ராஜயோகம் தரும் லக்னாதிபதி திசை
🟢ஒருவரின் ஜாதகத்தில் லக்னாதிபதி திசை நடைபெறும்போது ஜாதகன் யோக பலன்களை அனுபவிக்க வேண்டும் எனில் லக்னாதிபதி ஜாதகத்தில் பலம் பெற்று இருக்கவேண்டும் பலமாக அமைந்த லக்னாதிபதி திசை ஜாதகனுக்கு முழுமையான யோக பலன்களை தருவார் என்பது மறுக்க முடியாத உண்மை லக்னாதிபதி எப்படி இருந்தால் பலம் பெற்றவர் ஆகிறார் என்பதை காண்போம்.
🟢லக்னாதிபதி ஆட்சி, உச்சம் பெறுதல் லக்னாதிபதி நின்ற வீட்டோன், லக்னாதிபதி நின்ற சாரநாதன் ஆட்சி பெறுதல்.லக்கினாதிபதி கேந்திர கோணங்களில் அமர்தல்,சுபர்களுடன் நண்பர்களுடன் கூடுதல், நவாம்சத்தில் பலம் பெறுதல் லக்னாதிபதிக்கு இருபுறமும் சுபர்கள் இருப்பது, லக்னாதிபதிக்கு சுப பலம் பெற்ற குருவின் பார்வை இருப்பது இவையாவும், லக்னாதிபதி பலம் பெற்று உள்ளார் என்பதை அறிவுறுத்தும் அரிச்சுவடி பாடம் என்பது அனைவரும் அறிந்ததே .
யோகம் தரும் லக்கினாதிபதி திசை:
🟢ஒருவரின் ஜாதகத்தில் லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி பெற்று பாக்கியாதிபதி தொடர்பு லக்னாதிபதிக்கு எந்த விதத்திலாவது கிடைத்துவிட்டால் லக்னாதிபதி திசையில் ஜாதகன் தன் முனைப்பு மிகுந்தவனாக தன்மானம் நிறைந்தவனாக உச்சகட்ட விழிப்புணர்வோடும் சமூக அந்தஸ்துடன் வளம் பல பெற்று யோகமுடன் வாழ்வான். மேலும் அவன் தொட்டது துலங்கும் ,வச்சது விளங்கும்.
🟢ஒருவரின் ஜாதகத்தில் லக்னாதிபதி 4-ல் ஆட்சி பெற்றாலும் அல்லது 4-ல் அமர்ந்து நான்காம் அதிபதி பலம் பெற்றாலும் பாவருடன் சம்பந்தப்படாத பஞ்சமாதிபதி லக்னாதிபதியை பார்த்தாலும் இணைந்தாலும் லக்னாதிபதி திசையில் ஜாதகன் மண்ணாலும், மனையாலும், மதிப்புமிக்க வானுயர்ந்த கட்டிடங்கலாலும் பெருமை பெறுவான். வளம் மிகுந்த வாகனங்கள் பல தேடுவான்.தன் இண ஜன பந்துகளை விட பலமடங்கு செல்வாக்குடன் வாழ்வான்.
🟢ஒருவரின் ஜாதகத்தில் லக்கினாதிபதி 7-ம் வீட்டில் அமர்ந்து 7-ம் அதிபதி ஆட்சி, உச்சம் பெற்று பாக்கியாதிபதி இணைவு, பார்வை லக்னாதிபதிக்கு கிடைத்துவிட்டால் லக்னாதிபதி திசையில் ஜாதகன் நண்பர்களாலும் கூட்டாளிகளாலும் வாழ்வில் பெரும் யோகத்தை அடைவான். மனைவி வர்க்கத்தால் அளவற்ற செல்வத்தை பெறுவான்.
🟢ஒருவரின் ஜாதகத்தில் லக்கினாதிபதி 10-ம் வீட்டில் ஆட்சி பெற்றாலும் அல்லது உச்சமாகி 10ல் அமர்ந்து பத்தாம் அதிபதி பலம் பெற்றாலும் ,லக்னாதிபதிக்கு ஒன்பதாம் அதிபதியின் பார்வை இணைவு கிடைத்துவிட்டால் லக்னாதிபதி திசையில் ஜாதகன் தொழில் மூலம் பெரும் புகழ் அடைவான் ,தனது துறையில் பல புதுமைகளை புகுத்தி திறமைகளை பெருக்கி பல லட்சங்களை அல்லது பல கோடிகளை காண்பான்.
🟢ஒருவரின் ஜாதகத்தில் லக்னாதிபதி 5-ல் அமர்ந்து 5-ம் அதிபதி கேந்திர கோணங்களில் பலம் பெற்று அமர்ந்து பாக்கியாதிபதியின் பார்வை அல்லது இணைவு லக்னாதிபதிக்கு கிடைத்துவிட்டால் லக்னாதிபதி திசையில் ஜாதகன் அரசனுக்கு அறிவுரை வழங்கும் அரசனாகவும் அளவுக்கதிகமான முன்னோர்கள் சொத்து உள்ளவனாகவும் அறிவும் அதிர்ஷ்டமும் நிறைந்த குழந்தைகளுடன் ஆனந்தமாய் வாழ்வான்.
🟢ஒருவரின் ஜாதகத்தில் லக்கினதிபதி 9ல் அமர்ந்து 9ம் அதிபதி கேந்திர கோணங்களில் பலம் பெற்று நின்று லக்னாதிபதியை பார்த்தால் லக்னாதிபதி திசையில் ஜாதகன் பொது இடத்தில் தூய்மை, நேர்மை, கோயில் கட்ட, குளம் வெட்ட ,மரம் நட என வாழ்க்கையை நடத்துவார். சுயநலமில்லாத பொது நல வாதியாக திகழ்வார் ஒருவரின் ஜாதகத்தில் லக்னாதிபதி 2அல்லது 11ல் அமர்ந்து அந்த வீட்டு அதிபதி பலம் பெற்றுவிட்டால் லக்னாதிபதி திசையில் ஜாதகன் குறைவான முதலீட்டில் நிறைவான லாபத்தைப் பெறுவார்கள் அறிவு நுட்பமும் மிகுந்து இருக்கும் சுயமுயற்சியால் பல கிராயங்கள் செய்வார் அவரின் பேச்சாற்றலே பெரும் முதலீடாக இருக்கும் இவரின் பின்னால் ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும்
தீமை தரும் லக்னாதிபதி திசையை காண்போம்
🔴ஒருவரின் ஜாதகத்தில் 6ம் அதிபதி அவருடன் லக்னாதிபதியும் பாம்பும் சேர்ந்து இருந்து லக்னாதிபதி தசை நடந்தால் ஜாதகனுக்கு விஷத்தால் கண்டம் ,குடல் நோய், தோல் நிறம் மாறுதல் ,உடலில் ஏதாவது ஒரு நோய் தொடர்கதை போல் இருந்து கொண்டே இருக்கும்.
🔴ஒருவரின் ஜாதகத்தில் லக்னாதிபதியும் அஷ்டமாதிபதியும் இணைந்து அவருடன் மாந்தி கூடி 6,8,12ல் மறைந்து லக்னாதிபதி தசை நடந்தால் ஜாதகனுக்கு எதிர்பாராத விபத்தால் உடலில் ரணங்கள் உண்டாகும் ,அங்கஹீனம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு,தவறான மருத்துவத்தால் உடலில் குறை ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
🔴ஒருவரின் ஜாதகத்தில் லக்னாதிபதி 6,8, 12ல் மறைந்து அவருக்கு வீடு கொடுத்த கிரகம் நீசம், அஸ்தங்கம் ஆனால் லக்னாதிபதி திசையில் ஜாதகனுக்கு எதிர்பாராமல் வியாதியோ விபத்தோ அல்லது தாழ்வு மனப்பான்மையால் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.
🔴ஒருவரின் ஜாதகத்தில் லக்னாதிபதியுடன் 5ம் அதிபதி அவருடன் ராகு அல்லது கேது இணைந்து இருந்தால் லக்னாதிபதி திசையில் எனக்கு எதிர்பாராமல் விபத்து ஏற்படும். லக்னாதிபதி நின்ற ராசியின் மாதத்தில் நடக்கும் என்பது விதி.
🔴ஒருவரின் ஜாதகத்தில் லக்னாதிபதி 8ல் நின்று 8ம் அதிபதி நீசம் ஆனாலும் அல்லது எட்டாம் அதிபதி லக்னத்தில் நின்று லக்னாதிபதி நீச்ம் ஆனாலும் லக்னாதிபதி திசையில் எட்டாம் அதிபதி புத்தியில் ஜாதகனுக்கு விபரீதமான சிந்தனைகள் தோன்றும் எந்த ஒரு செயலையும் விளையாட்டாக செய்து வினையில் முடியும், உயிருக்கு உத்தரவாதம் இல்லை.
🔴ஒருவரின் ஜாதகத்தில் லக்னாதிபதியும் அஷ்டமாதிபதியும் ஒருவராகி அவர் நின்ற வீட்டுக்கு எட்டோன் ஆட்சி பெற்று லக்னாதிபதி திசையில் ஜாதகனுக்கு சொல்லோனா துன்பம் ஏற்படும் வாகனங்களால் ,கால்நடைகள் எதிர்பாராத உயிரிழப்பு ஏற்படும்.
🔴ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதியே ஆயுள் காரனாக வந்து அவருக்கு 8ல் அஷ்டமாதிபதி அமர்ந்து லக்னாதிபதி திசையில் எட்டோன் புத்தியில் ஜாதகனுக்கு மரம், மலை, மாடியில் ஏறுதல் உயரமான இடத்திலிருந்து கீழே விழுவதால் ஏற்படும் காயங்களும் அதனால் உயிரிழப்பும் ஏற்படும்.
🔴ஒருவரின் ஜாதகத்தில் லக்னாதிபதியின் சரத்தில் அமர்ந்து அஷ்டமாதிபதி உபயத்தில் நின்று அல்லது அஷ்டமாதிபதி சரத்தில் நின்று லக்னாதிபதி உபயத்தில் அமர்ந்து லக்கினாதிபதி திசை நடந்தால் அஷ்டமாதிபதி புத்தியில் ஜாதகனுக்கு எதிர்பாராமல் உயிரிழப்பு ஏற்படக்கூடும்.
🔴ஒருவரின் ஜாதகத்தில் லக்னாதிபதி நின்ற வீட்டோன் ராசி அதிபதியாகி ராசிநாதன் நீசம், அஸ்தங்கம் பெற்று இருந்தால் லக்னாதிபதி திசையில் ஜாதகனுக்கு நாணயம் கெடுதல் ,உடல் மிகவும் பலவீனம் அடைதல் போன்ற துன்பங்களை தந்து மீளாத்துயரில் ஆழ்த்தி விடும்.
🔴ஒருவரின் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 3ஆம் அதிபதியும் ராசிக்கு மூன்றாம் அதிபதியும் சனியும் ராகுவும் கூடி இவர்களுடன் லக்னாதிபதி இணைந்து லக்னாதிபதி திசையில் ஜாதகனுக்கு விஷத்தால் அல்லது கயிற்றால் எதிர்பாராத கண்டங்கள் ஏற்படும் சில நேரங்களில் மாரகம் ஏற்படக்கூடும்.
🔴ஒருவரின் ஜாதகத்தில் லக்னாதிபதி அவருடன் 12ம் அதிபதி கூடி 8ல் நின்று லக்னாதிபதி திசையில் அந்த ஜாதகனுக்கு ஊர் பகை, வீண் பழிச்சொல், தேவையில்லாத விரயம், அவமானம் போன்ற துன்பங்கள் தொடர்ந்து துரத்தும்.