லக்னம்
லக்னம் என்பதை மூன்று வகையாக பிரித்துக் கொள்வோம். அவை சரம், ஸ்திரம், உபயம் என்பனவாம். இதில் சர லக்கினம் என்பது மேஷம், கடகம், துலாம், மகரம் எனவும், ஸ்திர லக்கினம் என்பது ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் எனவும், உபய லக்னம் என்பது மிதுனம், கன்னி, தனுசு,மீனம் ஆகியன.
சர லக்கினத்தை ஜன்ம லக்னமாகக் கொண்டவர்கள் கடல் அலையைப் போல துரிதமானவர்கள்.விசாலமான எண்ணமும், தாராளமான மனப் போக்கும் கொண்டவர்கள். விரைந்து முன்னேற துடிப்பவர்கள். அதில் வெற்றியும் பெறுபவர்கள். பரந்து விரிந்து எல்லையை அடைபவர்கள். பிறந்த எல்லையை விட்டு, வெளிவட்டார எல்லையில் தன் வெற்றியை நிலை நாட்டுபவர்.
ஸ்திர லக்னத்தில் பிறந்தவர்கள் ஆற்று நீரை போன்றவர்கள். ஸ்திரமான வாழ்க்கை அமைத்துக் கொள்ள துடிப்பவர்கள். சொந்த இடத்தை விட்டு விலகாதவர். பூர்வீகத்தை பலப்படுத்துபவர். தனக்கு என வாழாமல் பிறருக்காக வாழ்பவர்கள். கடினமாக உழைத்துப் படிப்படியாக முன்னேறி வெற்றி பெறுபவர்கள்.
உபய லக்னத்தில் பிறந்தவர்கள் குளத்து நீரை போன்றவர்கள். ஒரு நிலையான ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் தத்தளிப்பவர்கள். வாழ்வில் பத்தடிதான் ஏறி இருப்பார்கள். திடீரென எட்டடி சறுக்கி விடுவார்கள். மணவாழ்க்கை அமைவதில் தாமதம், அமைந்த வாழ்க்கையும் சிறப்புற அமைவதில் சிக்கல், வாழ்வில் எதிர்நீச்சல் போட்டு அலுத்திருப்பார்கள்.
இனி லக்னத்தில் அமரும் நவகிரகங்கள் தரும் பலன்கள்.
லக்னத்தில் சூரியன் இருந்தால் : நீங்கள் சுறுசுறுப்பானவர், உஷ்ணம் சற்று அதிகம், அதனால் உண்ண உபாதை தலை தூக்கும். சற்று முன்கோபம், சிவந்த மேனி கொண்டவர். அதிகாரம் செய்பவர். அடங்கி வாழத் தெரியாதவர்.
லக்னத்தில் சந்திரன் இருந்தால்: நல்ல தோற்றம், நல்ல அழகு ஆனாலும் குழப்பவாதி. இவர்களை மனைவிக்கு மிகவும் பிடிக்கும். சீதள உடம்புக்காரர். அழகிய கேசம் , நீடித்த ஆயுள் உடையவர். முகராசி கொண்ட மகராசர்.
லக்னத்தில் செவ்வாய் இருந்தால் : போராட்ட குணம் கொண்டவர். முன்கோபம் இருக்குமே தவிர முன் யோசனை இருக்காது. அதிகாரத்தன்மையோடு வாழ்பவர்.
லக்னத்தில் புதன் இருந்தால்: நளினமாக பேசுவார்கள், ஸ்தூல சரீரம், ஏதாவது கொரித்து கொண்டே இருக்க வேண்டும் என தோன்றும். தர்ம சாஸ்திரங்கள் அறிந்தவர்.
லக்னத்தில் குரு இருந்தால்: அதிர்ஷ்டக்காரர், நல்ல சாஸ்திர அறிவு தெய்வீக பண்பாடு அறிந்தவர். திரளான ஜனவசியம் கொண்டவர். மற்றவரை பேச்சால் கவரக்கூடியவர். நல்ல மனைவி மக்களைப் பெற்றவர். அரசியல்வாதிகள் உங்களை இழுப்பார்கள். பாவம் உங்களுக்கு தான் பொய் பேச தெரியாதே, செல்வ செழிப்புடன் ஜாலியாக வாழ்பவர்.
லக்னத்தில் சுக்கிரன் இருந்தால் : பூலோக மன்மதன். என்ன அப்படி ஒரு அலங்காரம் கண்களே காந்தம்தான். பெண்கள் மூலம் சகல சௌபாக்கியம் அடைபவர். வேளா வேலைக்கு உணவு, வேண்டிய வண்ணம் உடை, சொகுசான வாழ்க்கை வாழ்பவர்.
லக்னத்தில் சனி இருந்தால் : நீண்ட ஆயுள் தான் கண்டிப்பான வார்த்தை பேசி சிலரின் கடுப்புக்கு ஆளாகிறீர்கள். சிக்கனவாதிதான் ஆனால் கஞ்சன் என பெயர் எடுத்து விடுகிறார்கள். சற்று மாநிறம் கொண்ட மேனி கொண்டவர்.
லக்னத்தில் ராகு இருந்தால்: நாக தோஷம் ஏற்படும் அதனால் பல தடைகள் ஏற்படும். மெலிந்த தோற்றம் தரும் தேகம், எதையும் சிந்தித்து சுயமாக செய்வீர்கள்,நல்ல பண்பாளர்.
லக்னத்தில் கேது இருந்தால்: தெளிந்த தெய்வ பக்தி உருவம் மட்டும் குறுகிய வடிவம், ஆனால் உயர்ந்த உள்ளம் கொண்டவர். நல்ல பதவி கிடைக்கும். குழந்தை செல்வம் குறைவாய் பெற்றவர்.