அதிசார குருபெயர்ச்சி பலன்கள் 2025:மிதுனம்
புதன் பகவானின் அருள் பெற்ற மிதுன ராசி அன்பர்களே !!!உங்களுக்குத் தற்போது ஜன்ம குருவாக ராசியிலேயே சஞ்சாரம் செய்து பலன் தருகிறார், குரு பகவான்.இதனால் பெரும்பாலான மிதுனராசிக்காரர்கள் ‘என்ன வாழ்க்கை இது… நம்ம கையில் எதுவுமே இல்லை’ என்பது போன்ற தத்துவங்களைப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் அக்டோபர் 18-ம் தேதி முதல் டிசம்பர் 5 வரை பெரிய உற்சாகமான மாற்றத்தைத் தரப் போகிறார் குருபகவான்.
குரு உங்கள் ராசிக்கு 2-ம் இடமான கடகத்தில் வந்து அமர்ந்து உச்சம் அடையப் போகிறார். இனி, கவலைகள் எல்லாம் மறையும். பணவரவு அதிகரிக்கும். உடலில் பெரிய நோய் இருப்பது போன்ர கவலைகள் விலகி, ஆரோக்கியமாக இருப்பதை உணர ஆரம்பிப்பீர்கள். குடும்பத்திலும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
பெண்ணுக்கு வரன் தேடிக்கொண்டிருந்த அன்பர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்; நல்ல இடத்தில் மணமகன் அமைந்து கெட்டிமேளம் கொட்டும் வாய்ப்பு அமையும். இதுவரை நல்ல வேலை இல்லாமல் திண்டாடியவர்களுக்கு, தகுதிக்கேற்ற நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். நகைகள் வாங்க யோகம் வாய்க்கும்.
குரு பார்வை பலன்கள்
ராசிக்கு 6-ம் வீட்டை குருபகவான் பார்ப்பதால் பழைய கடனை அடைக்கும் வாய்ப்பு உண்டாகும். எதிரிகள் பகையை மறந்து சமரசம் ஆவார்கள். சிலர், உங்கள் வழியில் இருந்து விலகிப் போவார் கள். எதிலும் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியம் அதிகரிக்கும். மருத்துவச் செலவுகள் குறையும்.
ராசிக்கு 8-ம் வீட்டை குருபகவான் பார்ப்பதால்,திடீர்ப் பயணங்களால் ஆதாயம் வரும். சிலருக்கு இதுவரை வளர்ச்சி காணாமலேயே இருந்த சில பங்குச் சந்தை முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். எதிர்பாராத வகையில் பணவரவு உண்டாகி, உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.
ராசிக்கு 10-ம் வீட்டை குரு பார்ப்பதால், வேலையில் ஸ்திரத் தன்மை உண்டாகும். பணியில் உங்கள் கை ஓங்கும். வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கும் அன்பர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. இருக்கும் வேலையில் இருந்து வேறு வேலைக்கு மாறும் முயற்சிகள் நல்ல முறையில் முடியும். அலுவலகத்தில் வரவேண்டிய சலுகைகள் கிடைக்கும். இழுபறியாக இருந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கைக்கு வந்து சேரும். குறிப்பாக திருவாதிரை நட்சத்திரக் காரர்களுக்கு, இந்த அதிசார குருப்பெயர்ச்சி காலம் பொக்கிஷமான காலமாக அமையும்.
மிதுன ராசிக்காரர்களுக்கு சனிபகவான் 10-ல் அமர்ந்திருப்பதால் பணியிடத்தில் ஏற்பட்ட அவமானங்கள் இந்தக் காலகட்டத்தில் விலகி மரியாதையும் கெளரவமும் ஏற்படும். நினைத்ததை நினைத்த வண்ணம் முடித்துக் காட்டி வெற்றிவாகை சூடுவீர்கள்.
பரிகாரம்: புதன் கிழமைகளில் விஷ்ணு ஆலயங்களுக்குச் சென்று வணங்குங்கள். சந்நியாசிகள் மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கு வஸ்திர தானம் செய்யுங்கள்.