ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026 : மகரம்
ராகு கேது பெயர்ச்சி நாள் -2025
வைகாசி மாதம் 4ம் தேதி(18.05.2025) ஞாயிற்றுக்கிழமை இரவு 07.38 மணிக்கு சூரிய உதயாதி 34.38 நாழிகைக்கு திருக்கணிதப்படி ராகு பகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.
தெய்வபக்தி அதிகமுடைய மகர ராசி அன்பர்களே! உங்களுக்கு ஒல்லியான தேக அமைப்பும், அழகிய கண்களும் உண்டு. உடலில் நிறைய மச்சமிருக்கும். சுயநலம் உண்டு. சுயநிலத்துடன் இருந்தாலும், சகோதர, சகோதரிகளுக்கு உங்களால் இயன்றதைச் செய்வீர்கள். நீங்கள் எத்தனை செய்தாலும் இறுதியில் கெட்ட பெயர்தான் மிஞ்சும். யாருடனாவது அடிக்கடி சண்டை ஏற்படும். நண்பர்கள் எல்லோருமே அவர்களது தேவைக்காக மட்டுமே உங்களோடு பழகுவார்கள். சிக்கனத்தை விரும்புவீர்கள். ஆனால் அதை கடைபிடிக்க முடியாமல் அதிகமாக செலவு செய்பவரும் நீங்கள் தான். மனைவி, மக்களிடம் ஆழ்ந்த அன்பு கொண்டிருப்பீர்கள்.
உங்களுக்கு கடந்த ஒன்றரை வருடமாக இராகுபகவான் மூன்றாமிடத்திலும், கேது பகவான் ஒன்பதாமிடத்திலும் நின்று நிறைய நன்மைகளை வழங்கினார்கள். தொழில் முன்னேற்றம், இலாபம், புதியதொழில் வாய்ப்புகளில் வெற்றி, பிராயணத்தில் நன்மைகள், தீர்த்த யாத்திரை செல்லுதல் போன்ற சுபகாரியங்கள் நடைபெற்றது. சிலருக்கு மட்டும் சகோதருடன் உறவு பாதித்தது.
தற்சமயம் 18.05.2025அன்று இராகுபகவான் உங்கள் இராசிக்கு இரண்டாமிடமாகிய கும்ப இராசிக்கும் கேது பகவான் உங்கள் இராசிக்கு எட்டாமிடமாகிய சிம்ம இராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.
இந்தப் பெயர்ச்சியானது அத்தனை சிறப்பானதல்ல. கேது எட்டாமிடத்துக்கு வரும்போது பெண்களால் கெட்டபெயர் ஏற்படலாம். பிள்ளைகளால் நிறைய செலவு ஏற்படும். பிரயாணங்கள் அதிகம். ஏற்பட்டாலும், பெரிய நன்மைகள் கிடைக்காது. திடீர் விபத்துக்கள் நேரிடலாம். மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பொருள் நஷ்டம், நிம்மதியில்லாத நிலையும் ஏற்படும். உடல் உபாதை, ஆபரேசன், கண்வலி, தோல்வியாதிகள் ஏற்படலாம்.
அதுபோல இராகு பகவான் இரண்டாமிடத்துக்கு கும்ப ராசிக்கு வரும் போது ஓரளவுக்கு நன்மையே ஏற்படும். பொன், பொருள் சேர்க்கை, செல்வம், செல்வாக்கு, பேரும், புகழும் ஏற்படும். குடும்பத்தாராலும், பிறராலும் பாராட்டப் படுவீர்கள். தான, தர்மங்களைச் செய்வீர்கள். ஆனாலும் அடிக்கடி கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு தோன்றும். ஒரு கெட்ட பெண்ணால் அவச்சொல் வாங்க நேரிடலாம். முன்யோசனையுடன் நடந்து கொள்ள வேண்டும். சுபகாரியங்கள் தடங்கலாகும். தகுந்த சாந்தி பரிகாரங்களைச் செய்த பின்பு, சுபகாரியங்கள் கைகூடும். ஆனால் அடிக்கடி தீர்த்தயாத்திரை செல்லவும், புண்ணிய நதிகளில் நீராடவும், வாய்ப்பு அமையும். வீட்டுக்குள் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் தெரியும், பொருட்கள் திருடு போகவோ, தொலைந்து போகவோ நேரிடலாம். பிரயாணத்திலும் கவனம் தேவை. ஜாதகத்தில் நல்ல திசாபுத்திகள் நடைபெற்றால் மட்டுமே இராகு கேதுவால் அதிகமான பாதிப்பு இராது.
வியாபாரிகள்:
வியாபாரிகள் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் தொழில் செய்ய வேண்டும். அதிகமாக கடன் வாங்கவோ, அதிகமாக கடன் கொடுக்கவோ கூடாது. சரக்குகளை தேவைக்கு மட்டும் வாங்கி ஸ்டாக் வைக்க வேண்டும். இல்லாவிட்டால் எதிர்பாராத விதமாகப் பண நஷ்டம் திருட்டு போதல் அல்லது யாராவது நம்பிக்கைத் துரோகம் செய்தல் போன்றவற்றால் பணவிரயம் ஏற்படும். கடன்காரர்கள் நெருக்குதல் தருவார்கள். புதுக்கடன் வாங்கிப் பழைய கடனை அடைக்க வேண்டி வரும். வாக்கு, நாணயம் தவறும் இருந்த போதிலும் தொழில் நல்ல முறையில் இயங்கும்.
உத்யோகஸ்தர்கள் :
உத்தியோகத்தில் திடீரென்று பாதிப்பு ஏற்படும். எதிர்பாராத இடமாற்றம், உத்தரவு கிடைக்க பெறுவீர்கள். ஆபீஸில் உங்கள் உழைப்புக்கு மரியாதை இருக்காது. மேலதிகாரிகள் உங்கள் மீது கண்டிப்புடன் நடந்து கொள்வார்கள். அடிக்கடி லோன் வாங்குவீர்கள். அதுபோல அடிக்கடி லீவும் போடுவீர்கள்.
பெண்கள் :
கணவன்- மனைவி உறவு ஒருநாள் போல மறுநாள் இராது. சிடுசிடுவென்று உங்கள் மீது வெறுப்பைக் கொட்டும் கணவர். மறுநாளே அன்பைப் பொழிவார். அவரின் உடல்நிலையும், குழந்தைகள் உடல் நிலையும் அடிக்கடி கவலை தரும். உங்களுக்கும் உடல் அரிப்பு, அலர்ஜி போன்றவையும் கண்களில் நோயும் ஏற்படும். பணத்தட்டுப்பாடு தலைக்கு மேல் இருக்கும். எப்படியோ சமாளிப்பீர்கள். சிலருக்கு கண் எரிச்சலும், கண்ணாடி போடவும் நேரிடும்.
மாணவர்கள்:
கல்வியில் ஊக்கம் குறைந்து காணப்படும். விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்காது கிடைத்தாலும் உங்களுக்கு ஆர்வமிருக்காது. கடனுக்காகப் படிப்பைத் தொடங்குவீர்கள். ஒரு சிலர் படிப்பை ஏதாவது ஒரு காரணத்தால் விட்டுவிட நேரும். கவனமாகப் படியுங்கள். நண்பர்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள்.
கலைஞர்கள் :
உங்களை விட அனுபவத்திலும், திறமையிலும் குறைந்தவர்களெல்லாம் உங்களை விட அதிகம் சம்பாதிப்பார்கள். யாரை நொந்து கொள்வது? கிடைத்த ஓரிரு சந்தர்ப்பங்களைக் கூடச் சரியாகப் பயன்படுத்த முடியாமல், உடல் பிணியோ அல்லது வேறெதனாலோ அவதிப்படுவீர்கள். வருமானம் பற்றாமல் கடன் வாங்க வேண்டி வரும்.
அரசியல்வாதிகள்:
அரசியலில் செல்வாக்கு மங்கும். சிறிது காலம் பொறுமையுடன் காத்துக் இருக்க வேண்டும். பணத்தை அதிகம் செலவழித்து விடாமல், யாரையும், நம்பாமல் ஒதுங்கி இருப்பது உத்தமம். குருப்பெயர்ச்சி வரை பாதிப்பு அதிகமிராது. குருப்பெயர்ச்சிக்குப் பிறகு பதவியிழப்புஅவச்சொல் வாங்க நேரிடலாம்.
விவசாயிகள்:
விவசாயிகள் நல்ல முறையில் நடைபெற்றாலும் இறுதியில் இலாபம் அதிகமிராது. அடிக்கடி விஷ ஜந்துக்களால் பயிர்கள் சேதமடையும். கால்நடை வாகனம், இவற்றில் செலவு ஏற்படும்.
பரிகாரம்:
கண்டிப்பாக ஒரு முறை காளஹஸ்தி சென்று வாருங்கள் அல்லது கீழப்பெரும்பள்ளம் சென்று வாருங்கள் அல்லது காஞ்சிபுரம் சென்று சித்திரகுப்தர் கோயிலில் வழிபடுங்கள்.
கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரம் சென்று, ராகுபகவானை வழிபடுவது நல்லது. ஒவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தியன்று, விரதமிருந்து மாலையில் விநாயகர் கோவிலில் தீபமேற்றி அருகம்புல் மாலை சாற்றி வழிபடுங்கள்.
கும்பகோணம் அருகிலுள்ள கீழப்பெரும்பள்ளம் சென்று, கேதுவை வழிபட நலம். புற்று உள்ள இடத்துக்கு வெள்ளிக்கிழமை தோறும் பால், பழம் வைத்து வழிபட்டால் நல்லது. சனிக்கிழமைதோறும் சனிபகவானை எள் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.
ஒருமுறை சங்கரன் கோவில் சென்று, கோமதியம்மனை தரிசித்து விட்டு வந்தால் நலம் உண்டாகும்.