அதிசார குருபெயர்ச்சி பலன்கள் 2025:கன்னி
புதன் பகவானின் அருள் பெற்ற கன்னி ராசி அன்பர்களே !!!தற்போது குருபகவான் 10-ல் அமர்ந்து பலன் தந்துகொண்டு இருக்கிறார். இந்த சஞ்சாரம் அவ்வளவு நற்பலன்களைத் தருவதல்ல. யாரிடம் எது பேசினாலும் பிரச்னை ஆவதை நினைத்து வருந்தும் நிலையே தொடர்கிறது.பணவரவும் கொஞ்சம் அளவோடு இருக்கும். வேலையிடத்திலும் தேவையற்ற சிக்கல்களும் மன உளைச்சலும் வந்துபோகும். அதிகாரிகளிடம் உரிமை எடுத்துப் பேசப்போக, அது பிரச்னையில் முடியும் நிலையே தொடர்கிறது.
ஆனால், ‘இந்த நிலையில் இருந்து விடுதலை’ என்பதைப்போல அக்டோபர் 18 முதல் 48 நாள்கள் குருபகவான் 11 – ல் வந்து அமரப்போகிறார். இந்த அதிசார குருப்பெயர்ச்சி உங்களுக்கு மிகுந்த நற்பலன்களை வாரிவழங்கப்போகிறது.
11-ம் வீட்டில் குருபகவான் அமர்வதால் மூத்த சகோதர உறவுகளால் நன்மைகள் உண்டாகும். சிலருக்குப் பங்குச் சந்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு லாபம் கிடைக்கப் போகிற காலமாக இது அமையும். அதேபோன்று வியாபாரம் அற்புதமாக இருக்கும். நல்ல வேலையாட்கள் அமைவார்கள். புதிய பங்குதாரர்கள் கிடைக்கவும் வாய்ப்புண்டு. புதிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும்.
குரு பார்வை பலன்கள்
குருபகவானின் பார்வை 3-ம் வீட்டில் படுவதால் இனி முடிவுகளில் தைரியம் வெளிப் படும். முயற்சிகள் வெற்றியாகும். இளைய சகோதரர்களின் உதவி கிடைக்கும்.
5-ம் வீட்டில் குருபகவானின் பார்வை படுவதால் நீண்ட காலமாகக் குழந்தை இல்லாமல் இருக்கும் தம்பதியர்க்குக் குழந்தைப் பாக்கியம் கிடைக்க வாய்ப்புண்டு.
குருபகவான் 7-ம் வீட்டைப் பார்ப்பதால் திருமண வயதில் உள்ள இளைஞர்களுக்குத் திடீர் திருமண யோகம் கூடிவரும். திருமண வாழ்வில் கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் நிலவும்.
பரிகாரம் : அருகில் இருக்கும் ராகவேந்திரசுவாமி பிருந்தாவனத்துக்குச் சென்று ஒருமுறை வழிபாட்டு வாருங்கள். வியாழக்கிழமைகளில் குருபகவானுக்கு வீட்டிலேயே நெய்தீபம் ஏற்றி வழிபடுங்கள்.