அதிசார குருபெயர்ச்சி பலன்கள் 2025:கடகம்
சந்திர பகவானின் அருள் பெற்ற கடக ராசி அன்பர்களே!!!. உங்களுக்குக் கடந்த ஆண்டுகள் சரியாக அமையவில்லை என்றே சொல்லலாம். தற்போதைய குருவின் சஞ்சாரமும் விரயத்திலேயே இருக்கிறது. குரு பகவான் 12-ம் வீட்டில் அமர்ந்து பல சுபச் செலவுகளைத் தந்துகொண்டிருக்கிறார்.
பலரும் வீடுகட்டுதல், பிள்ளைகளுக்குத் திருமணம் முடித்தல் ஆகிய செலவுகளை எதிர்கொண்டு வருகிறார்கள். ஆனால், அக்டோபர் 18-ம் தேதி குருபகவான் ராசிக்குள்ளேயே வந்து உச்சம் அடைகிறார்.
‘ஜன்மகுரு வருகிறாரே என்ன செய்வாரோ’ என்று கவலைகொள்ள வேண்டாம். ராசியில் உச்சம் அடையும் குருபகவான் கடக ராசிக்குப் பெரிய தீமைகளைச் செய்யமாட்டார். என்றாலும் சில விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். சின்னச் சின்ன உடல் உபாதைகள் என்றாலும் அலட்சியம் காட்டாமல் உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள். இரவு உணவைச் சீக்கிரம் எடுத்துக்கொண்டு, சிறு நடைபோடும் பழக்கத்தை ஆரம்பியுங்கள். இரவு நேரப் பயணத்தை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள்.
குரு பார்வை பலன்கள்
ராசிக்கு 5-ம் வீட்டை குருபகவான் பார்க்கிறார். எனவே, நீண்ட காலமாகக் குழந்தை பாக்கியம்எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு மழலைச் செல்வம் கிடைக்க வாய்ப்பு உண்டு. பூர்விகச் சொத்துகளில் இருந்த பிரச்னைகள் தீரும். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று, விட்டுப்போன பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
ராசிக்கு 7-ம் இடத்தைக் குருபகவான் பார்ப்பதால் குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். கணவன் – மனைவியிடையே பாசம் அதிகரிக்கும். ஈகோ பிரச்னைகள் விலகும். வாழ்க்கைத் துணைவர் வழியில் நல்ல ஆதாயம் கிடைக்கும். வாழ்க்கைத்துணையின் உடல் நலமும் மேம்படும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு. பழைய பங்குதாரர்களும் மோதல்போக்கைக் கைவிட்டு இணக்கமாக நடந்துகொள்வார்கள்.
ராசிக்கு 9-ம் வீட்டை குருபகவான் பார்ப்பதால் குடும்பத்தின் வசதி வாய்ப்புகள் கூடும். தந்தைவழியில் நன்மைகள் நடைபெறும். அவரின் ஆரோக்கியம் மேம்படும். புதிய யோக அமைப்புகள் தேடிவரும்.
இந்த அதிசார குருப்பெயர்ச்சியில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியவர்கள் புனர்பூச நட்சத்திரக்காரர்கள்தான். ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை எழுத்துக்கொள்ள வேண்டிய வர்கள் அவர்கள்தான். மற்றபடி பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு மிகுந்த நற்பலன்களை இந்த குருப்பெயர்ச்சி வழங்கும் எனலாம்.
பரிகாரம்: திங்கட்கிழமைகளில் சிவாலயம்சென்று வழிபட்டு வாருங்கள். பிரதோஷ காலத்தில் நந்திக்கு நடைபெறும் அபிஷேகத்தை தரிசனம் செய்யுங்கள்.