ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026 : மேஷம்
சுயமரியாதையும், தன்மானமும் அதிகங்கொண்ட மேஷ ராசி அன்பர்களே! பெரும்பாலோர் கருத்த தேகமுடையவர்களாவே இருப்பீர்கள். ஒரு சிலர் மட்டுமே சிவந்த தேகமுடையவர்களாக இருப்பீர்கள். முன் கோபம் உங்கள் உடன் பிறந்தது. கோபத்தினால் உறவினரையும், நண்பரையும் பகைத்துக் கொள்வது உங்கள் இயல்பு. இதய நோய் ஏற்பட வாய்ப்புண்டு. நீரில் செல்லப் பயப்படுவீர்கள் அல்லது நீரினால் கண்டமுண்டு.
நல்ல செயல்களுக்காக நிறைய செலவு செய்வீர்கள். வயிற்றுவலி, மூட்டுவலி ஏற்படலாம். ஒரு சிலருக்கு வாலிப வயதில் சில அபவாதங்கள் போன்றவை ஏற்படலாம். நல்ல சாஸ்திர அறிவும், ஞானமும் உங்களுக்கு உண்டு. தெய்வ நம்பிக்கை அதிகமுண்டு.
உங்களுக்குக் கடந்த ஒன்றரை வருட காலமாக இராகு பகவான் பன்னிரண்டாமிடத்தில் அமர்ந்து கடுமையான பணவிரயங்களை ஏற்படுத்தினார். கடன்படுதல், தாய், தகப்பனுக்குக் கருமஞ் செய்தல், மன உளைச்சல், நிம்மதி குறைவு, வீண் அபராதம், தொழில் இடையூறு, இடமாற்றம்,குடும்பத்தில் வைத்தியச்செலவு போன்ற அசுப பலன்கள் ஏற்பட்டது. ஆனால் கேது பகவான் ஆறாமிடத்தில் அமர்ந்து தக்க சமயத்துக்குப் பண உதவியும் நண்பர்கள் ஒத்தாசையும் சுபகாரியமும் ஏற்படுத்தினார்கள்.
தற்போது இராகு – கேது பெயர்ச்சியானது ஓரளவுக்கு நல்ல பலன்களை ஏற்படுத்த போகின்றது. ஐந்தாமிடத்தில் கேது நின்று சிறிது பிரச்சனைகளை ஏற்படுத்துவார். தொழிலில் பிரச்சனைகளும், நிலம், சொத்து சம்பந்தமான வழக்குகள் உறவினர் பகை, பிள்ளைகள் வகைகளில் செலவுகள் ஏற்படும். ஆனாலும் ஐந்தாமிட கேதுவால் நன்மையும் ஏற்படாமல் போகாது.
பெரியோர்கள் ஆதரவும், ஒத்தாசையும் கிடைக்கும். மகான்களின் தரிசனம், தெய்வ வழிபாடு மற்றும் எதிர்பாராத உதவி போன்றவை ஏற்படும். இராகு பகவான் உங்கள் இராசிக்குப் பதினொன்றாமிடமாகிய இலாபஸ்தானத்துக்கு வருவதால் மிகச்சிறந்த பலன்கள் நடைபெறும். நினைகாரியமெல்லாம் வெற்றியடையும். தொழில் முன்னேற்றம் நல்ல மாற்றமும் ஏற்படும். மேலதிகாரிகளின் ஆதரவும் பதவி உயர்வும் கிடைக்கும்.வெளிநாட்டு யோகம் ஏற்படும்.
கணவன் மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்கும் குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்க போகின்றது பிள்ளைகள் வழியில் சுபச் செலவுகள் ஏற்படப் போகின்றது ராகு உங்களுக்கு மிகுந்த நன்மைகளை கொடுப்பார் சனியின் பாதிப்புகள் குறையும்.
வியாபாரிகள் :
செய்தொழிலில் இருந்த தேக்க நிலை மாறி, தொழில் விறுவிறுப்படையும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும். வெளியூருக்குச் சரக்குகள் நிறைய அனுப்பி வைப்பீர்கள். பிரயாணங்கள் அதிக நன்மை தரும். சிற்சிலப் போட்டி இருந்தாலும், எதிர்ப்பை முறியடித்து வெற்றி கொள்வீர்கள். இலாபம் நிறையக் கிடைத்து, தொழிலை நல்ல முறையில் கவனத்துடன் செய்வீர்கள். அரசாங்கத் தொந்தரவுகள் நீங்கும். கடன் தொல்லைகள் அதிகம் பாதிக்காது.
உத்தியோகஸ்தர்கள்:
உத்தியோக உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். ஒரு சிலருக்கு விரும்பிய இடமாற்றம் ஏற்படும். மேலதிகாரிகள் உங்களை மதித்து நல்ல முறையில் நடத்துவார்கள். ஆக்கப்பூர்வமான உங்கள் யோசனைகளால் ஆபீஸில் உங்கள் மதிப்பு உயரும்.குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்காக ஆபிஷில் லோன் போட்டு, தீர்த்த யாத்திரை, உல்லாச பிரயாணம் சென்று வருவீர்கள். சிலர் பழைய வாகனத்தை விற்று விட்டு, புதிய வாகனம் வாங்குவீர்கள்.
பெண்கள் :
தாய்வழி உறவில் சிறிது பகை ஏற்படும். குழந்தைகளின் உடல்நிலை, பிரசவச் செலவு, சீர். கல்வி போன்றவற்றிற்றாகப் பணம் அதிகமாகச் செலவழியும். ஆனால் கணவன் -மனைவி உறவில் மிகவும் மகிழ்ச்சி ஏற்படும். வீட்டுக்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள், புதிய நகை, ஆடை அணிவீர்கள். அக்கம் பக்கத்தாரிடம் உங்களது கௌரவும் உயரும். மிக நல்ல காலமாகையால் உங்களது நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும்.
மாணவர்கள்:
கல்வியில் நாட்டம் ஏற்படும். உயர்கல்விக்காக ஒரு சிலர் வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உண்டாகும் அல்லது ஹாஸ்டலில் தங்கிப் படிப்பீர்கள். அடிக்கடி உடல் சோர்வு உங்களைப் பயமுறுத்தினாலும், நல்ல முறையில் யோகம் உண்டாகும். கல்விக்காக ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லவும். அல்லது வெளியூரில் படிக்கவும், வாய்ப்புகள் வரலாம். நல்ல மதிப்பெண்களை வாங்குவீர்கள். விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.
கலைஞர்கள்:
மிகவும் அற்புதமான காலம் சந்தர்ப்பங்களை முறையாகப் பயன்படுத்திக் கெண்டால் எதிர்காலத்துக்கு நல்லது. வெளியூர் சென்று திறமையைக் காட்டுவீர்கள். நிறையப் பணமும், பேரும், புகழும் உண்டாகும் மொத்தத்தில் நீங்கள் பட்டுவரும் கஷ்டங்களிலிருந்து நிவாரணம் தரக்கூடியதாக இந்த இராகு – கேதுப் பெயர்ச்சி உங்களுக்கு அமையப் போகின்றது.
அரசியல்வாதிகள்
இராகு – கேது உங்களை நல்ல முறையில் நடத்துவார்கள். ஓரளவுக்குக் கட்சியில் செல்வாக்கு உயரப் போகின்றது. சம்பாத்தியமும் கிடைக்கப் போகின்றது. திட்டமிட்டு காரியமாற்றினால் வெற்றி உங்களுக்கே!
விவசாயிகள்:
மகசூல் நல்ல இலாபம் தரும். வருமானம் உயரும். விவசாயக் கடன் தீரும். புது நிலபுலன், கால்நடைகள் வாங்குவீர்கள்.
பரிகாரம்:
சீர்காழி அருகேயுள்ள கீழ்ப்பெரும்பள்ளம் என்ற ஊருக்குச் சென்று கேது பகவானை வழிபட்டு வந்தால் நல்லது.
தினசரி விநாயகர் அகவலைப் பாராயணம் செய்யவும். தினமும் கணபதியை வணங்கிவிட்டு அன்றாடக் கடமைகளைச் செய்தால் மிகவும் நலமாக இருக்கும்.
குலதெய்வத்தைத் தவறாமல் வழிபடுவது உத்தமம். பிதுர்க்கடன் பாக்கியிருந்தால் இராமேஸ்வரம் சென்று, பிதுர்க்கடன் செய்தால் நல்லது.