கருட புராணம்
ஒருவனுக்கு மரணம் நிகழும் வேளையில் என்னென்ன நிகழும் என்றால் ,
- மரிப்பவனின் உடல் அங்கங்கள் தன் சக்தியையும் உணர்வையும் இழக்கத் தொடங்கும்.எமதூதர்கள் அவன் அருகில் வந்து நிற்க , அவனது சுவாசம் உடலைவிட்டு வெளியேறுகிறது . அவ்வாறு வெளியேறிய ஆத்மா , தெய்வீகப் பார்வைத் திறனைப் பெற்று , பிரபஞ்சம் முழுவதையும் ஒரே நேரத்தில் கண்டுணரும் ஆற்றலைப் பெறுகிறது.
- மரண விளிம்பில் ஒருவன் மிகவும் பயங்கரமான தோற்றத்தைக் கொண்ட எமனை நேரில் காண்கிறான். சில உயிர்களை எம தூதர்கள் தடியால் அடிப்பதையும் , சில உயிர்களை விஷ்ணுவின் உதவியாளர்கள் நல்ல முறையில் அழைத்துச் செல்வதையும் காண்கிறான்.
- மரணம் நிகழ்ந்த பின் , கட்டைவிரலின் அளவு உடைய ஜீவனானது ஸ்தூல உடலிலிருந்து எம தூதுவர்களால் வெளியே பறிக்கப்படுகிறது.அவ்வாறு வெளியேறிய ஜீவன் , தான் இதுவரை தங்கியிருந்த உடலைப் பார்த்து கதறி அழுகிறது. சுவாசமும் வாழ்வும் இல்லாமல் போன -தன் மனைவி,புத்திரன் மற்றும் உறவினர்களாலும்கூட தீண்டத்தகாதபடி வெறுப்புற வைக்கும் ஜடமாய் மாறிப்போன தன் உடலைப் பார்த்து அது தேம்பி அழுகிறது.
- இதுவரை நான் தங்கியிருந்த இந்த உடலை இனி புழுக்கள் தின்னுமோ , அல்லது அழுகி மலக்குப்பையாக மாறுமோ . அல்லது எரிந்து சாம்பலாய்ப் போகுமோ என்று அந்த ஜீவன் பரிதவிக்கிறது.
- கருடா ! மரணம் வந்த மறுகணமே மனித உடல் அழிவை எதிர்கொண்டாக வேண்டும் . இதுவே விதி ! அத்தகைய நிலையற்ற உடலைப் பற்றி மனிதன் பெருமை பேசிக் கொள்வது சரியா?
- ஒருவன் செல்வத்தைப் பெறுவதன் காரணமே அவன் பிற உயிர்களுக்கு உதவுவதற்குத்தான் ; அவன் பேசும் சக்தியைப் பெற்றிருப்பதே உண்மையைப் பேசுவதற்குத்தான் ; அவன் பெற்ற வாழ்வே இறைஞானம் பெற்று நீங்காப் புகழை அடைவதற்குத்தான் ; அவன் உடலைப் பெற்றிருப்பதே பிறர் மீதான கருணையுடன் நற்செயல்களைச் செய்வதற்குத்தான் . இந்த வழியில் நடந்தே . ஒருவன் நிலையற்ற உடலுக்கு நிலையான நற்கதியைப் பெற்றுத்தர முடியும் . ஆனால் உலகில் வாழும் காலத்தில் இதனை மனிதன் நினைத்துப் பார்க்கிறானா ?
- வாழும் காலத்தில் அளவில்லாத தீமைகளைச் செய்யும் ஒருவனின் உயிரைப் பறித்துச் செல்லும் எமதூதர்கள் . அவன் நரகத்தில் அடையப் போகும் துன்பங்களை வழிநெடுக விவரித்துச் செல்கிறார்கள் . ‘ ‘ ஓ ! ஜீவனே ! நீ விரைவிலேயே நரகத்திற்குக் கொண்டு செல்லப்படுவாய் . அங்கே கும்பிபாகம் முதலிய கொடிய தண்டனைக்கு உள்ளாக்கப்படுவாய் . அவற்றை எதிர்கொள்ளத் தயாராயிரு ! ” என்று எமதூதர்கள் கூறுவதையும் , தன் உடலைப் பார்த்து தன் உறவினர்கள் துக்கத்தோடு நிற்பதையும் கண்ட ஜீவன் , தன் நிலையை நினைத்து கேவி அழுகிறது .
தொடரும்…..