அனுமன் ஜெயந்தி 2024
மார்கழி மாதம் வருகின்ற அமாவாசை திதியில் மூல நட்சத்திரம் கூடிய நாளில் அஞ்சனைக்கு மகனாக சகலக தேவதைகளின் வரமாக வாயுபுத்திரனாக ஆஞ்சநேயர் அவதரித்தார். இன்று பெருமாள் கோவிலுக்கு சென்று ஆஞ்சநேயரை வழிபட உகந்த நாளாகும்.
மார்கழி மாதத்தில் அமாவாசை தினமும் மூல நட்சத்திரமும் சேர்ந்து வரும் தினமே அனுமன் ஜெயந்தியாக கருதப்படுகிறது. இந்நாளில் ராம பக்தனாகிய அனுமனை துளசி ,வெண்ணை சாற்றி வழிபட எங்கும் ,எதிலும் வெற்றி கிடைப்பதுடன், எந்த பாதிப்பும் ஏற்படாது.
அனுமன் காயத்ரி மந்திரம்
ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே,
வாயுபுத்ராய தீமஹி ,தந்தோ
அனுமன் ப்ரசோதயாத்
சூரியனும் -அனுமனும்
அஞ்சனாதேவிக்கும் வாயு பகவானுக்கும் பிறந்த அனுமன் சிறு குழந்தையாக இருக்கும்போதே வானில் தெரிந்த சூரியனைப் பழம் என்று கருதி அதைப் பிடித்து சாப்பிடுவதற்காக பறந்து சென்றார். சூரியனை பிடிப்பதற்காக சிறு குழந்தை பிறந்து வருவதை கண்ட தேவர்கள் திகைத்தனர்.
வானில் பறந்து செல்லும் வல்லமையை படைத்த அனுமனுக்கு சூரிய தேவன் கல்வி கற்றுக் கொடுத்தான். சூரிய பகவானை பார்த்தபடி தேரின் ஓட்டத்திற்கு ஏற்ப பின்புறமாக ஓடிக்கொண்டே கல்வி, இசை, வேதங்கள் என அனைத்தையும் அனுமன் பயின்றான். மேலும் ‘நவியாகரண பண்டிதன்’ என்ற பட்டத்தையும் பெற்றான்.
அனுமனின் பராக்கிரமத்தை கண்ட சூரியன் தனது மகன் சுக்ரீவனுக்கு துணையாக இருக்க வேண்டுமென்றும் அனுமனின் ஞானம், வீரம் அனைத்துமே அவனுக்கே பயன்பட வேண்டும் என்றும் கூறினார். அதன் பேரில் அனுமனும் சுக்ரீவனும் நட்புக் கொண்டு அவனது மந்திரியாக இருந்தான்.
இந்திரனின் கோபம்
சூரிய கிரகணத்தை ஏற்படுத்துவதற்காக சென்ற ராகுவால் அனுமன் வேகத்திற்கு செல்ல முடியவில்லை, அதை கண்ட இந்திரன் தனது ஆயுதத்தால் அனுமனை தாக்கினான். அதனால் கோபமடைந்த வாயு தேவன் தனது இயக்கத்தை நிறுத்தினான். அதையடுத்து தேவர்கள் சமாதானம் செய்ததால் வாயுதேவன் அனுமனை அழைத்துச் சென்றார்.
ராமனும் -அனுமனும்
சீதையை தேடி ராமனும் லட்சுமணனும் வந்தபோது சுக்ரீவனும், அனுமானும் அவர்களை சந்தித்து பேசினர். அப்போது அனுமனின் சமயோஜித பேச்சை கேட்ட ராமன் மிகவும் மகிழ்ந்தார். அன்று முதல் ராமனின் சிறந்த தொண்டனாக அனுமன் திகழ்ந்தான்.
ஜடாயு மூலமாக ராவணன் சீதையை இலங்கைக்கு கடத்திச் சென்றது தெரிய வந்தது அதையடுத்து கடலை தாண்டி இலங்கைக்கு சென்று வரக்கூடிய வல்லமை அணுமனுக்கு மட்டுமே இருப்பது தெரியவந்து, சீதையைத் தேடி அனுமன் இலங்கைக்குச் சென்றார். அப்போது ராமன் தனது அடையாளமாக மோதிரத்தையும், தனக்கும் சீதைக்கும் நடந்த சில உரையாடல்களையும் தெரிவித்து அனுப்பினார்.
முதல் வழிபாடு
சீதையுடன் ராமர் திரும்பி வருவையில் ராமேஸ்வரத்தில் ராவணனை வதம் செய்த தோஷம் நீங்குவதற்காக சிவலிங்கம் அமைத்து வழிபட்டார். காசியில் இருந்து அனுமன் லிங்கம் எடுத்து வர கால தாமதமானதால் சீதாதேவி பிடித்து வைத்த மணல் லிங்கமே பிரதான லிங்கமாக இருப்பினும் அனுமன் கொண்டு வந்த லிங்கத்திற்கே முதல் வழிபாடு நடைபெறுகிறது.
ராமேஸ்வரத்தில் சிவலிங்க வழிபாடு செய்த பின்னர் அயோத்திக்கு திரும்பி சென்று ராமருக்கு பட்டாபிஷேகம் நடந்து சிறப்பாக ஆட்சி செய்தார். அதன் பின்னர் அவதார நோக்கம் முடிவடைந்தும் ராமர் வைகுண்டம் திரும்பியபோது அனுமன் வைகுண்டத்திற்கு செல்ல விரும்பாமல் பூலோகத்தில் ‘ராம நாமத்தை’ இன்றும் கூறிக்கொண்டே இருக்கின்றார்.
பரிகாரம்
அனுமனுக்கு வெண்ணெய், துளசி ,வடை மாலை சாற்றி வழிபடுவது மிகவும் சிறப்பாகும். உளுந்து வடை ராகுவுக்கு மிக பிடித்தமானது என்பதால் இந்த வடை மாலையை அனுமனுக்கு அணிவிப்பதன் மூலமாக ராகு தோஷத்தில் இருந்து நிவர்த்தி பெறலாம். அனுமனை வணங்குபவர்களுக்கு சனி கிரகத்தாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது.