அதிசார குருபெயர்ச்சி பலன்கள் 2025:ரிஷபம்
சுக்ர பகவானின் அருள் பெற்ற ரிஷப ராசி அன்பர்களுக்குத் தற்போது இரண்டாம் வீட்டில் குருபகவான் இருந்து அருள் செய்துகொண்டிருக்கிறார். தேவையான பணவரவு வருவதால் பெரிய கவலைகள் இல்லாமல் இருக்கிறது என்கிற நிலைமைதான்.
அக்டோபர் 18-ம் தேதி குருபகவான் மூன்றாம் இடமான கடகத்தில் அடியெடுத்து வைக்கிறார். ‘மூன்றாம் இடத்து குரு முடகுரு’ என்ற ஒரு ஜோதிட வழக்கு ஒன்று உண்டு. எனவே இந்த குருப்பெயர்ச்சி என்னவெல்லாம் செய்யுமோ என்கிற அச்சம் ஒரு சில ரிஷப ராசிக் காரர்களுக்கு இருக்கும். ஆனால் அப்படிப்பட்ட பயம் ஏதும் தேவையில்லை.
இயல்பிலேயே குருபகவான் ரிஷப ராசிக் காரர்களுக்கு லாபாதிபதி மட்டுமல்ல அஷ்டமாதி பதியும் கூட என்பதை நினைவில்கொள்ளுங்கள். அஷ்டமாதிபதி தனக்கு அஷ்டமத்தில் சென்று மறைவது, விபரீத ராஜயோகத்தைக் கொடுக்கக் கூடிய அமைப்பு. பல காலம் முயற்சித்தும் கொடுத்துத் திரும்ப வராமல் இருந்த கடன்தொகை கைக்குவரும். செல்வாக்கு அதிகரிக்கும். எல்லாவகையிலும் நல்லது நடக்கும்.
திடீரென சொத்து வாங்கும் அமைப்பு உண்டு. நட்பு வட்டம் விரிவாகும். அரசு சார்ந்த விஷயங்கள் நல்லபடியாக முடியும். முயற்சிகள் அனைத்துமே வெற்றியாக முடியும். இதுவரை உங்கள் முன்னேற்றத்துக்குத் தடையாக இருந்தவர்கள் விலகிப்போவார்கள்.
குரு பார்வை பலன்கள்
குருபகவானின் பார்வை 7-ம் வீட்டில் படுவதால் கணவன் மனைவிக்கு இடையே இருந்த ஈகோ விலகி, அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர வாய்ப்புண்டாகும்.திருமணத்துக்காகக் காத்திருக்கும் ரிஷப ராசி இளைஞர்களுக்கு நல்ல வரன் அமையும். திருமணப் பேச்சுவார்த்தை சுகமாகும்.
9-ம் வீட்டை குருபகவான் பார்ப்பதால் நகைகள், ஆடம்பரப் பொருள்கள் வாங்குவதற்கான யோகம் வாய்க்கும். தந்தையின் ஆரோக்கியம் மேம்படும். குலதெய்வக் கோயிலுக்குப் போய் வழிபட்டுவர, தடைகள் அகலும்.
குருபகவான் லாப ஸ்தானத்தைப் பார்ப்பதால் சேமிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குறிப்பாக ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு மிகப்பெரிய ராஜயோகம் காத்திருக்கிறது என்று சொல்லலாம். வியாபாரிகளுக்கு இது ஏற்றமான காலமாக இருக்கும். பல புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். அதன்மூலம் நல்ல லாபம் வாய்க்கும். வேலையிடத்தில் இதுவரை தொல்லையாக இருந்த அதிகாரி சமாதானப் போக்கைக் கடைப்பிடிப்பார். சிலருக்குச் சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு கிடைக்கும். பணியில் எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் சிவ வழிபாடு செய்யுங்கள். வெள்ளீஸ்வரர் என்னும் திருநாமத்தோடு ஈசன் அருள்பாலிக்கும் தலங்களுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள்.