அதிசார குருபெயர்ச்சி பலன்கள் 2025 : மகரம்
சனி பகவான் அருள் பெற்ற மகர ராசி அன்பர்களே !!!தற்போது குருபகவான் 6-ல் மறைந்திருந்து பல இன்னல்களைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.மனச்சோர்வு, பொருள் இழப்புகள், ஆரோக்கிய பாதிப்பு என்று அனைத்திலும் பல பாதிப்புகளைக் கொடுத்து உங்களை முடக்கிவைத்த குருபகவான், அக்டோபர் 18-ம் தேதி முதல் 7-ம் வீட்டில் அடியெடுத்து வைத்து, 48 நாள்கள் வரை அங்கே சஞ்சாரம் செய்ய இருக்கிறார். இந்த சஞ்சாரம் உங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையப்போகிறது.
சிலருக்குப் பெரிய பொறுப்புகள் வந்து சேரும். குருபகவான் 7-ம் வீட்டில் சஞ்சரிப்பதால், இல்வாழ்க்கை நல்வாழ்க்கையாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த ஈகோ பிரச்னைகள் விலகி அந்நியோன்யம் அதிகரிக்கும். அறிவும் அழகும் கொண்ட குழந்தைகள் பிறப்பார்கள். பிரிந்திருந்த தம்பதி ஒன்றுசேர்வார்கள்.
குரு பார்வை பலன்கள்
குரு பகவானின் பார்வை ராசியில் விழுவதால், மனதில் இருந்த தாழ்வு மனப்பான்மை நீங்கி நம்பிக்கை பிறக்கும். கவலைகள் எல்லாம் விலகும். தொட்டது எல்லாம் துலங்கும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகள் சீக்கிரமாக முடியும். இழுபறியாக இருந்த அனைத்தும் வெற்றியாகும்.
ராசிக்கு 3-ம் வீட்டை குருபகவான் தனது 9-ம் பார்வையாகப் பார்க்கிறார். இனி தைரியம் அதிகரிக்கும். மனதை அலைக்கழித்த தயக்கங்கள் விலகும்; முயற்சிகளை முடுக்கிவிடுவீர்கள். தொட்டது துலங்கும். இளைய சகோதர வகையில் நன்மைகள் கிடைக்கும்.
ராசிக்கு 11-ம் வீட்டை குருபகவான் பார்ப்பதால் லாபம் அதிகமாகக் கிடைக்கும். பொருள் வரவில் இருந்துவந்த தடைகள் விலகும். இதுவரை சேமிக்க முடியாமல் இருந்தவர்கள் கொஞ்சம் சேமிக்க ஆரம்பிப்பீர்கள். ஆடை – ஆபரணச் சேர்க்கை உண்டாகும். விழாக்களில் மதிப்பும், மரியாதையும், கெளரவமும் கிடைக்கும்.எனினும்,
ராகு 2-ம் வீட்டில் இருக்கிறார் என்பதை மறக்கவேண்டாம். பேச்சில் மட்டும் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். செலவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். குருவின் பார்வை உங்களுக்கு மிகுந்த பலனைக் கொடுக்கும்.
பரிகாரம்: குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.குரு பகவான் ஈசனை வழிபட்ட தலங்களுக்குச் சென்று வணங்கி வாருங்கள். குருவின் பார்வையால் கோடி நன்மைகள் கிடைக்கும்.