திவ்ய தேசம்-திருக்கண்டியூர்
திவ்ய தேசம்-7
ஊருக்கு ஊர் தேசத்திற்கு தேசம் . மொழிகள் பழக்க வழக்கங்கள் வித்தியாசப்பட்டாலும் பக்தி மாத்திரம் வித்தியாசப்படுவதில்லை. மனத்தின் அடித்தளத்திலிருந்து எழும் பக்திக்கு எதுவுமே நிகரில்லை.பெருமாள் ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு அதிசயங்களைச் செய்து வருகிறார்.
அதே போலத்தான் தஞ்சை திருவையாறு மார்க்கத்தில் 10 கிலோ மீட்டர் தூரத்தில் , திருவையாற்றிலிருந்து தெற்கே இரண்டு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள கண்டியூர் கமலநாதப் பெருமாள் , சிவபெருமானுக்கே
சாபத்தை தீர்த்தார்.
அஷ்டவீரத்தலத்திற்கு வடக்கே குடமுருட்டியாறும் திருவெண்ணாற்றுக்கும் இடையில் ஒரு கிரவுண்ட் அளவில் மதிற் சுவற்றின் பிரம்மாண்டமான அரணுக்குள் இரண்டு பிராகாரங்களுடன் மூன்று நிலை கொண்ட இராஜ கோபுரத்துடன் கண்டியூர் கோயில் களை கட்டிக் கொண்டிருக்கிறது.
மூலவர் அரன் சாபந் தீர்த்த பெருமாள் , நின்ற கோலத்தோடு அன்றலர்ந்த மலரெனக் கருணையே உருவாகக் கொண்டு காட்சியளிக்கிறார்.
- உற்சவர் கமலநாதன்
- தாயார் கமலவல்லி நாச்சியார்
- கோயிலின் விமானம் கமலாக்ரிதி
- தீர்த்தம் கபால தீர்த்தம்.
பிரம்மாண்ட புராணத்தில் இத்தலத்தின் வரலாறு அருமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது.அகஸ்தியருக்கு பெருமாள் காட்சி கொடுத்த ஸ்தலம் என்ற பெருமையும் உண்டு.
ஏறத்தாழ திருக்கரம்பனூர் கோயிலின் வரலாற்றைப் போலத்தான் இந்தக் கோயிலின் வரலாறும் சொல்லப்படுகிறது.
சிவபெருமானுக்கு ஐந்து தலைகள் இருப்பது போல் பிரம்ம தேவனுக்கும் ஐந்து தலைகள் இருந்தது.ஒருசமயம் கயிலாயத்தில் தியானத்தில் இருந்த பார்வதி தேவி சற்றே கண் விழித்துப் பார்க்கும் பொழுது , சிவபெருமானைக் காணவந்த பிரம்மனை , தன்னுடைய கணவர் தான் என்று நினைத்து பாத பூஜை செய்ய ஆரம்பித்தாள் பிரம்மனும் தனக்கு பார்வதி தேவி மரியாதை செய்கிறார் என்று ஏற்றுக் கொண்டார்.அச்சமயம் அங்கு வந்த சிவபெருமான் , கோபம் கொண்டு பார்வதியை நோக்க அப்பொழுதுதான் பார்வதிக்கு தான் செய்த தவறு புரிந்தது.
இதற்கெல்லாம் காரணம் தன்னைப் போல் ஐந்து தலை கொண்ட பிரம்மன்தான் என்று உணர்ந்து பிரம்மனின் ஒரு தலையைக் கொய்து விட்டார் .இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. பிரம்மனின் கபாலம் சிவபெருமான் கையோடு ஒட்டிக் கொண்டு விட்டது. எங்கு சென்றாலும் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் போகாததால் கடைசியில் கண்டியூர் கோயிலில் வந்து பெருமாளிடம் முறையிட்டார்.பெருமாளும் சிவபெருமானின் பிரம்மஹத்தி தோஷத்தையும் அவர் கையிலிருந்த கபால தோஷத்தையும் போக்கினார்.
சிவபெருமானுக்குரிய சாபத்தைப் போக்கியதால் இறைவனுக்கு அரன் சாபந் தீர்த்தப் பெருமாள் என்று பெயர் ஏற்பட்டது . சிவபெருமான் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடியதால் இங்குள்ள தீர்த்தத்திற்கு கபால தீர்த்தம் என்று பெயர்.பிரம்மாவும் . சரஸ்வதியுடன் சிவபெருமானுக்கு நெருங்கி , கருவறைக்கு வடக்கே முதல் பிரகாரத்தில் இருக்கிறார்கள்.
திருமங்கையாழ்வார் -இக்கோயிலைப் பற்றி பாசுரங்கள் இயற்றி இருக்கிறார். சோழநாட்டுத் திருப்பதிகளில் முன்னணியில் வைக்கிறது.
பரிகாரம் :
சிவதோஷம் காரணமாக மனநிலை சரியில்லாதவர்கள் – ஆத்திரத்தால் குடும்பத்தைக் கெடுத்து விட்டு அந்த பாவத்தை செய்து திண்டாடுபவர்கள் , சிவன் சொத்தைக் கொள்ளையடித்தவர்கள்.சிவ பக்தர்களை எட்டி உதைத்தவர்கள் , மனைவி மீது சந்தேகம் கொண்டு படுபாதகச் செயல்களைச் செய்தவர்கள்.பொறாமை காரணமாக ஏவல் , சூன்யம் செய்து பாவத்தால் பீடிக்கப்பட்டவர்கள்.அத்தனை பேர்களும் இத்தலத்திற்கு வந்து , கபால தீர்த்தத்தில் நீராடி பெருமாளை வேண்டிக் கொண்டால் அவர்களது பாவங்கள் மன்னிக்கப்படும்.பெருமாள் கருணையும் மகாலெஷ்மியின் அருளும் கிடைப்பதால் பெரும் பேறு பெற்றவர்களாக மாறி விடுவார்கள் என்பது திண்ணம்.
கோவில் இருப்பிடம் :