குரு பெயர்ச்சி பலன்கள் (Guru Peyarchi Palangal) – தனுசு
சித்திரை மாதம் 9ம் தேதி (22.04.2023) சனிக்கிழமை, உதயாதி நாழிகை 43:30 அதாவது இரவு 11: 27 மணிக்கு ரேவதி நட்சத்திரம் 4ம் பாதம் மீன ராசியில் இருந்து அஸ்வினி நட்சத்திரம் 1ம் பாதம் மேஷ ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி அடைகிறார்.
குரு பகவானின் அருள் பெற்ற தனுசு ராசி அன்பர்களே!!! வரும் குரு பெயர்ச்சி உங்களுக்கு எப்படிப்பட்ட பலன்களை வழங்கப் போகிறது என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
குருபகவான் உங்கள் ராசி மற்றும் 4-ம் இடத்துக்கு அதிபதி ஆவார். இப்போதைய பெயர்ச்சியில் உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5-வது இடத்திற்கு செல்கிறார். அவருடைய சிறப்பு பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே பாக்கிய ஸ்தானம் (9-மிடம் ) லாபம் (11-மிடம்) ஜென்ம ராசி (1மிடம்) ஸ்தானங்களில் பதியும்.
குருபகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்துக்கு வருகிறார். ராஜயோகத்தை பெறக்கூடிய ராசிகளில் தனுசு ராசியும் ஒன்று. தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம் இது. கடந்த 4-ம் இடத்து குரு பல மன உளைச்சல்களையும், சங்கடங்களையும் கொடுத்திருப்பார். பணவிரயம், தொழில் நஷ்டம், கையிருப்பு கரைந்து கடனாளி ஆனது என பல துன்பங்களை அனுபவித்து இருப்பீர்கள்.
ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு சஞ்சரிக்கும் காலகட்டத்தில் புத்திர பாக்கியம், தடைபட்ட திருமணங்கள் நிகழ்வுகள், பூர்வீக வழியில் சொத்துக்கள் சேர்க்கை, புத்திரவழியில் சந்தோஷங்கள், எதிர்பாராத பண வரவுகள், கடன் அடைபடுதல், ஆலய தரிசனங்கள், வீடு-மனை, வண்டி, வாகன யோகம், உயர் பதவிகள், மாணவர்கள் உயர் கல்வியில் சிறந்து விளங்கும் அமைப்பு ஆகியன உண்டாகும்.
ஒருவருடைய சுய ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம் வலுவடைந்தால் ஜாதகர் சிறப்பான பல நன்மைகளை அனுபவிப்பார். குழந்தைகள் எதிர்காலம் சிறப்பாக அமையும். குழந்தைகளும் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். குலதெய்வத்தின் ஆசிகள் எளிதில் கிடைக்கும். தங்கு தடையின்றி எதிலும் வெற்றி வாகை சூடுவார்கள்.
குரு பார்வை பலன்கள்
குரு பகவான் ஐந்தாம் பார்வையாக 9-ம் இடத்தை பார்ப்பதால் தந்தை-மகன்(மகள்) உறவு பலப்படும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். விற்பனையாகாத பழைய சொத்துக்களை விற்பனை செய்யலாம். பிரச்சனைகளை எளிதில் பேசி முடிவுக்கு கொண்டு வருவீர்கள். பங்காளி சண்டைகள் முடிவுக்கு வரும். சுப செலவுகள் உண்டாகும். தீர்த்த யாத்திரைகள், வெளிநாடு பயணங்கள் செல்லலாம். விவாகரத்து ஆனவர்களுக்கு மறுமண அமைப்பு தேடி வரும்.
குரு பகவான் ஏழாம் பார்வையாக 11-ம் வீட்டை பார்ப்பதால் எதுவும் லாபகரமாக அமையும். பண சேமிப்பில் ஆர்வம் காணப்படும். மூத்த சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். பயணங்கள் மூலமாக நற்பலன்கள் கிடைக்கும். நண்பர்கள் உதவி செய்வார்கள். கொடுத்த பணம் வசூல் ஆகும். நோய்களிலிருந்து விடுதலை கிடைக்கும். அபார நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகும்.
குரு பகவான் 9-ம் பார்வையாக ஜென்ம ராசியை பார்ப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். சிந்தனை திறன் அதிகரிக்கும். புத்திசாலித்தனமாக செயல்பாடுகள், தன்னிச்சையாக முடிவுகள் எடுப்பது, உடல் எடையை குறைத்து உடற்பயிற்சி செய்து தனது உடலை கட்டுக்குள் வைத்துக் கொள்ளுதல் என பல நன்மைகளை காணலாம்.
பலன் தரும் பரிகாரம்
வாரம் தோறும் வியாழக்கிழமைகளில் குரு ஓரை வரும் நேரத்தில் கோயிலில் இருக்கும் பசுமாடுகளுக்கு வாழைப்பழம், அகத்திக்கீரை, வெல்லம் ஆகியவற்றை உணவாக கொடுக்கலாம். தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்யவும். சித்தர்கள். ஜீவசமாதி அடைந்தவர்களை வழிபாடு செய்யுங்கள். நல்லதே நடக்கும்.















