தைமாத முக்கிய விஷேஷ தினங்கள்
தை 1 (15-01-2024) : தை மாதப் பிறப்பு
உத்தராயணப் புண்ணிய காலம் – மகரசங்கராந்தி, பொங்கல் பண்டிகை. புதுப்பானையை அலங்கரித்து, முகூர்த்த நேரத்தில், பொங்கல் வைத்து, சூரிய பகவானுக்கு நைவேத்தியம் செய்து, பூஜிக்க வேண்டும்.
தை 2 (16-01-2024): மாட்டுப் பொங்கல்.
பசுக்கள், கன்றுகள், காளைகள் ஆகியவற்றை குளிப்பாட்டி, அலங்கரித்து,
உணவளித்து, கற்பூர ஆரத்தி காட்டி,பூஜிக்க வேண்டிய புண்ணிய தினம். மேலும் அன்றைய தினம் சஷ்டி விரதம், விரதமிருந்து, முருகப் பெருமானைப் பூஜிக்க வேண்டிய புண்ணிய தினம். சஷ்டியன்று விரதமிருந்து முருகப் பெருமானை, பக்தி – சிரத்தையுடன் பூஜித்தால், பெண்களின் அகப் பையாகிய கருப்பையில் கரு உண்டாகும் என்பதையே, “சட்டியில் இருந்தால், தானே அகப்பையில் …! ” என்று மருவியது.
தை 3 (17-01-2024) : காணும் பொங்கல்.
பெரியோர்களைக் கண்டு வணங்கி, அவர்களின் ஆசியைப் பெறவேண்டிய புனித தினம்.
தை 11 (25-01-2024) : தைப் பூசம்.
விரதமிருந்து, முருகப் பெருமானை பூஜிக்க வேண்டிய மகத்தான புண்ணிய தினம். வடலூரிலுள்ள வள்ளலார் தர்ம ஞான சபையில் உள்ள ஏழு வண்ணத் திரைச்சீலைகள் விலக்கப்பட்டு, கண்ணாடிக்குப் பின் உள்ள ஜோதி தரிசனம் கண்டருளப்படும். வாடிய பயிரைக் கண்ட போதெல்லம் வாடிய வள்ளலாரை மனத்தால் வணங்கி, ஏழை – எளியோர்களுக்கு அன்னதானம் செய்வித்தால், மகத்தான புண்ணிய பலன்களைப் பெற்று, வாழ்வில் இக – பர சுகங்களைக் குறைவின்றி அனுபவிக்கலாம்.
தை 16 (30-1-2024) :
பரம ஸ்ரீ ராம பக்தரான திருவையாறு ஸ்ரீதியாகராஜ ஸ்வாமிகளின் ஆராதனை தினம்.
தை 17 (31-1-2024) :
திருவண்ணாமலை மகான், சேஷாத்திரி
ஸ்வாமிகளின் ஜெயந்தி.
தை 19 (02-02-2024):
ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் அவதரித்த ஸ்வாதி திருநட்சத்திரம். லட்சுமி நரசிம்மர் திருவுருவப் படத்தை வைத்து, அரிசிமாவினால் கோலமிட்டு, நெய்தீபம் ஏற்றி வைத்து, வெல்லம், ஏலக்காய்,சுக்குப் பொடி சேர்த்த பானகம் அமுது செய்வித்து, துளசிதளத்தால் அர்ச்சித்து, 9 முறை வலம் வந்து நமஸ்கரித்தால், இடர் ஏதுமில்லா நல்வாழ்வையும், ஏவல், பில்லி சூனியம் போன்றவற்றால் எவ்வித பாதிப்பும் நமக்கு ஏற்படாது.
தை 26 (09-02-2024) : தை அமாவாசை
மறைந்த பித்ருக்களை, (நம்முடைய மூதாதையர்) பூஜிக்க வேண்டிய புண்ணிய தினம்.
தை 27 (10-02-2024) : மகா ஸ்நானம் ஆரம்பம்.
இன்றைய தினத்திலிருந்து, முப்பது நாட்களும், நதிகளில் நீராடவும், பரிகாரங்களைச் செய்வதற்கும் உகந்த நன்னாட்கள். இந்தநாட்களில் செய்யப்படும், பூஜைகளும், பரிகாரங்களும், வேதாத்யானமும், யோகாப்பியாஸமும் தொடங்கினால், பன்மடங்காகப் பெருகி, எண்ணிலடங்கா நற்பலன்களை அள்ளித் தர வல்ல சிலாக்கியமான நாள்.
தை 28 (11-02-2024) :
“புவியில் ஜனித்துள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் குல தெய்வமாக இருந்து, அருள்பாலித்து வருவேன்!” என்று சத்திய பிரமாணம் செய்வித்து, இந்நாள் வரையில் சொன்ன சொல்லை விரதமாகக் கடைபிடித்துவரும்,ஸ்ரீவாசவி தேவி அக்னி பிரவேசம் செய்து, அதனின்று ஜொலிக்கும் புடம் போட்ட – அக்னியிலிட்ட ஸ்வர்ணத்திற்கு இணையான பிரகாசத்துடன் ஆவிர்பவித்து, அனைத்து பக்தகோடிகளும் காணும் வண்ணம் அருள்பாலித்து, “அனைவரும், சத்தியத்தையும், தர்மத்தையும், ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்க வேண்டும்!” என்று உபதேசித்தருளிய, பார்வதி தேவியின் அம்சமான ஸ்ரீ வாசவி தேவி, தனது அருட்கடாநசத்தைப் பொழிந்திட்ட புண்ணிய தினம். வாசவி தேவி அன்னையை வாயினால் பாடி, மனத்தினால் சிந்திப்போர்க்கு, துன்பங்கள் அனைத்தும் அகலும்; சந்ததியினரின் வாழ்வில் மகிழ்ச்சிக்குக் குறைவிராது என்பது நிதர்சன உண்மையாகும். நினைத்தது யாவும் எவ்விதத் தடங்கலும் இன்றி, மனம்போல் நிறைவேறும்.
தை 29 (12-02-2024) : வரகுந்த சதுர்த்தி.
இன்றைய தினத்தில், பிரதோஷ காலமாகிய மாலை 5.30 மணியிலிருந்து 7.30 மணிக்குள்ளாக, சிவலிங்கத் திருமேனிக்கு, வெண்புஷ்பங்களால், வெண்தாமரை, மல்லிகை, முல்லை, வெண் சங்குப் பூக்கள், தும்பை மலர்களைக் கொண்டு அர்ச்சித்தாலும், தேன், கரும்புச்சாறு, பசும்பால், இளநீர், அரைத்த சந்தனத்தால், பக்தி – சிரத்தையுடன், அபிஷேகம்பி செய்வித்தாலும், சகலவிதமான விக்னங்களும், தடைகளும் விலகி, காரிய சித்தி உண்டாகும்; அனைத்து அபிலாஷைகளும் நிறைவேறி, உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சியும், மனநிறைவும் கண்கூடாகக் காண்பீர்கள்.