அதிசார குருபெயர்ச்சி பலன்கள் 2025 –மேஷம்
செவ்வாய் பகவானின் அருள் பெற்ற மேஷ ராசி அன்பர்களுக்கு, தற்போது 3-ம் இடத்தில் குருபகவான் அமர்ந்திருக்கிறார். எந்த வேலையைத் தொட்டாலும் அதை முடக்கி, தொட்ட இடத்தில் எல்லாம் செலவை இழுத்துவைத்த குரு பகவான், அக்டோபர் 18-ம் தேதி முதல் நான்காம் இடத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கு டிசம்பர் 5 வரை சஞ்சாரம் செய்து பலன் தர இருக்கிறார்.
நான்கில் குரு சஞ்சாரம் செய்வது, கோசாரத்தில் அவ்வளவு நல்ல நிலையா என்று பார்த்தால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், இதுவரை சஞ்சாரம் செய்து வரும் மூன்றாம் வீட்டை விட நல்ல இடம் எனலாம்.
வீடுகட்டும் பணியைத் தொடங்கி அதை முடிக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்த மேஷ ராசிக்காரர்கள், இந்தக் காலகட்டத்தில் அதைக் கட்டி முடிக்க சூழ்நிலைகள் கனிந்துவரும். எதிர்பார்த்தபடி வங்கிக் கடன் கிடைக்கும். கட்டுமானப் பொருள்கள் தடங்கலின்றி வந்து சேரும். ஆவணங்களில் இருந்த பிரச்னைகள் விலகும்.
குரு பார்வை பலன்கள்
நான்காம் வீட்டில் அமரும் குருபகவான் உங்கள் ராசிக்கு 8, 10, 12 ஆகிய வீடுகளைப் பார்க்க இருக்கிறார்.
10-ம் வீட்டை குரு பகவான் பார்க்கும் இந்தக் காலத்தில், புதிய வேலை தேடிக் கொண்டிருப் பவர்களுக்கு, நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியன கிடைக்கும். கெளரவப் பொறுப்புகள், பதவிகள் தேடிவரும்.
குருபகவானின் பார்வை 8-ம் வீட்டைப் பார்ப்பதால், வெளிநாடு செல்ல வாய்ப்புகளை எதிர்பார்த்துக் காத்திருந்த அன்பர்களுக்கு நல்ல செய்திகள் வந்துசேரும். விசா கிடைப்பதில் இருந்த தடைகள் விலகும். திடீர் பண வரவுக்கும் வாய்ப்பு உண்டு. எனினும் வீண் செலவுகளைக் குறைத்துச் சேமிப்பதில் ஆர்வம் காட்டுங்கள்.
12-ம் வீட்டில் குருவின் பார்வை விழுவதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். சிலர் பலகாலம் செல்ல விரும்பிய ஆன்மிகத் தலங்களுக்குச் சென்று வரும் பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் சுபச்செலவுகள் அதிகரிக்கும். எனினும், தாயின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
இரவு நேரப்பயணங்களை முற்றிலும் தவிர்த்துவிடுவது நல்லது. யாருக்கும் ஜாமின் கையெழுத்துப் போடவேண்டாம். இல்லை என்றால் தேவையெற்ற பொறுப்புகளை, சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
மொத்தத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த அதிசார குருப்பெயர்ச்சி யோக பலன்களையே கொடுக்கும்.
பரிகாரம்: வியாழக்கிழமைகளில் நவகிரகக் குரு பகவானை வழிபடுங்கள். வயது முதிர்ந்தவர்களுக்குத் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.