும்பத்தில் மகிழ்ச்சியும், மன நிறைவும், லசுமி கடாட்சமும், நிலவும்.
மாட்டு பொங்கல் வைக்க உகந்த நேரம்
இன்று மாடுகளை குளிப்பாட்டி அலங்கரித்து நமக்காக உழைத்த மாடுகளுக்கு நன்றி செலுத்த வேண்டிய நாள். மாடு இல்லாதவர்கள் பசுமாடுடன் கூடிய கிருஷ்ணரை வழிபடலாம்.
மாட்டுப் பொங்கல் கொண்டாட வேண்டிய நேரம்: பகல் 11:00-12:00 ; மாலை 05:16-06:16
மறுநாள் தை 2-ம் தேதி (16-1-2024)
செவ்வாய்க்கிழமையன்று, அதிகாலையிலேயே நீராடி, அவரவர் குல வழக்கப்படி, திருநீறு, திருமண் அணிந்து, பசுக்கள், காளைகள், கன்றுகள் ஆகியவற்றை நீராட்டி, மஞ்சள், குங்குமம் இட்டு, மலர்கள் சூட்டி, தூப- தீபம் காட்டி, மும்முறை வலம் வந்து, வணங்க வேண்டும். பாவங்கள் அகலும்; புண்ணியம் சேரும். குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் பொங்கும். நம்மை வாழ வைக்கும் தாயே, பசுவின் உருவில் காட்சியளிப்பதாக வேதங்கள் கூறுகின்றன.
17-01-2024 காணும் பொங்கல்!
காலையில் நீராடி, புத்தாடை அணிந்து, தாய் – தந்தையரை, பெரியோர்களைக்கண்டு வணங்கி அவர்களின் ஆசியைப் பெற்றுமகிழ வேண்டிய புண்ணிய தினம்.