திவ்ய தேசம்- குடமாடு கூத்தன் பெருமாள்
திரு அரிமேய விண்ணகரம் ( திருநாங்கூர் )
பக்தர்களது மனம் புண்படக்கூடாது என்பதற்காக பகவான் நிறைய அவதாரங்களை அங்கங்கே அப்போதைக்கப்போது எடுப்பது உண்டு.
முன்பெல்லாம் அரக்கர்கள் என்ற தனிப்பிரிவே இருந்தது.கொடுமைகளைச் செய்வதற்காகவே பிறந்தவர்கள். இன்று அரக்கர்கள் பாதி போ மனிதர் உருவத்திலேயே இருந்து மனிதர்களையேக் கொடுமை செய்து கொண்டு வருகிறார்கள். இவர்களைத் திருத்துவதற்காகவே திருமால் அவதாரம் எடுத்த பல தலங்களில் திரு அரிமேய விண்ணகரம் என்றழைக்கப்படும் குடமாடுங் கூத்தர் கோயில் ஒன்று உண்டு.
சீர்காழியிலிருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது இந்த புண்ணிய ஸ்தலம்.
மூலவர் குடமாடு கூத்தர்.
தாயார் அம்ருத கடவல்லி.
இறைவன் வலது காலை கீழே தொங்க விட்டு இடது காலை மடக்கி வைத்து அமர்ந்த நிலையில் சேவை சாதித்து வருகிறார். அருகில் திருமகள் பூமாதேவியும் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார்கள்.
தீர்த்தம் அமுத புஷ்கரணி.
விமானம் உச்சங்க விமானம்.
உற்சவர் நான்கு கைகளைக் கொண்டு சதுர்புஜ கோபாலன் என்னும் திருநாமத்தோடு அருள்பாலிக்கிறார்.
முன்னொரு சமயம் பெருமாளுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு கைங்கர்யத்தில் அன்றாடம் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் உதங்க மகரிஷி. ஆனால் அரக்க குணம் கொண்ட சிலர் உதங்க மகரிஷியின் கைங்கரியத்தைத் தடுக்க என்ன என்ன செய்யக் கூடாதோ அத்தனையும் செய்து பெருமாள் கைங்கரியம் செய்யவிடாமல் தடுத்தனர்.இறைசேவை செய்யும் பொழுது இப்படிப்பட்ட தர்மசங்கடம் வரத்தான் செய்யும் . இதுவும் திருமாலின் திருவிளையாடலில் ஒன்றுதான் என்று நினைத்து மௌனியாக , தொடர்ந்து திருமாலுக்குச் சேவை செய்து கொண்டிருந்தார். திருமாலுக்கு உதங்க முனிவர் படும் கஷ்டம் தெரிந்தது. ஆனால் அத்தனையும் சகித்துக் கொண்டு சேவை செய்யும் இவர் ஒரு சமயம் கூட வாய் விட்டு உதவி கேட்கவில்லை என்பதால் இப்படிப்பட்ட பக்தருக்குத்தான் நாம் வலியச் சென்று உதவி செய்ய வேண்டும் என்று நினைத்து பெருமாள் அந்த கொடுங்கோலர்களை அழித்து , உதங்க மகரிஷிக்கு நேரிடையாகத் தரிசனமும் கொடுத்த இடம்தான் திருஅரிமேய விண்ணகரம் என்னும் குடமாடுங்கூத்தர் கோயில்.
திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற தலம்.
பரிகாரம்:
துன்பங்கள் எந்த நேரத்தில் எந்த திசையிலிருந்து எவர் மூலம் வந்தாலும் கவலைப்பட வேண்டாம் . குடமாடுங் கூத்தர் பெருமாளுக்கு நிச்சயம் தெரிந்துவிடும் இவர் உங்கள் கவலைகளைப் போக்க எப்போது வேண்டுமாலும் வருவார் . உங்களது நல்ல மனதை நோகடிக்கின்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை வீழ்த்தி அவர்களிடமிருந்து காப்பாற்றுவார் . பிரார்த்தனை செய்யாமலேயே வந்து கவலையைப் போக்கும் ஒரே தெய்வம் என்று குடமாடுங் கூத்தர் கோயிலுக்குப் பெருமை உண்டு . இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் உடனடி நல்ல பலன் நிச்சயம் . அதோடு உதங்க முனிவரோடு அருள் வாழ்த்துக்களையும் பெறலாம் . மிக மிக அருமையான இயற்கையெழில் சூழ்ந்த புண்ணியத் திருக்கோயில் இது.