கடக லக்னம்
ராசி மண்டலத்தில் நான்காவதான கடகம் கால புருஷனின் இருதயத்தைக் குறிக்கிறது. இது நீர்தத்துவத்தைச் சேர்ந்தது. ஆகையால் ஜலராசியும் சர”ராசியுமான இது இரட்டைராசி அல்லது பெண் ராசி ஆகும். இது கால் பக்கமாக உதயமாவதால் பிருஷ்டோதய ராசி எனப்படும். இது இரவில் பலமுள்ள ராசி. இதன் அதிபதி சந்திரன்; அரசகிரகமாகும்.
இது வடக்குத் திசையைக் குறிக்கும், இங்கு குரு உச்சம் பெறு கிறார். செவ்வாய் நீசம் பெறுகிறார். இதில் அடங்கி யுள்ள நட்சத்திரங்கள் புனர்பூசம் 4ஆம் பாதம், பூசம், ஆயில்யம் ஆகியவை.
கடக லக்ன பலன்
இந்த லக்னத்தில் பிறத்தவர்கள் சுறு சுறுப்பானவர்கள். எடுத்த காரியத்தைத் திட்டப்படி முடிக்கும் சாமர்த்தியமுள்ளவர்கள். உழைக்க அஞ்ச மாட்டார்கள். தமது கொள்கையை வீட்டுக் கொடுக்க மாட்டார்கள். எதிர்ப்புகளைக் கண்டு பின்வாங்க மாட்டார்கள்.
இரக்க குணமும், சாந்தமும், அமைதியும் கொண்டவர்கள். ஆனாலும் எளிதில் உணர்ச்சி வசப் படக்கூடியவர்கள், யாருடனும் எளிதில் பழகமாட்டார்கள். பழகிய பின் விலகமாட்டார்கள். ஆழ்ந்து சிந்தித்து முடிவு எடுப்பார்கள். முடிவு எடுத்த பின் பின்வாங்க மாட்டார்கள். நல்லவருக்கு நல்லவர். இவரை ஏமாற்ற நினைத்தாலோ, இருவக்கு எதிராக நடந்து கொண்டாலோ விடமாட்டார்கள்.ஒடுக்கியே தீருவார்கள்.
ஞாபக சக்தி அதிகம். விஷயங்களை எளிதில் கிரகித்து மனத்தில் பதியவைத்துக்கொள்வார்கள். பொதுவாக முன் வயதில் கஷ்டப்பட்டாலும் பின் வயதில் நிறையச் சம்பாதித்துச் சந்தோஷமாக வாழ்வார்கள். தெய்வபக்தி உள்ளவர்கள், நேர்மையானவர்கள். சங்கீதம், நடனம் போன்ற கலைகளில் ஈடுபாடு உள்ளவர்கள். வாக்குத் தவறாதவர்கள் இவர்கள். பெரும்பாலும் தந்தை காலத்திற்குப் பின் பிரகாசிப்பார்கள்.
கிரகங்களின் ஆதிபத்ய பலன்கள்
சூரியன்
குடும்ப ஸ்தானமான 2-ம்வீட்டுக்குடையவன். சர லக்னத்திற்கு 2-ம் இடம் மாரகஸ் தானமான தால் மாரகாதிபதி என்ற தோஷத்தைப் பெறுகிறார். ஆனால் இவர் மாரகம் செய்ய மாட்டார் என்பது ஏகோ பித்த கருத்து.
குடும்பம், வாக்கு, தனம், கல்வி, கீர்த்தி, வலது கண் ஆகிய முக்கியமானவற்றிற்குக் காரக மேற்கிறார். ஆகையால் இவர் வலுக்க வேண்டும்.
சூரியன் 2-ல்ஆட்சியானால் பேச்சுத்திறமை, உயர்ந்த கல்வி, தனவசதி, நல்ல குடும்பம், புகழ் ஆகியவற்றை அளிப்பார்.
இவர் 10-ல் உச்சம் பெற்றால் அரசாங்க உத்தியோகம், அரசு மூலம் ஆதாயம், புகழ்: அரசியலில் முன்னேற்றம் ஆகிய நற்பலன்களை அளிப்பார், பொதுவாக சூரியன் வலுத்தால் 2-ம் இடத்திற்கு உண்டான பலன்கள் ஏற்றம் பெறும்.
அதிகாரம், பதவி, புகழ் ஆகியவற்றை அளிப்பார். இவர் கெட்டால் பொருளாதார நெருக்கடி, உத்தி யோகம் அல்லது அரசியலில் பிற்போக்காள நிலை ஏற்படும். குடும்பத்தில் கஷ்டங்களும், குடும்பத்தை விட்டுப் பிரிதல் போன்ற 2ம் இடத்துக்கும் சூரியனுக்கும் சொல்லப்பட்டவை கெடும்.
பொதுவாக லக்கினாதிக்கு தண்பரான இவர் 1,2,5,9,10,11ல் இருப்பது நலம் என்று சொல்லலாம்.
சந்திரன்
லக்னாதிபதியானதால் சுபகிறார்.
இவர் தேக சுகம், புகழ், சுய உழைப்பால் ஜீவித்தல், தனம், அறிவாற்றல் ஆகியவைகளுக்குக்காரகராகிறார். சந்திரன் தாய்க்குக்காரகர். ஆகையால் அன்பின் அவதாரம், இவர் வலுக்க வேண்டும். வலுத்த சந்திரன் மூலம் லக்கினத்தின் பலன்கள் ஏற்றம் பெறும், மக்களி டத்தில் நல்ல பெயர். நல்ல தொழில், புத்திக் கூர்மை ஆகிய சுப பலன்களை அளிப்பார்.
இவர் கெட்டால் உடல் நலம்கெடும். மார்பு, ரத்தம் சம்பந்தப்பட்ட வியாதிகள் தொந்திரவு கொடுக்கும். அபகீர்த்தியும் எதிர்ப்புகளும் ஏற்படும். வளர்பிறைச் சந்திரன் சுபர், சுபரானதால் இவர் மறைவது நல்லது என்ற கருத்தும் உண்டு. இவர் 11ல் உச்சம் பெறுவது மிகவும் நல்லது.
செவ்வாய்
5-ம் இடமான கோணத்திற்கு 10 இடமான கேந்திரத்திற்கும் அதிபதியாவதால் பூரண ராஜயோககாரகராகிறார். இவர் வலுக்க வேண்டும். இவர் 5-ல் ஆட்சியானல் புத்திரவிருத்தி, பிள்ளைகளால் ஆதரவு, எழுத்தாற்றல், சாஸ்திர ஆராய்ச்சி, சொற்பொழிவாற்றுதல் ஆகியவைகளை அளிப்பார்.
இவர் 10-ல் ஆட்சி பெற்றால் விலகாதலக்ஷ்மிகடாக்ஷம், உயர்ந்த பதவி, ஜனங்களால்போற்றப்படல், குலப்பிர சித்தி, ராணுவம் அல்லது போலீஸ் அதிகாரி ஆகிய ராஜயோக பலன்களை அளிப்பார். இவர் உச்சம் பெறச் சந்திரன் ஆட்சியானாலோ அல்லது சந்திரன் உச்சம் பெற, அவருக்கு 7-ல் அதாவது விருச்சிகத்தில் செவ்வாய் ஆட்சியானாலோ, சிறந்த தனயோகமாகும்.
இவர் கடகத்தில் நீசமானாலும் 10-க்கு 4ஆம் இடமாகவும், 5-க்கு 9ஆம் இடமாகவும் அமைவதால் சுபபலன்களை அளிப்பார்.
இவருடன் உச்ச குரு சேர்ந்தால் சிறந்த ராஜயோக பலளை அளிப்பார்.
மற்ற கிரகங்கள் கெட்டிருந்தாலும்,செவ்வாய் மட்டும் வலுத்தால் போதும், 40 வயதுக்கு மேல் யோகம் ஏற்படும்.
இந்த லக்னத் திற்கு இவர் எங்கிருந்தாலும் செவ்வாய் தோஷம் ஏற்படாது.
ராணுவம், காவல், அரசு அலுவலகம், தபால், தந்தி இலாக்கா, மின்வாரியம், வீட்டுவாரியம், பொதுப்பணித்துறை, தொழிற்சாலை, பொறியியல் ஆகிய துறைகளில் பணிபுரியும் வாய்ப்பினை அளிப்பார். டாக்டர், இன்ஜினீயர், கிராம அதிகாரி, மாவட்ட அதிகாரி, (Collector) ஆகிய பதவிகளும் பெறலாம்.
புதன்
3,12-க்குடைய புதன் பாபியாகிறார். 3ஆம் இடம் இவருக்கு மூலத்திரிகோணமாகிறது. 3ஆம் இடம் தைரியம், வெற்றி, இளைய சகோதரம், ராணுவம், நண்பர்கள், வேலையாள், பராக்கிரமம் ஆகியவைகளைக் குறிப்பதால் இவர் 3-ல் ஆட்சிபெற்றால் மேற்படி காரகங்கள் விருத்தி பெறும்.
மற்றபடி பாபியான இவர் கெட்டால் தனம், வீடு, தைரியம் ஆகியவை விருத்தி, பெறும். இவர் 5, 7, 9 அல்லது 10-ல் இருந் தால் கல்வியும் எழுத்தாற்றலும் விருத்தி பெறும்.
11-ல் இருந்லால் 12ம் ஆதிபத்தியத்தின் கெடுபலன்கள் நீங்கும். இவர் வலுத்தால் சகோதரபாவம் வலுக்கும். ஆனால் அவர்களால் நன்மை ஏற்படாது.
குரு
6க்கும் 9க்கும் அதிபதியான குருசுபராகிறார். 5ம் இடமான தனுசு மூலத்திரிகோண ஸ்தானமானாலும் 9ஆம் இடம் வலுத்தகோணமானதால் சுபஆதிபத்தியமே ஓங்கி இருக்கும். இவர் வலுத்தால் நல்லது. இவர் 2ம் இடத்திலிருந்தால் சிறந்த பேச்சாளராகும்யோகத்தை அளிப்பார்.
இவர் கெட்டால் கஷ்டங்கள் ஏற்படும். பொதுவாக இவர் செவ்வாயுடன் சேர்ந்தால் தான் ராஜயோகத்தை அளிப்பார். பிதா, சத்துரு ஆகிய இரண்டு இடங்களுக்கும் ஆதிபத்தியம் பெறுவதால் தந்தை காலத்திற்குப் பிறகு ஒகோவென்று. முன்னேறுவார்கள்.
வலுத்த குருவால் 9ஆம் இடத்தில் பலன்கள் விருத்தியடையும்..
சுக்கிரன்
4.11 ஆகிய இரண்டு இடங்களுக்கும் அதிபதி ஆகிறார். 11ஆம் இடப் பாதகஸ்தானமான தானாலும் 4ஆம் இடம் கேந்திரமானதாலும் பாபி ஆகிறார். இரண்டு இடங்களும் முக்கியமானவைகளைக் குறிக்கின்றன. பொதுவாகப் பாபியானதால் இவர் கெடுவது நல்லது என்பது கருத்து.
லாபாதிபதி-மகாலக்ஷமியை அதிதேவதையாகக் கொண்டவர். இவர் கெட்டால் பாதகாதிபத்தியம் கெட்டு உடல் நலம் நன்றாத இருக்கும். ஆனால் பொருளாதாரம் நன்றாக இருக்காது. இவர் வலுத்தால் ஆரோக்கியம் பாதிக்கப்படும். ஆனால் பொருளாதாரம் நன்றாக இருக்கும்.
பொது வாக எந்த லக்னத்திற்கும் பாதகாதிபதி திரிகோண ஸ்தானம் பெற்றால், பதாகாதிபத்திய தோவும் நீங்கி யோகத்தைக் கொடுப்பார் எனபது புலிப்பாணியின் கருத்து.
இவர் 5 என்பது அல்லது 9ல் இருப்பது நலம். பொருளாதாரம் நன்றாக இருக்கும்.
2 அல்லது 12 லில் இருந்தாலும், புதனுடன் 12லும், சூரியனுடன் 5இல் இருந்தாலும் யோகமாகும்.
என் அனுபவத்தில் கடக லக்னகாரர்களுக்கு தாய் சுகம் சோபிப்பதில்லை.
சுக்ர தசை சனி புத்தியிலும், சனி தசை சுக்ர புத்தியிலும் ஆரோக்கிய பிரச்சினைகள் இருக்கும்.
சனி
சப்தம அஷ்டமாதிபதி சனி, இரண்டு அசுப ஸ்தானங்களுக்கு அதிபதியாகிறார். ஆயுள்காரகனான இவரே ஆயுள் ஸ்தானத்திற்கும் அதிபதி, அதே சமயம் சரலக்னத்திற்கு 7ம் இடம் மாரகஸ்தானமானதால் இவரே வலுத்த மாராதிபதியும் ஆகிறார்.
ஒன்றுக் கொன்று நேர் எதிரான ஆதிபத்தியங்கள் 7ல் இருந்தால் லக்னத்தைப் பார்ப்பார். 8ல் இருந்தால் ஆயுள் ஸ்தானாதிபதி ஆட்சி, ஆகையால் இவர் மாரகம் செய்யமாட்டார். இவர் 7ல் ஆட்சியானால் பதிபக்தியும் பெரியோர்களுடன் மரியாதையும் பக்தியுமுள்ள மனைவி வாய்ப்பாள்.
மற்ற இடங்களிலிருந்தால் மண வாழ்க்கை குறையுள்ளதாகவே அமைகிறது. இவர் 8ல் ஆட்சியானால் நீண்ட ஆயுள், பொருளாதார மேன்மை, வாழ்க்கை வளம் ஆகிய நற்பலன்களை அளிப்பார்.
இவர் 3, 5, 6, 8, 11ல் இருக்க நல்லது.
சுபர் அசுபர் விளக்கம்
சுபர்
லக்னாதிபதியான சந்திரன் சுபராகிறார்.
செவ்வாய் பஞ்சம ஸ்தானமான 5க்கும் தசம ஸ்தானமான 10க்கும் உடையவர். ஆனதால் சுபராகிறார்.
குரு 9ம் ஆதிபத்தியம் பெற்றதால் சுபர்.
பாபி
புதன், 3, 12 ஆகிய இரு கெட்ட இடங்களுக்கும் ஆதிபத்தியம் பெற்றதால் பாபி.
சுக்கிரன் 4ல் ஆதிபத்தியத்தால் கேந்திராதிபத்திய தோஷமும் 11 ஆதிபத்தியததால் பாதகாதிபத்தியமும் பெற்றதால் பாபியாகிறார்.
சனி மாரகஸ்தானாதிபத்தியமும் அஷ்டமாதிபத்தியமும் பெறுவதால் அசுபர் என்று தாண்டவமாலை விளக்க ஆசிரியர் கூறுகிறார்.
யோகாதிபதி
செவ்வாய்
5,10க்குடையவர், கேந்திரம் கோணம் இரண்டு ஆதிபத்தியங்களும் ஒரே கிரகத்திற்கு வந்தால் அவர் பூரண ராஜ யோகத்தை அளிப்பார்.ஆகையால் பூரண யோகாதிபதி.
குரு
9ம் ஆதிபத்தியம் பெறுவதால் இவரும் யோகாதிபதியே.
சுக்கிரன்
பெரும்பாலான நூல்கள் சுக்கிரன் பாபி என்றே விவரிக்கின்றன’ காளிதாசர் தமது ஜாதக சந்திரிகாவில், சுக்கிரன் ஒருவனே யோகத்தைத் தருபவன் என்கிறார்.
பாவார்த்த ரத்னாகராவில் சுக்ரன் 2 அல்லது 12ஆம் இடத்தில் இருந்தால் யோகத்தை தருவார் என்று கூறுகிறார். புதனும் யோகம் தருவார் என்கிறார்.
மாரகாதிபதி
சூரியன் 2ம் வீட்டுக்குடையவர் ஆனதால் மாரக ஸ்தானாதிபதி என்ற முறையில் மாரகர். ஆனால்
ஒரே வீட்டுக்குடையவரானதாலும் சந்திரனுக்கு நட்பு கிரகமானதாலும் கொல்லமாட்டார்.
சனி
சர லக்னத்திற்கு மாரகஸ்தானமான 7க்குடையவரானதால் மாரகாதிபதி. ஆனால் ஆயுள்காரகனும்ஆயுள் ஸ்தானாதிபதியுமானதால் கொல்ல மாட்டார். ஆகையால் பாதகாதிபதி சுக்கிரனும் 3க்குடைய புதனுமே மாரகாதிபதிகள், சந்திரனுக்கு விரோதியானதாலும் இயற்கையில் சனியின் பலனைக் கொடுப்ப வராதலாலும் ராகுவும் மாரகாதிபதியாவார்.
முக்கிய நிகழச்சிகள் நேரும் காலம்
மாதுர்தோஷம்
சூரிய தசை-சனி, சுக்கிர புக்திகள்.
புத தசை-கேது,சுக்கிரபுக்திகள்.
கேது தசை -கேது, சுக்ரன், ராகு,சனி, புத புக்திகள்.
மேற்படி தசாபுக்திகளில் மாதாவுக்குப் பீடையோ அல்லது மரணமோ அல்லது மாதவிடாய் மனஸ்தாபமோ பிரிவினையோ நேரலாம்
தந்தைக்கு கண்டம்
குரு தசை- புதன், சூரியன், ராகு புத்திகள்.
ராகு தசை – ராகு, சனி, சுக்கிரன் புத்திகள்.
சனி திசை – சனி, சுக்கிரன், ராகு புத்திகள்.
கேது தசை – சுக்கிரன், சனி புத்திகள்.
மேற்படி தசா புத்திகளில் பிதாவுக்கு கஷ்ட நஷ்டங்கள் கண்டாதப் பிணிகள் அல்லது பிதாவுடன் மனஸ்தாபமோ பிரிவினையோ ஏற்படலாம்
திருமணம் நடைபெறும் காலகட்டம்
குருதசை- குரு, சுக்கிரன், சந்திரன் புத்திகள்.
சந்திர தசை- குரு, சுக்கிரன், சந்திரன் புத்திகள்.
சூரியதசை- குரு, சுக்கிரன், சந்திரன் புத்திகள்.
சனி திசை- சுக்கிரன், சந்திரன், குரு புத்திகள்.
செவ்வாய் திசை- குரு, சுக்கிரன், சந்திரன் புத்திகள்.
மேற்கண்ட தசா புத்திகளில் திருமணம் நடக்க ஏற்ற காலங்கள்.
மனைவிக்கு கண்டம்
கேது தசை -சுக்கிரன், ராகு, குரு புத்திகள்.
குருதசை- குரு, சுக்கிரன், சந்திரன் புத்திகள்.
சனி திசை- சுக்கிரன், சந்திரன், குரு புத்திகள்.
சந்திர தசை- சந்திரன், குரு ,சுக்கிரன் புத்திகள்.
ராகு தசை- குரு ,சுக்கிரன், சந்திரன் புத்திகள்.
புதன் தசை- சுக்கிரன், சந்திரன், குரு புத்திகள்.
மேற்படி தசா புத்தி காலங்களில் மனைவிக்கு கண்டாதி பிணிகளோ மரணமோ அல்லது மனைவியுடன் மனஸ்தாபமோ பிரிவினையோ ஏற்படலாம். மேற்படி தோஷம் சொல்லப்பட்டுள்ள காலங்களில் திருமணமும் நடந்து கெடுபலன்கள் நேரலாம்.
குழந்தை பிறக்கும் காலகட்டம்
செவ்வாய் தசை- குரு, சுக்கிரன், சந்திரன் புத்திகள்.
ராகு தசை -, சூரியன், சந்திரன், செவ்வாய் புத்திகள்.
குருதசை- குரு, சூரியன், சந்திரன், ராகு புத்திகள்.
சனி திசை- சனி, சுக்கிரன், சந்திரன், ராகு புத்திகள்.
சுக்கிர திசை – சந்திரன், குரு, சனி புத்திகள்.
மேற்படி தசா புத்திகளில் மகப்பேறு கிட்டலாம். புத்திநாதர்கள் தசையில், தசாநாதன் புத்தியும் அனுகூலமான காலமாகும்.
குழந்தைக்கு கண்டம்
செவ்வாய் திசை- ராகு, சனி, சூரியன் புத்திகள்.
ராகு திசை -ராகு, சனி, சூரியன் புத்திகள்.
குரு தசை- சனி, சூரியன், ராகு புத்திகள்.
சனி திசை- சனி, சூரியன், ராகு புத்திகள்.
சுக்கிர திசை- சனி, சூரியன், ராகு புத்திகள்.
மேற்படி தசா புத்திகளில் புத்திரர்களுக்கு கஷ்டமோ கண்டாதி பிணியோ மரணமோ அல்லது பிரிவினையோ ஏற்படலாம்.
உடன்பிறப்புகளுக்கு கண்டம்
ராகு தசை- ராகு, சுக்கிரன், சனி, செவ்வாய் புத்திகள்.
சனி திசை -, செவ்வாய், ராகு புத்திகள்.
புதன் தசை -சுக்கிரன், சூரியன், ராகு புத்திகள்.
முதலிய காலங்களில் சகோதரருடன் பகையோ பிரிவினையோ அல்லது சகோதரனுக்கு தோஷமோ ஏற்படலாம்.
மரணம் மற்றும் கண்டம் ஏற்படும் காலங்கள்
சுக்கிர திசை – ராகு, சனி, கேது புக்திகள்.
புதன் தசை- கேது, ராகு, சனி புத்திகள்.
சனி திசை- கேது, சுக்கிரன், குரு புத்திகள்.
ராகு தசை- குரு, கேது, சுக்கிரன் புத்திகள்.
சூரிய திசை – குரு,கேது, சுக்கிரன் புத்திகள்.
தசா புத்திகளில் மரணமோ அல்லது மரணத்துக்கு சமமான கண்டங்களோ நேரலாம்.
மிக யோகமான காலகட்டங்கள்
சனி திசை- முன்பாதி
கேது திசை -கேது ,சந்திரன், செவ்வாய் புத்திகள்.
சுக்கிர திசை -சந்திரன், செவ்வாய், புதன் புத்திகள்.
சந்திர திசை- குரு, சனி, சுக்கிர புத்திகள்.
ராகு தசை- குரு, புதன், சுக்கிர புத்திகள்.
குருதசை -சனி, சந்திரன், செவ்வாய், ராகு புத்திகள்.
இக்காலங்களில் சுபயோக பலன்கள் நடைபெறும்
யோகம் தரும் கிரக அமைப்புகள்
புதன் யோக பலனை அளிப்பார் என்று பாவார்த ரத்னகராவில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் எப்படி இருந்தால் என்று சொல்லவில்லை.பொதுவாக 3-க்குடையவர் 1,3,4,9,10, 11ம் இடங்களில் இருந்தால் நல்ல பலன்களை அளிப்பார்.
சுக்கிரன் 12 அல்லது 2ல் இருந்தால் யோகம்.
சந்திரன், செவ்வாய், குரு மூவரும் 2லும் சூரியனும்,சுக்கிரனும் 5லும் இருக்க வெகுதன யோகம்
புதன் சுக்கிரனுடன் சேர்ந்து 5ல் இருந்தால் தன் தசையில் யோகத்தை அளிப்பார்.
சந்திரன்,புதன், சுக்கிரன் மூவரும் 11-ல் இருக்க லக்னத்தில் குருவும், 10-ல் சூரியனும் இருந்தால் நாடாளும் யோகம்.
சூரியன், செவ்வாய், குரு ,சனி நால்வரும் உச்சம் பெற்றால் ராஜ யோகம்.
11-ல் சூரியனும் சந்திரனும், 4ல் சனி,5ல் குரு இருக்க 7ல் செவ்வாய் ராஜயோகம்.
1,4 ,7 ,10 ஆகிய கேந்திரங்களில் கிரகங்கள் இருந்தால் ராஜயோகம்.
சந்திரன், சூரியன், சுக்கிரன் மூவரும் உச்சமானால் வெகு நிலத்திற்கு அதிபதி ஆவான்.
குருவும் செவ்வாயும் சேர்ந்து 1,4,5,9,10 ஆகிய இடங்களில் எங்காவது இருந்தால் ராஜயோகம்.
குருவும், சந்திரனும் சேர்ந்து 1அல்லது 9ல் இருக்க யோகம்.
குரு 1,4,5,9,10 ஆகிய இடங்களில் எங்காவது இருந்தால் யோகம்.
3ல் புதன் உச்சமாக,4ல் சுக்கிரனும் சனியும் இருக்க, சந்திரன் ஆட்சியோ, உச்சமோ பெற்றால் கல்வி யோகம்.
சூரியன், செவ்வாய், குரு, சந்திரன் நால்வரும் உச்சமாக, குருவுடன் சந்திரனும் சேர்ந்தால் வெகு யோகம். குரு உச்சமாக மற்றவர்களில் இருவரோ அல்லது ஒருவரோ உச்சமானாலும் யோகம் உண்டு. ஆனால் குறைந்த யோகம்.
குருவும், செவ்வாயும் கூடினால் ராஜயோகம்.
சந்திரனும் செவ்வாயும் உச்சம் பெற 2ல் சூரியனும், 9ல் குருவும் ஆட்சியானால் யோகம்.
உதாரண ஜாதகம்
லக்னாதிபதி ஆட்சி, 10க்குடையவர் செவ்வாய் 3ல் இருந்து 9 10-ம் இடங்களை பார்க்கிறார். சனி 2ல் இருந்து குருவால் பார்க்கப்படுகிறார். உலகப்புகழ் பெற்ற சிறந்த பேச்சாளர்.
கிரகமாலிகா யோகம், காலசர்ப்ப யோகம், 10-ஆம் இடத்திற்கு குரு செவ்வாய் 4க்குடையவர் பார்வை.