சனி பெயர்ச்சி பலன்கள் (2026-2028)
மேஷ ராசி |விரய சனி
06.03.2026 அன்று கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு வாக்கிய பஞ்சாங்கத்தின்படி சனி பெயர்ச்சி ஆகிறார்.
06.03.2026 முதல் 06.04.2026 வரை பூரட்டாதி நான்காம் பாதத்தில் பயணிக்கிறார்.
06.04.2026 முதல் 15.04.207 வரை உத்திரட்டாதியில் பயணிக்கிறார்.
15.04.2027 முதல் 24.04.2028 வரை ரேவதியில் பயணிக்கிறார்.
செவ்வாய் பகவானின் அருள் பெற்ற மேஷராசி அன்பர்களே!! இதுவரையில் உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்திருந்த சனி பகவான் இப்போது விரயச் சனியாக அதாவது ஏழரைச் சனியின் தொடக்கமாக வருகிறார். ஏழரைச் சனியாக இருந்தாலும் உண்மையாய் உழைப்பவருக்கு நல்ல பலன்களை சனி தருவார். இப்போது ராசிக்கு 12ல் சென்று மறைவதால் தடைப்பட்டு கொண்டிருந்த பல காரியங்களை இனி விரைந்து முடிப்பீர்கள்.
ஏழரை சனி தொடங்குகிறது என்ற பயம் இருந்தாலும், நேர்மையாய் கடமையை செய்பவருக்கு சனி என்றும் நன்மையை செய்வார். தற்சமயம் விரய வீட்டில் வந்து அமரும் சனி சுப விரயத்தையே தருவார். இதுவரை உங்கள் ராசி மீது விழுந்த சனியின் கோபப்பார்வை இனி விலகுவதால் சிந்தித்து செயலாற்றி தீர்க்க முடியாத பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்த பனிப்போர் நீங்கும். இருவரும் மனம் விட்டு பேசுவீர்கள். சனி பெயர்ச்சியால் மற்ற பிரச்சனைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதால் அதை இருவரும் இணைந்து சிந்தித்து ஒற்றுமையாய் சாதிப்பீர்கள்.
பிள்ளைகளை கூடா பழக்க வழக்கங்களிலிருந்து இருந்து மீட்பீர்கள். அவர்களின் விருப்பங்களையும் கேட்டு அறிந்து பூர்த்தி செய்வீர்கள். திருமணம், சீமந்தம், காதுகுத்து போன்ற சுபச் செலவுகள் அதிகரிக்கும். ஆன்மீகவாதிகள், மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். ஏழரை சனி தொடங்குவதால் எந்த பெரிய முடிவையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து எடுப்பது நல்லது.
சிறு தொழில் செய்வோருக்கு நல்ல லாபம் வரும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். தக்க சமயத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வேலை மாற்றம் உண்டாகும். புது பொறுப்புகளால் பணிச் சுமையும், மனக்கவலையும் ஏற்பட்டு விலகும். வீடு, வண்டி, வாகன செலவுகள் ஏற்படலாம். பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அரசு அனுகூலம் உண்டாகும். பூர்வீக சொத்து கைக்கு வரும். உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை. சிலருக்கு அரசு வேலை கிடைக்கும். நல்ல விலைக்கு பழைய மனையை விட்டுவிட்டு புது வீடு வாங்குவீர்கள்.
"தினம்தோறும் கூற வேண்டிய சனிபகவான் ஸ்லோகம்" "
நீலாஞ்சன ஸமாபாசம்
ரவிபுத்ரம் யமாக்ரஜம்
சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்
தம் நமாமி சனிச்சரம்
ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். ஆலயங்களை புதுப்பிக்க உதவுவீர்கள். இல்லத்தரசிகளை பொறுத்த வரை அடகு வைத்த தங்க நகைகளை மீட்பீர்கள். அலுவலகம் செல்லும் பெண்களை பொறுத்தவரை உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை என்றாலும் மனதில் தேவையில்லாத கவலைகள் தோன்றி மறையும். வியாபாரிகளை பொறுத்தவரை போட்டி பொறாமைகளையும் மீறி ஓரளவு தொழிலில் முன்னேற்றம் இருக்கும். ஆனால் மற்றவர்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைக்க கூடாது.
மருந்து, கமிஷன், மரவேலை, டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ், விவசாயம், பூ வியாபாரம், பேன்சி ஸ்டோர் வைத்திருப்பவர்களுக்கு எல்லாம் நல்ல லாபம் வரும். அலுவலகத்தில் வேலை செய்பவரை பொறுத்தவரை பணியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பண விஷயத்தில் எச்சரிக்கை தேவை.
சனி பகவான் பார்வை பலன்கள்
சனிபகவான் உங்கள் ராசிக்கு 2,6,9ம் இடங்களை பார்வை செய்வதால் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சனி பகவான் உங்கள் ராசிக்கு 2-ம் வேட்டை பார்ப்பதால் தேவையில்லாத வீண் விரயங்கள் வரலாம். குடும்பத்தில் மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.
சனி பகவான் 6-ம் வீட்டை பார்ப்பதால் வட்டிக்கு வாங்கிய கடனில் ஒரு பகுதியை கொடுப்பீர்கள். சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். தாய் வழி சொத்து வந்து சேரும். அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு.
சனிபகவான் உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் பார்ப்பதால் தந்தை உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
பலன் தரும் பரிகாரம்
குச்சனூர் சனீஸ்வர பகவானை வழிபடுவது நல்லது. அருகிலுள்ள சனீஸ்வரர் சந்நிதி அர்ச்சகருக்கு சமையல் சம்பந்தமான உதவி, பாத்திரம் போன்றவற்றை கேட்டறிந்து உதவவும்.
சுந்தர காண்டம் 65-ஆவது சர்க்கம், சூடாமணியை அனுமன் கொடுத்தல் பாராயணம் நல்லது. வெற்றிலை, தென்னை மற்றும் காராம் பசு பராமரிப்பு நல்லது.










