திவ்ய தேசம்– திருக்கூடலூர்
திவ்ய தேசம்-8
ஒவ்வொரு தலங்களிலும் பெருமாள் ஒவ்வொரு விதமான திருவிளையாடல்களைச் செய்து , அதில் தானும் மகிழ்ச்சியடைகிறார். பக்தர்களையும் மகிழ்வடைய வைக்கிறார். அளவில்லா விளையாட்டுக்கள் ! அத்தனையும் பொன் முத்துக்கள் . கிருஷ்ணர் தன் சிறுவயதில் எப்படியெல்லாம் விளையாடினார். அந்த விளையாட்டு பின்னர் பகவத் கீதை அருளும் அளவுக்கு எப்படியெல்லாம் மாறியது ! என்பதை நினைக்கும் பொழுது பகவான் எப்போது வருவார். எந்த உருவத்தில் வருவார் என்று நம்மை ஏங்க வைக்கிறது.
இதோ இப்போது நாம் திருவையாறு கும்பகோணம் பாதையில் பதினொரு கிலோமீட்டர் தொலைவில் ஆடுதுறைப் பெருமாள் கோயிலில் குடிகொண்டிருக்கும் வையங்காத்த பெருமாளைச் சேவிக்கலாம்.
- மூலவரின் திருநாமம் வையங்காத்தப் பெருமாள் உய்யவந்தார். உத்ஸவருக்கும் இதே பெயர்.
- தாயார் பத்மாஸனி , புஷ்பவல்லி.
- கோயிலின் தீர்த்தம் காவிரிநதி . சக்கரத்தீர்த்தம்.
- விமானம் சுத்த ஸத்வ விமானம்.
முனிவர்களில் பிரசித்திப் பெற்ற நந்தக முனிவருக்கு பகவான் தரிசனம் தந்த ஸ்தலம் என்பது மிகவும் சிறப்பான செய்தி.
தேவர்களிடமிருந்தும் பக்தர்களிடமிருந்தும் விடுபட்டு – சிலநாட்கள் ஒய்வெடுக்க நினைத்த பெருமாள் இந்த திருத்தலத்திற்கு வந்து தங்கியிருந்தார்.இதுதான் சரியான சமயம் என்று நந்தக முனிவர் பெருமாள் தரிசனம் கிடைக்க காத்து நின்றார். ஆனால் பெருமாள் தரிசனம் தரவில்லை இச்சமயத்தில் ஸ்ரீமந் நாராயணனைத் தேடி இந்திரன் முதலான எல்லாத் தேவர்களும் எங்கெல்லாமோ அலைந்து கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களைச் சந்தித்த ‘நந்தகமுனி ‘ பெருமாள் இங்குதான் ரகசியமாக ஓய்வெடுத்து இருக்கிறார். நானும் அவருடைய தரிசனத்திற்காகத் தான் காத்து நிற்கிறேன் என்று சொன்னதும் தேவர்களும் நந்தக முனிவரோடு சேர்ந்து ஒன்றாக இந்தக் கோயிலின் முன்பு கூடினர். இதையறிந்த பெருமாள் இனியும் ஓய்வெடுக்க முடியாது என்பதை உணர்ந்து முதலில் தன் பக்தரான நந்தக முனிவருக்கும் பின்பு இந்திரன் உள்ளிட்ட அனைத்துத் தேவர்களுக்கும் பிரத்திட்சயமாக காட்சி தந்தார். எல்லோரும் கூடி நின்று பெருமாள் தரிசனத்திற்காக காத்து நின்றதால் இதற்கு கூடலூர் என்ற பெயர் வந்தது.
பின்னொருசமயம் காவிரியின் வெள்ளத்தால் இந்தக் கோயில் மூழ்கியது.மண்மேடாக ஆகியது. அப்பொழுது ராணி மங்கம்மாளின் சொப்பனத்தில் பெருமாள் தோன்றி இந்தக் கோயிலைப் பற்றிச் சொல்ல அரசியாரும் இக்கோயிலைத் தோண்டி வெளியுலகத்திற்கு கொண்டு வந்தார். அதைத்தான் நாம் இப்பொழுது காண்கிறோம்.
சிறுகோயில் என்றாலும் பெருமாளே மனமுவந்து இங்கு வந்து தங்கியதால் மிகவும் பெருமை உடையது.திருமங்கையாழ்வார் இந்தக் கோயிலைப் பற்றி 10 பாசுரங்கள் பாடியிருக்கிறார். காவிரி – ஒருசமயம் மிக வேகமாக வந்த பொழுது – பகவான் அதன் வேகத்தைக் குறைத்து – அமைதியாக்கி சாந்தமாக மாற்றி விட்டதாக ஒரு வரலாறு சொல்லப்படுகிறது.
பரிகாரம் :
பகவானை நேரிடையாக தரிசிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பக்தியினால் துடிப்பவர்களுக்கு இந்த கோயிலில் வந்து பிரார்த்தனை செய்தால் அவர்களது ஆசைகளை நிறைவேற்றி வைப்பார்.
கேதுவால் நாம் மேலும் பலன்கள் பெற செல்ல வேண்டிய தலம்
பேசாத குழந்தைகள் அங்கஹீனம் உள்ளவர்கள், தெரியாமல் செய்த தவறுக்குத் தண்டனை பெறுபவர்கள்,நினைத்தது நடக்காமல் தம் வாழ்க்கை முடியப் போகிறதே என்று கவலைப்படுபவர்களுக்கு ஜகத்ரட்சகனாக இருந்து வையங்காத்த பெருமாள் எப்படியாவது எந்த விதத்திலேயாவது வந்து தரிசனம் கொடுத்து வாழ்வை உய்விப்பார் என்பது நிச்சயம்..
கோவில் இருக்கும் இடம் :