கோச்சார கிரக பெயர்ச்சிகள் எப்போது பலன் அளிக்கும்?
வருடத்திற்கு ஒருமுறை குரு பெயர்ச்சியும், இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சியும், ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ராகு-கேது பெயர்ச்சியும் நடைபெறுகின்றன.
இதையொட்டி வாக்கிய பஞ்சாங்கம் மற்றும் திருக்கணித அடிப்படையில் பலன்கள் சொல்லப்படும். அவற்றின் அடிப்படையில் வாழ்க்கையில் எவ்விதமான ஏற்றத்தாழ்வுகள் மாற்றங்கள் ஏற்படும் என்பதை அறிந்து கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டுவது இயற்கையே.
கோச்சாரபலன்களான கிரகபெயர்ச்சிகளை விடவும் அவருக்கு நடக்கும் தசா புத்திகள், ஜாதகரை வழிநடத்தும். நல்ல தசாபுக்தி காலங்களில் கோசார பலன்களும் நன்றாக அமைந்துவிட்டால் பெரிய வெற்றி, பணம், பெயர், புகழ் யாவும் கிடைக்கும். அதேபோல் ஜாதக அடிப்படையில் கெடுதியான தசா புத்திகள் வரும் வேளையில் கோச்சார பலன்கள் நன்றாக அமைந்திருந்தால் கெடுபலன்கள் கொஞ்சம் குறையும்.
ஆகவே வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது, ராசிக்கு சொல்லப்படும் கோச்சார பலன்கள் பொதுவானவைதான். சுய ஜாதகத்தில் அவர் தசா புத்திகளின் படிதான் பலன்கள் நடைபெறும். இனி தசா காலங்கள் குறித்த விவரங்களை அறிந்து கொள்வோம்.
தசா காலங்கள்
பிறக்கும் நட்சத்திரத்தின் அடிப்படையில் ஜாதகருக்கு தசா காலம் தொடங்கும். பிறந்த நேரத்தின் படி அமையும் லக்னத்தைப் பொறுத்து தசா இருப்பு கணக்கிடப்படுகிறது. தசா இருப்பில் இருந்து அடுத்து நடக்கும் தசைகளின்படி வாழ்க்கையில் படிப்படியாக மாற்றம் ஏற்படும். தொடர்ந்து நல்ல தசை காலம் அமைபவர்களுக்கு ஆயுள் முழுக்க சந்தோஷம் நிலைத்திருக்கும். எதிர்மறையான தசா காலம் தொடர்ந்து அமைந்தால் பலன்களும் குறைவுபடும்.
இப்படியான குறைபாடுகளையும் தடைகளையும் பெரிதாக எண்ணாமல் வாழ்வின் வெற்றி-தோல்விகளை, ஏற்ற- இறக்கங்களை உள்ளபடியே ஏற்று இறை பக்தியுடன் கர்மம் ஆற்றுவதில் முனைப்பு காட்டி வாழ்வோரை எவ்வித இடர்பாடுகளும் பாதிக்காது.
எது அதிஷ்ட தசை?
‘நேற்றுவரை சோற்றுக்கு வழியின்றி இருந்தார்கள்’ இன்றைக்கு பணம், புகழ், சேர்ந்து விட்டது என்று சிலரைப் பற்றி பேச்சுக்கள் எழும்.இப்படித் திடுமென ஒருவருக்கு அதிர்ஷ்டம் கைகூடுகிறது என்றால் அவருக்கு நல்ல தசா காலம் தொடங்கிவிட்டது என்று அர்த்தம்.
தொழிலதியான 10 ஆம் அதிபதியின் தசா காலம் நடந்தால் அது லாபம் தரும். பதினோராம் அதிபதியின் தசா காலத்தில் ஜாதகர் தொழிலில் திடீர் லாபம் பெறுவார். அதேபோல் லக்னாதிபதி மற்றும் ராசி அதிபதிகளின் தசா காலங்கள் நல்ல யோகத்தை தரும். நான்காம் இடத்து அதிபதியின் தசா காலங்களில் நல்ல வருமானமும், வீடு ,வாகனம் மற்றும் சுக போகங்களும் கிடைக்கும்.
ஐந்து மற்றும் ஒன்பதாம் இடத்து அதிபதிகள் தசா காலங்களில் குழந்தைகள் முன்னேற்றம் காண்பார்கள். அனைத்து விதமான பாக்கியங்களும் கிடைக்கும். ஒருவருக்கு யோக பலன்கள் கைகூட வேண்டும் எனில் தசாஅதிபதிகள் ஆட்சி, உச்சம், அடைந்திருப்பதுடன், சுபகிரகங்களின் பார்வையும், சேர்க்கையும் பெற்று நல்ல நிலையில் இருக்க வேண்டும். இத்துடன் கோச்சார பலன் நன்றாக அமைந்துவிட்டால் சராசரி மனிதனும் கோடீஸ்வரன் ஆகிவிடுவான்.
அதேபோல் இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும் எதிர்மறை பலன்களை அளிக்கும் திசைகளின் அதிபதியானவர் நிற்கும் நட்சத்திர சாரம் யோகமா அமைந்துவிட்டால் திடீர் அதிஷ்டம், விபரீத ராஜயோக பலன்கள் கைகூடும்.
மத்திம பலன்களை தரும் தசா காலங்கள்!
3,6,8,12ஆம் இடத்து அதிபதிகளும் 1,2,4,5,7,9,10,11ஆம் இடத்து அதிபதிகளும் இணைந்து தசா காலங்களில் புத்திகளை பொறுத்து லாபமும் நஷ்டமும் கலந்து கிடைக்கும். உதாரணமாக 3, 9-க்குடையவர் 6, 9-க்குடையவர் 12 9-க்குடையவர் தசை நடந்தால் கிரக புத்தி நிலைகளைப் பொறுத்து வாழ்வில் நன்மை தீமைகள் ஏற்படும்.
எதிர்மறை பலன்களை தரும் தசா காலங்கள்
உயர்ந்த அந்தஸ்தில் வாழ்ந்து கொண்டிருப்பார் திடீரென அவப்பெயரை சந்தித்தல், தொழிலில் நஷ்டம், தீராத பிணிகள் ஏற்பட்டால், கடன் பிரச்சனைஸ் வழக்குகள், தேவையற்ற இழப்புகள் என்று ஏற்பட்டால் குறிப்பிட்ட தசா காலம் அந்த ஜாதகருக்கு 3, 6, 8 ,12-க்குடைய கிரகங்களின் தசா காலமாக இருக்கும்.
3-வது தசா காலம் நீச தசா காலம், 4-வதாக சனிதசை அமைவது, 5-வதாக செவ்வாய் தசை அமைவது,6-வதாக குருதசை அமையும் நிலையும் எதிர்மறை பலன்களை அளிக்கும்.
சிலருக்கு அதிஷ்ட தசா காலம் நடக்கும் தருணத்திலும் கஷ்டங்கள் ஏற்படுகிறது. எனில் தசா அதிபதி பலமற்று திகழ்வார்.அத்துடன் தீய கிரகங்களின் பார்வையைப் பெற்று மறைவிட அதிபதிகளின் நட்சத்திர சாரத்தில் இருப்பார் என்பதை அறியலாம்.
இனி கிரக பெயர்ச்சிகளைப் பார்ப்போம்!
கிரக பெயர்ச்சிகள் பொதுவாக வருடத்திற்கு ஒருமுறை குருவும், இரண்டரை ஆண்டு காலத்துக்கு ஒரு முறை சனியும், ஒன்றரை வருடத்திற்கு ஒரு முறை ராகு-கேது பெயர்ச்சி ஆகின்றனர்.
கிரகங்களில் இவற்றின் பெயர்ச்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதேபோல் சந்திரன் இரண்டு நாள் 6 மணி நேரம், சூரியன் ஒரு மாதம், செவ்வாய் ஒன்றரை மாதம், புதன் ,சுக்கிரன் ஒரு மாதம் என்று கால கணக்குப்படி அடுத்த ராசிக்கு மாறுவார்கள்.
இத்தகைய கோச்சாரத்தில் குரு பகவான் 2, 5 ,7 ,9, 11-ல் இருக்கும் போது நற்பலன்களையும், 1,3,4,10ல்இருக்கும் போது மத்திம பலன்களையும்,6,8,12ல் இருக்கும் போது எதிர்மறை பலன்களும் கிடைக்கும்.
சனி 3, 6 ,11 ஆகிய இடங்களில் வரும்பொழுது அதிக நன்மையும், 5,9,10-ல்சுமாரான பலன்களைத் தருவார். 4ல் வரும் பொழுது அர்த்தாஷ்டம சனி,7ல் இருந்தால்கண்டச் சனி, 8-ல் அஷ்டமத்துச் சனி,12,1,2 இந்த இடங்களில் சனி வரும்போது ஏழரை சனி காலம் அமையும். இத்தகைய காலகட்டங்களில் முறையே முடக்கம், எதிர்ப்புகள், இக்கட்டான நிலைகளில் பிரச்சனைகள் ஆகிய பலன்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
ராகு சனியின் அம்சம்: கேது செவ்வாயின் அம்சம் பெற்றிருப்பதால் அதற்கேற்ற பலன் தருவார்கள் இவர்கள் 3, 6, 9 ,11-ஆம் இடங்களில் நன்மை செய்வார்கள். இருவரும் நிற்கும் நட்சத்திரம் பார்க்கும் கிரகங்களுக்கு ஏற்ப பலன் தருவார்கள்.
கோச்சார கிரக பெயர்ச்சிகள் எவ்விதமான பலன்களை அளிக்கும் என பார்த்தோம். எனினும் குறைவான அல்லது எதிர்மறையான பலன்கள் சொல்லப்படும் போது இந்த பெயர்ச்சியில் இப்படியான பலன்கள் தானா என மனச்சோர்வு அடைய தேவையில்லை.
அவரவர் ஜாதகத்தை துல்லியமாக ஆராய்ந்து அதன் கோச்சார பலன்கள் எந்த அளவுக்கு ஒத்துழைப்பாக-பலமாக அமையும் என்பதை கணித்து செயல்பட்டு வெற்றி பெறலாம்