கஜ கேசரி யோகம்(Kajakesari Yogam):
நலன் தரும் யோகங்களில் கஜ கேசரி யோகம் (Kajakesari Yogam) சிறப்பான யோகமாகும். கஜ என்றால் யானை, கேசரி என்றால் சிங்கம். அதாவது யானையும் சிங்கமும் சேர்ந்திருந்தால் எவ்வளவு பலமோ அவ்வளவு பலமிக்கதாக இந்த யோகம் கூறப்படுகிறது.
கஜகேசரி யோக அமைப்பு என்பது மிகவும் எளிமையானது. ஒரு இராசியில் சந்திரன் இருக்கும் இடத்திற்கு கேந்திரத்தில் (நாற்கரத்தில்) வியாழன் இருப்பது கஜகேசரி யோகம் எனப்படும். ஒரு சாதகத்தில் இலக்கினம் எவ்வளவு சிறப்புடன் பார்க்கப்படுகிறதோ அதே அளவுகோலில் சந்திரன் இருக்கும் இடமும் அதாவது சந்திர இலக்கினமும் பார்க்கப்படுகிறது.
ஒரு சாதகத்தில் நாற்கர முனைகளும் (கேந்திரமும்) முக்கியம் என்பதை ஏற்கனவே நாம் பதிவு செய்துள்ளோம். சோதிடத்தில் பொதுவில் நிலவும் பேச்சு என்னவெனில் கேந்திரத்தில் சுபக் கோள்கள் நின்றால் கேந்திராதிபத்திய தோசம் ஏற்படும் என்பது. எனவே இலக்கினத்தினை அடிப்படையாகக் கொண்ட கேந்திரங்களில் (4, 7, 10 வீடுகள்) வியாழன் எனும் சுபக் கோள் நின்றால் கேந்திராதிபத்திய தோசம் ஏற்படும் எனக் கூறுவர். இதற்கு மாற்றுக் கருத்தும் உண்டு.
ஆனால் கஜ கேசரி யோகத்தில், சந்திர இலக்கினத்திற்கு கேந்திரத்தில் வியாழன் இருப்பதால் மேற்கூறிய விதி பொருந்தாமல் போய்விடுவதுடன், வியாழனின் பலன் அதிகரித்துக் காணப்படும் நிலை ஏற்படுகிறது. எனவே கஜகேசரி யோகம் என்பது சந்திர இலக்கினத்திற்கு கேந்திரத்தில் வியாழன் இருக்கும் நிலையில் வலிமை வாய்ந்த யோகமாகக் கணக்கிடப்படுகிறது.
கஜகேசரி யோகம்(Kajakesari Yogam) அமைந்த சாதகருக்கு கிடைக்கக் கூடிய பலன்கள் என்பது:-
1. புத்திக் கூர்மை
2. பலசாலி
3. செல்வந்தர்
4. மதிப்பு மிக்கவர்
5. ஊர் தலைவர்
6. அரசின் ஆதரவு
7. நீண்ட ஆயுள்
கஜகேசரி யோகமானது சந்திரனுக்கு கேந்திரத்தில் (நாற்கரத்தில்) வியாழன் இருந்தால் ஏற்படக்கூடியது என்றாலும், வேறு சில அமைப்புகளில் சந்திரனுக்கும் வியாழனுக்கும் தொடர்பு இருந்தாலும் ஏற்படும் என சில சோதிட நூல்கள் கூறுகின்றன.
1. சந்திரனுக்குக் கேந்திரத்தில் வியாழன் இருப்பது
2. வியாழனைச் சந்திரன் பார்ப்பது
3. சந்திரனை வியாழன் பார்ப்பது
4. சந்திரனும் வியாழனும் பரிவர்த்தனை ஆவது
இங்கு முதல் கருத்தானது அடிப்படையான விதி என்பதால் மாற்றுக் கருத்து இல்லை.
இரண்டாவது கருத்தின்படி, சந்திரன் வியாழனைத் தமது ஏழாம் பார்வையால் மட்டுமே பார்க்க முடியும் என்பதாலும், அதாவது அந்த நிலையில் வியாழனானது சந்திரனுக்கு 7-ம் இடத்தில் (கேந்திரத்தில்) இருக்கும் என்பதாலும் இந்தக் கருத்தும் பொருந்துகிறது.
மூன்றாவது கருத்தின்படி, வியாழனுக்கு 5, 7, 9-ம் பார்வைகள் உண்டு என்பதால், 7-ஐத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், வியாழனானது 5-ம் பார்வைக்கு சந்திரனிலிருந்து 9-ம் இடத்திலும், 9-ம் பார்வைக்கு சந்திரனிலிருந்து 5-ம் இடத்திலும் இருக்க வேண்டும். அவை திரிகோண இடங்கள் என்பதால், கஜ கேசரி யோகம்(Kajakesari Yogam) அமைய வாய்ப்பில்லை.
நான்காவது கருத்தின்படி, பரிவர்த்தனை ஏற்பட வேண்டுமென்றால், சந்திரன் தனுசு அல்லது மீனத்திலும், வியாழன் கடகத்தில் உச்சமாகவும் இருக்க வேண்டும். அந்த நிலையில் பரிவர்த்தனையானது சந்திர இலக்கினத்திற்கு 6-8, அல்லது 5-9 எனும் நிலையில் இருக்க நேரிடும். இதுவும் கேந்திர விதிக்கு பொருந்தவில்லை என்பதால் இதனையும் தவிர்த்து விடலாம்.
எனவே, கஜகேசரி யோகம்(Kajakesari Yogam) என்பது சந்திரனுக்குக் கேந்திரத்தில் வியாழன் இருப்பது என்பதே சரியானதாக இருக்கிறது.