கோடி நன்மை தரும் குரு பார்வை
நாளும் மனிதர்களை ஆளும் நவ கிரகங்களில் குருபகவான் முதன்மையான சுபக்கிரகம் என்பது அனைவரும் அறிந்ததே! பொன்னவன், வியாழன், அந்தணன், பிரகஸ்பதி என்ற சிறப்புப் பெயர்களும் அவருக்கு உண்டு
குருபகவான் தான் அமர்கின்ற வீட்டின் பலனை விட தனது பார்வையால் பார்க்கும் வீட்டின் பலனை மேன்மை படுத்துவார் என்பது அரிச்சுவடி பாடமாகும்
பாவ கிரகங்களின் கடுமையான பலன்களை தணிக்கும் தன்மையில் குரு பகவான்தான் நிகரற்றவர் என்றால் மிகையல்ல. ‘குரு பார்க்க கோடி நன்மை’ என்கிற ஜோதிட பொன்மொழியும் நடைமுறையில் உண்டு
ஒரே நேரத்தில் 10 பேரை வீழ்த்தக்கூடிய ஒரு பலசாலி ‘கோமா ஸ்டேஜ், நிலையில் இருந்தால் எப்படி அவரால் இயங்க முடியாதோ அதே போல பரம நீசம், அஸ்தங்கம், வக்ரம் பெற்று அசுப ஆதிபத்யம் அடைந்து குரு பகவான் மறைந்து ஒரு ஜாதகத்தில் அமர்ந்துவிட்டால் குருபகவானின் பார்வையால் தீய பலன்களை குறைக்க முடியாது. அவரின் பார்வையால் சுப பலன்களையும் பெறமுடியாது. சில ஜாதகங்களில் குரு பகவானின் பார்வை இருந்தும் தீயபலன்கள் நடைபெறுவதற்கு இதுவும் ஒரு தலையாய காரணமாகிறது
சுப ஆதிபத்தியம் பெற்று கேந்திர கோணங்களில் மற்றும் தன லாபத்தில் ஆட்சியாகவோ, உச்சமாகவோ அல்லது நட்பாகவோ அமர்ந்து பாவர்களுடன் இணையாமல் இருந்தால் குரு பகவான் முழுமையான பலம் பெற்றவர் ஆகிறார்.
குருபகவானால் பார்க்கப்படும் இடம் பரிசுத்தம் ஆகிறது பார்வையில் படும் கிரகம் சுப ஆதிபத்யம் பெற்றிருந்தால் அவர் தரக்கூடிய கிரக காரக பலன் களையும் ஆதிபத்திய காரக பலன் களையும் பலமடங்காக பெருக்கித் தரும் வள்ளல் பெருமானாகிறார்
பலவீனம் அடைந்த கிரகத்தையோ பாதிக்கப்பட்ட இடத்தையோ யோகபலம் பெற்ற குரு பகவானின் பார்வை படும்போது அவை தரும் தீயபலன்கள் ஒரு கட்டுக்குள் வருகிறது என்பது அனுபவம் அறிவுறுத்துகிறது.
இனி குருபகவானின் பார்வையால் கிடைக்கும் நற்பலன்களை பார்க்கலாம்
லக்னத்தில் புதன் பலம் பெற்று அமர்ந்து அவரை குரு பகவான் பார்த்து விட்டால் ஜாதகன் நுண்ணறிவு உடையவனாக இருந்து அரசு மற்றும் அரசியல் சார்ந்தவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருப்பார் ஜாதகனின் அறிவு பலருக்கும் பயன்படும்
7-ம் அதிபதியும் சுக்கிர பகவானும் நண்பர்களாக அமைந்து இருவரும் கேந்திர கோணங்களில் நின்று அவர்களை குருபகவான் பார்த்துவிட்டால் அழகும், அதிர்ஷ்டமும், சதைப்பிடிப்பும், கற்பும் நிறைந்தவள் மனைவியாக வருவாள்
5-ம் அதிபதி ஆட்சி பெற்று அவரை குரு பகவான் பார்த்தால் அறிவும், அழகும், அதிர்ஷ்டமும் ,ஆயுளும் நிறைந்த குழந்தைகள் பிறக்கும். குழந்தை பிறந்தபின் தந்தையின் தரம் உயரும்
9-ல் குரு பகவான் நின்று ஒன்பதாம் அதிபதியும் லக்னாதிபதியும் குருவின் சாரத்தில் நின்று அவர்களை குருபகவான் பார்த்துவிட்டால் ஜாதகன் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். ஜாதகனை கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்வான்
குரு வளையம் என்று அழைக்கப்படும் ரிஷபம் ,சிம்மம் ,விருச்சிகம் ,கும்பம் இந்த நான்கு ராசிகளில் ஏதேனும் ஒன்றில் குரு பகவான் அமர்ந்து அவர் லக்னத்திற்கும் ராசிக்கும் மறையாமல் இருந்தால் ஜாதகன் தான் ஈடுபடும் துறையில் சிறந்து விளங்குவான் பெரும் சாதனை படைத்து வாழ்வான்
பாக்கியாதிபதியும் செவ்வாயும் கூடி 2-ல் அமர்ந்து இருவரில் ஒருவர் ஆட்சி அல்லது உச்சம் பெற்று அவர்களை குரு பகவான் பார்த்து விட்டால் அவன் பூமியால் பெரும் செல்வம் பெற்று சிறந்த யோகவானாக விளங்குவான்
புதன் 10-ம் அதிபதியாகி கேந்திரத்தில் நின்று அவருடன் இரண்டாம் அதிபதியும் சேர்ந்து இருக்க அவர்களை குருபகவான் பார்த்தால் பிரபலமான ஜோதிடர் ஆகி மக்கள் மத்தியில் செல்வாக்கும் சொல்வாக்கும் பெற்று சிறப்புடன் வாழ்வான்
3-ம் அதிபதி கேந்திர கோணங்களில் நின்று அவரை குருபகவானும் செவ்வாயும் பார்த்துவிட்டால் சகோதர விருத்தியும், சகோதரனால் சிறப்பும், மேன்மையும் உண்டாகும்
4ம் அதிபதி சுபராகி நான்கில் ஆட்சி பெற்று அவரை குரு பகவான் பார்த்து விட்டால் தாய் அழகானவராக ,ஆயுள், ஆரோக்கியம் உள்ளவராகவும், கற்பு நெறி தவறாமலும் இருப்பார். அழகான வீடும் காரும் அமையப்பெற்று அவனியில் வலம் வருவார்கள்
குருவும் செவ்வாயும் இணைந்து ஒரு ராசியில் நின்றாலும் அல்லது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும் ஜாதகனுக்கு சாஸ்திர ஞானம் உண்டாகும் பூமி யோகம் பெறுவான் நற்குணம் நிறைந்தவனாக காணப்படுவான் மற்றவர்களுக்கு வழிகாட்டியாய் வாழ்வான்
10-ஆம் இடத்தில் சனி பகவான் நின்று அவரை குருபகவான் பார்த்தால் ஜாதகன் வாகன உரிமையாளராக வலம் வருவான் பத்தில் குரு நின்று சனிபகவான் பார்த்தால் வாகன ஓட்டுநராக இருப்பான்
3 ,6 ,9 ,10, 11 இல் செவ்வாய் பலம் உடன் அமர்ந்து குரு பகவான் பார்த்து விட்டால் அந்த ஜாதகன் கெஜட் பதிவு பெற்ற உயர் அதிகாரியாக பணி புரிவான்
9-ம் அதிபதி உடன் பலம் பெற்ற சுக்கிரன் இணைந்து கேந்திர கோணங்களில் நின்று இவர்களை குருபகவான் பார்த்துவிட்டால் ஜாதகன் பெரும் செல்வந்தனாக வாழ்ந்து மற்றவர்களுக்கு உதவி செய்வான்
சுப ஆதிபத்யம் பெற்ற சுக்கிர பகவான் 2ல் அல்லது 9ல் அல்லது 11இல் ஆட்சி அல்லது உச்சம் பெற்று குருபகவான் பார்த்துவிட்டால் ஜாதகன் கோடீஸ்வரனாக வலம் வருவார் என்பதில் ஐயமில்லை
2-ம் அதிபதி ஆட்சி பெற்று அல்லது உச்சமாகி அவரை குரு பகவான் பார்த்து விட்டால் அவன் நகை வியாபாரியாக தொழில் செய்து பெரும்பொருள் ஈட்டுவான்
லக்னாதிபதி உச்சமாகி லாப ஸ்தானத்தில் நின்று அவரை சுப ஆதிபத்யம் பெற்ற குருபகவான் பார்த்துவிட்டால் அந்த ஜாதகன் அரசனாய் அல்லது அரசனுக்கு சமமாய் வாழ்வான்
லக்கினத்திற்கு கேந்திரங்களில் 1,4,7,10 இல் குரு பகவான் உச்சம் பெற்று அவருக்கு வீடு தந்த சந்திரன் உச்சம் பெற்றால் ஜாதகன் செல்வமும் புகழும் பெற்று சிறப்புடன் வாழ்வான் (துலா லக்னத்திற்கு பொருந்தாது)
குரு பற்றிய விளக்கங்கள் மிக அருமை
தங்கள் கருத்துகளுக்கு நன்றி