அதிசார குருபெயர்ச்சி பலன்கள் 2025:துலாம்
சுக்ர பகவானின் அருள் பெற்ற துலாம் ராசி அன்பர்களே !!!தற்போது குருபகவான் சாதகமாகவே 9-ம் வீட்டில் சஞ்சரிக்கிறார். பாக்கிய குரு உங்களுக்குப் பல நன்மைகளைத் தந்து கொண்டிருக்கிறார். அக்டோபர் 18 முதல் 10-ம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார்.
’10-ல் குரு வந்தால் பதவி பறிபோகும் என்பார்களே… என்ன ஆகுமோ?’ என்று இந்த அதிசார குருப்பெயர்ச்சி குறித்துக் கவலைப்பட வேண்டாம். பலவிதத்திலும் நற்பலன்களையே உங்களுக்குக் குருபகவான் தர இருக்கிறார்.
என்றாலும் யாரையும் எதிலும் எளிதில் நம்ப வேண்டாம். நீண்டகால நண்பர்கள், உறவினர்கள் என்றாலும் ஆராயாமல் எதையும் அவர்களிடம் சொல்லவோ, ஒப்படைக்கவோ வேண்டாம். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்லிக்கொண்டு இருக்காதீர்கள். மற்றவர்களின் குடும்ப விவகாரங்களிலும் மூக்கை நுழைக்க வேண்டாம்.
10-ல் குருபகவான் அமர்வதால், பெரிய பொறுப்புகள் -பதவிகளில் இருப்பவர்கள் அதை ராஜினாமா செய்யவேண்டிய தர்ம சங்கடமான சூழ்நிலைகள் உருவாகும். எதிரிகளை நேருக்கு நேர் சந்தித்து வெல்லலாம் என நினைக்க வேண்டாம். கனிவான வார்த்தைகளின் மூலம் காரியம் சாதிக்கப் பாருங்கள்.
குரு பகவான் பார்வை பலன்கள்
குரு பகவானின் பார்வை 2-ம் வீட்டில் விழுவதால் வாக்கில் சாதுர்யம் பிறக்கும். பண வரவில் இருந்துவந்த தடைகள் விலகித் தேவைக்குப் பணம் வரும். குடும்பத்திலும் நிம்மதி பிறக்கும். குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடந்துகொள்வது மகிழ்ச்சி தரும்.
குருபகவானின் பார்வை 4-ல் படுவதால் தாயின் ஆரோக்கியத்தில் இருந்த பின்னடைவுகள் விலகும். அவர் தொடர்பான மருத்துவச் செலவுகள் முடிவுக்கு வரும். நல்ல வசதியான வீட்டுக்குக் குடி போக சந்தர்ப்பம் உண்டாகும். சிலர் புதிய வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள்.
குருபகவானின் பார்வை 6-ம் வீட்டில் விழுவதால் சின்னச் சின்னக் கடன்களை அடைப்பீர்கள். ஆரோக்கியம் மேம்படும். அன்றாடம் உடற்பயிற்சியைத் தவறாமல் மேற்கொள்வதன் மூலம் பெரிய மருத்துவச் செலவுகளைத் தவிர்க்கலாம்.
பரிகாரம்: வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை வழிபடுவதும், கொண்டைக்கடலை தானம் கொடுப்பதும் சிறப்பு.