அதிசார குரு பெயர்ச்சி பலன்கள் 2025 : கும்பம்
சனி பகவான் அருள் நிறைந்த கும்பராசி அன்பர்களே !!! உங்களுக்குத் தற்போது குருபகவான் 5-ல் அமர்ந்து அற்புத பலன்களைக் கொடுத்துவருகிறார். குருவின் பார்வை பெரிய அளவில் தீமைகளை அண்டவிடாமல் உங்களைக் காத்து வந்தது.அக்டோபர் 18-ம் தேதி முதல் அவர் 6-ல் சென்று மறைகிறார். மறைந்த குரு எப்படிப் பட்ட இன்னல்களைக் கொடுப்பாரோ’ என்று கலங்கவேண்டாம். கொஞ்சம் நிதானத்துடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொண்டால் பிரச்னை இல்லை.
இதுவரை நீங்கள் யாரை நம்பிக் கொண்டிருந் தீர்களோ, அவர்களே உங்களுக்கு எதிராக செயல்பட வாய்ப்பிருக்கிறது என்பதால் யாரையும் நம்பி ஒரு செயலில் இறங்க வேண்டாம். புதிதாக அறிமுகமாகி நீண்டநாள் பழகியவர்களைப் போலப் பாசம் காட்டும் நண்பர்களை நம்பி எந்தப் பெரிய முடிவையும் எடுக்க வேண்டாம்.
குருபகவான் 6-ம் வீட்டில் அமர்வதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். சின்னச் சின்ன உபாதைகள் ஏற்பட்டாலும் உரிய மருத்துவ ஆலோசனை எடுத்துக்கொள்ளுங்கள்.
குரு பார்வை பலன்கள்
ராசிக்கு 10-ம் இடத்தை குருபகவான் பார்ப்பதால் வேலையிடத்தில் பொறுப்புகள் கூடும். எனினும் அதற்கேற்ப சலுகைகளும் கிடைக்கும். மேலதிகாரிகளை அனுசரித்துப் போங்கள்.
ராசிக்கு 12-ம் வீட்டை குரு பார்ப்பதால்,கோயில்களுக்குச் சென்று வழிபாடுகள் செய்யும் வாய்ப்புகள் கூடிவரும். செலவுகளைச் சுபச்செலவுகளாக மாற்றிக்கொள்வது நல்லது. குலதெய்வக் கோயிலுக்கு உங்களால் ஆன உதவியைச் செய்யுங்கள்.
ராசிக்கு 2-ம் வீட்டை குரு பார்ப்பதால்,இதுவரை சலிப்பாகப் பேசிய நிலை மாறும். இனிமையாகவும் நம்பிக்கையோடும் பேசத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் சச்சரவுகள் குறையத் தொடங்கும். விட்டுக்கொடுத்துப் போக ஆரம்பிப்பீர்கள். பணவரவும் ஓரளவு சீராகும்.
பரிகாரம்: பிரதோஷ நாளில் சிவாலய தரிசனம் செய்யுங்கள். வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து மகான்களை வழிபடுவது விசேஷம்.குரு பகவான் உங்கள் வாழ்வில் இருக்கும் தடைகளை விலக்கி நற்பலன்களை வழங்குவார்.