தர்மகர்மாதிபதி யோகம்
ஜோதிட சாஸ்திரத்தில் பலவிதமான யோகங்கள் கூறப்பட்டுள்ளன. அதில் ஒரு மனிதன் சகல ஐஸ்வர்யங்களையும் பெற்றுவாழ முதல்தரமான யோகமாகக் கூறப்பட்டிருப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும்.
காலபுருஷ தத்துவப்படி , காலபுருஷ லக்னம் மேஷமாகும். அதற்கு ஒன்பதாம் வீடான தனுசு தர்ம ராசியாகும். பத்தாம் வீடான மகரம் கர்ம ராசியாகும் காலபுருஷ ஒன்பதாமதிபதி , தர்மாதிபதியான குருவுக்கும் கர்மாதிபதியான சனிக்கும் எந்த வகையில் சம்பந்தம் இருந்தாலும் அது தர்மகர்மாதிபதி யோகமாகும்.
குரு , சனி சம்பந்தமென்பது முன்ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் ஏற்படுவதாகும்.தர்மம் என்றால் , ஒருவர் தனது செய்கையால் தன் குடும்பத்தினருக்கும் , தன் சந்ததியினருக்கும் , தன் தலைமுறையினருக்கும் சேர்த்துவைக்கும் பாவ புண்ணியங்கள். கர்மம் என்றால் தான் செய்த , செய்யும் தொழில்மூலம் தன் வாரிசுகளுக்கும் , தன் தலைமுறையினருக்கும் சேர்த்துவைக்கும் பாவ புண்ணியங்கள்.
ஒருவருக்கு இந்த கிரக இணைவால் வாழ்நாள் முழுவதும் புண்ணியப் பலன்கள் கிடைக்க ஜனனகால ஜாதகத்தில் குருவும் சனியும் சுப வலிமை பெறவேண்டும் நீசம் , வக்ரம் , அஸ்தமனமாகாமல் இருப்பதோடு அஷ்டம் பாதக ஸ்தானத்தோடு சம்பந்தம் பெறாமல் இருக்கவேண்டும். இவ்வாறு இருந்தால் நூறு சதவிகிதம் சுபத்தன்மையுடன் வரமாக செயல்படும் . இந்த கிரகச் சேர்க்கை இருப்பவர்களின் குடும்பமே கஷ்டப்பட்டாலும் , ஜாதகர் மட்டும் எப்படியும் நல்ல நிலைக்கு வந்து விடுவார்.
ஜனனகால ஜாதகத்தில் குருவும் சனியும் அஷ்டம பாதக ஸ்தானத் தோடு சம்பந்தம் பெற்றாலும் , நீசம் , அஸ்தமனம் , வக்ரம் பெற்றாலும் , இந்த கிரக இணைவு அசுபத் தன்மையோடு சாபமாக- பிரம்மஹத்தி தோஷமாக செயல்படும்.
இவர்களுக்கு வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அதைப் பயன்படுத்த முடியாது.இதில் குரு , சனி சேர்க்கை மற்றும் சமசப்தமப் பார்வை நூறு சதவிகித நற்பலன் தரும்.
சனி மட்டும் குருவைப் பார்ப்பதும் , குரு மட்டும் சனியைப் பார்ப்பது ஐம்பது சதவிகிதப் பலன் தரும். குரு , சனி சேர்க்கையை செவ்வாய் பார்த்தாலும் அல்லது சேர்ந்தாலும் , அந்த நபர் எவ்வளவு சம்பாதித்தாலும் தங்காது. அல்லது உழைப்புக்கேற்ற ஊதியம் இருக்காது.வாழ்க்கை ஒரு போராட்டமாக இருக்கும். மன உளைச்சல் அதிகமாகிக்கொண்டே இருக்கும்.
ஒரு ஜாதகத்தில் தர்மகர்மாதிபதி யோகம் சுபத் தன்மையோடு செயல்பட்டால் , சிறிய உழைப்பில் பெரும்பொருள் சேரும் . அசுபத் தன்மையோடு செயல்பட்டால் சிறிய பொருளுக்கு அதிகம் உழைக்கநேரும். தர்மகர்மாதிபதி யோகம் மிகுந்த சுபத்தன்மையுடன் இயங்கினால் , தனது உழைப்பிற்குக் கிடைக்கும் வெகுமதியைக்கூட கொரவம் கருதி வாங்க மறுப்பவர்கள் உண்டு.
பரிகாரம்
ஜனனகால ஜாதகரீதியாக குரு , சனி சம்பந்தமானது அஷ்டம பாதக ஸ்தானத்தோடு இணைந்து மிகுதியான பொருள் பற்றாக்குறையை அனுபவிப்பவர்கள் அல்லது குரு , சனி சம்பந்தம் இல்லாமையால் உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லாதவர்கள்
வியாழக்கிழமை இரவு 7:00-8:00 மணி வரையிலான சனி ஓரையில் காலபைரவ அஷ்டகம் படித்துவர , உழைப்பிற் கேற்ற ஊதியம் கிடைக்கும் .