மேஷ லக்னம்
மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு துலாம் ராசி ஏழாவது இடமாக இருப்பதால், மனைவி குடும்ப பொறுப்பேற்று நடத்துவதில் அக்கறை கொண்டவராவார். கணவனுடைய தலையீட்டை சில சமயம் விரும்ப மாட்டாள். இடையிடையே சிறு சிறு மனத்தாங்கல்கள் வந்து விலகும். குடும்ப கவுரவம் அமையும். திருமணத்திற்கு முன்பே வாழ்க்கை திட்டங்களை வகுத்திருப்பார். ஆடல், பாடல், கேளிக்கைகளில் மனவிருப்புடன் இருப்பார்.
ரிஷப லக்னம்
ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு விருச்சக ராசி ஏழாவது இடமாக அமைவதால், முழு பொறுப்பும் மனைவியிடமே அமையும். இன்றேல் வீண் தகராறு விளையும். மனைவியின் மரணமும் முன்னதாக அமையும். ஜென்ம லக்னமான ரிஷபத்தில் செவ்வாய் நின்றால், சீதனம் வரதட்சனை அதிகம் கேட்பார். மனைவியால் செல்வ ஆதாயம் பெறுவார். சிறு சிறு சண்டைகள் அடிக்கடி தோன்றி மறையும். செவ்வாயை குரு, சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் பார்த்தால் மனைவி நல்ல தைரியசாலியாகவும் கடின உழைப்பாளியாகவும் இருப்பார். மனைவிக்கு உடனே கிரகித்துக் கொள்ளும் திறன் அமையும். செவ்வாயை பாவ கிரகங்களான சனி, ராகு, சூரியன் பார்த்தால் கணவனுடன் வரிந்து கட்டிக்கொண்டு சண்டையிட தயாராகுவார்.
மிதுன லக்னம்
மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு தனுசு ராசி ஏழாவது இடமாக வருவதால், இவர் திருமண காலத்தில் எதையாவது விட்டுக் கொடுப்பார். சமய சம்பிரதாயங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளை விட்டுக் கொடுத்தே திருமணம் அமையும். சிலருக்கு காதல் திருமணமாகவும் அமையலாம். பெரியோர்களின் சம்மதத்துடனே திருமணம் நடக்கும். சட்டதிட்டங்களுக்கு பணிந்தவராக இருப்பர். கணவன்-மனைவி உறவு நன்கு ஒளிரும். சமய சம்பிரதாயங்களில் பற்றுதல் உள்ளவராய் இருப்பர்.
தைரியமாகவும் சில சமயம் வெகுலியாகவும் இருப்பர். தாராள மனம் படைத்தவராக இருப்பர். விளையாட்டு செயல்களில் விருப்பமிருக்கும். குருவை சுக்கிரன், புதன், பார்த்தால் நல்ல செயலுக்கு தான தர்மம் செய்வர். அதிர்ஷ்டசாலியாக இருப்பர். குருவை சனி, சூரியன், செவ்வாய் பார்த்தால் பணக்கஷ்டம் உண்டாகும்.
கடக லக்னம்
கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மகரம் ஏழாம் இடமாக வருவதால், இவர்களுக்கு வாய்க்கும் மனைவி மிக ஜாக்கிரதையாக இருப்பார். அதிகம் பேச மாட்டார். தாய் தந்தையர் நிர்பந்தத் திருமணமாக இருக்கலாம். தொழிலில் தடங்கல்கள் ஏற்படும். சிலர் வாழ்வில் பிரிவு அடிக்கடி ஏற்படும். எச்சரிக்கையும், ஜாக்கிரதையும் சந்தேகபேர் வழியாக்கும்.கணவன் மீது அடிக்கடி சந்தேகப்படுவார். கடக லக்னக்காரர்களின் மனைவியின் கட்டு திட்டங்களுக்கு அடங்கியவராவார்.
சிம்ம லக்னம்
சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு கும்பம் ஏழாவது ராசியாக அமையும். இவர்களுக்கு உறவில் திருமணம் ஆவதில்லை, எனினும் அன்னியோன்ய பாவம் நிலவும். சில பொழுது குடும்பத்தில் எதிர்பாராத மாறுதல்கள் விவாகரத்து வரை போகும் நிலை வரும். எப்படியும் வாழ முடியும் என்ற தைரியம், கணவன் உஷாராக இருக்க வேண்டும். கும்பத்தையோ அல்லது சனியையோ குரு, சுக்கிரன் முதலியோர் பார்த்தால் ஒரு கெடுதியும் நேராது. கணவன் பொறுமையாக இருக்க வேண்டும். வேறு வழி இல்லை, கணவனை மீறிய வேலைகள் மனைவி செய்வார். கணவன் லக்னத்தில் சூரியன் வலுத்திருந்தால் நன்று. சனி வலுத்தால் வாழ்க்கை துன்பம் சிறிது மிகும்.
கன்னி லக்னம்
கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மீன ராசி ஏழாவது இடமாக வருவதால் திருமணம் ஏதோ ஒரு நிபந்தனையின் பேரில் அல்லது முக்கிய காரணத்தால் நடைபெறும். தெய்வானுகூலத்தால்தான் திருமண வாழ்வு நடந்து வரும். ஏதோ ஒரு வித சிறு கவலைகள் இருவருக்கும் ஏற்பட்டு கொண்டே இருக்கும். சகிப்புத்தன்மையும், தியாக உணர்ச்சியும் உடைய கணவரின் பொறுமையால் வாழ்க்கை செம்மையாக நடைபெறும். 12-ம் இடத்தில் இருக்கும் கிரகத்தால் தொல்லைகள் உண்டு. கணவன் ஒரு தெய்வீக துறையில் சக்தி பெறுவார். மனைவி சங்கீத ஞானம் உடையவராய் இருப்பார் அல்லது வியத்தகு பணிகள் செய்பவராவர்.
துலாம் லக்னம்
துலாம் லக்னத்தில் பிறந்தவருக்கு மேஷ ராசி ஏழாவது இடமாக வருவதால், மனைவி கணவனை மிஞ்சி சில காரியங்களில் இறங்குவார். கணவன் மேல் சிறு சிறு விஷயங்களில் எல்லாம் பெரிதாக குற்றம் கண்டுபிடிப்பார். சில சமயம் முன் யோசனை இன்றி ஏதேனும் செய்து விட்டு விழிப்பர். புண்ணியவசம் பாதுகாக்கும். சுக்கிரன், செவ்வாயை விட வலுப்பெற்று இருந்தால் தொந்தரவுகள் அணுகாது. செவ்வாயை – குரு, சுக்கிரன், புதன் போன்ற சுப கிரகங்கள் பார்த்தால் முரட்டு குணமும், வெட்கமின்மையும் ஏற்படும். சில சமயம் தானே எல்லாவற்றிற்கும் காரணம் என்ற பெருந்தன்மை குணம் உண்டாகும்.
விருச்சிக லக்னம்
விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஏழாம் இடமாக ரிஷபம் வருவதால் பணக்கார மனைவி வாய்ப்பாள். மிகுந்த பணம் செலவழித்தே மனைவியை பெறுவார். மகிழ்வான திருமண வாழ்வு அமையும். சுக்கிரன் கெட்டுவிட்டால் மகிழ்ச்சி பாதிக்கப்படும். இரண்டாம் இடமான தனுசு ராசியில் பாவ கிரகங்கள் இருந்தாலும் ,பார்த்தாலும் குடும்ப நன்மை இருக்காது. சுப கிரகம் இருந்தால் குடும்பம் வளர்ச்சி அடையும்.கணவனிடம் எப்பொழுதும் பணம் நடமாட்டம் இருக்கும்.
சுக்கிரனை குரு அல்லது புதன் பார்த்தால் மனைவி அழகும் சொத்தும் மிகுந்த நாகரிக உடை உடுத்துபவளாக இருப்பாள். சுக்கிரன்- சனி ,ராகு, கேது, செவ்வாய் முதலிய பாவ கிரகங்கள் பார்வை பெற்றிருந்தாலும், பகை, நீச்சம் அடைந்திருந்தாலும், மனைவி வீட்டு வேலைகளை கவனிக்காதவளாகவும், பொறுப்பற்றவளாக இருப்பாள்.
தனுசு லக்னம்
தனுசு லக்ன ஜாதகர்களுக்கு மிதுன ராசி ஏழாவது இடமாக அமைவதால், புதன் நீச்சமாக இருந்தாலும், பகை வீட்டில் இருந்தாலும் திருமணம் நாள் கடந்து நடக்கும். திருமணமே வேண்டாம் என்று வாதாடி பிறகு செய்து கொள்வார்கள். திருமண வகையில் பயண செலவும், உறவினர் குடி பங்கு பெறுவதற்கும் பெரும்பாடு ஏற்படும். உறவு முறையில் திருமணம் அமையலாம். திருமணம் படிப்பை உத்தேசித்து நிச்சயிக்கபடும்.
மூன்றாம் இடத்தில் பாவ கோள்கள் இருப்பின் நல்லதல்ல. வாழ்க்கை போராட்டங்கள் பல அமையும். மனைவி கணவனுக்கு ஏற்ப நடந்து கொள்ளும் குணவதியாவார். புதன் நல்லபடியாக காணப்பட்டால் கணவனுக்கு வேண்டும்போதெல்லாம் மனைவி பணம் சேர்த்து தருவார். புதன் கெட்டிருந்தால் மனைவிக்கு ஞாபகம் மறதி ஏற்படும். ஏதேனும் குற்றம் கண்டுபிடித்த வண்ணம் இருப்பார். மனைவி அதிகம் பேசக்கூடியவராவார்.
மகர லக்னம்
மகர லக்னத்தில் ஜனித்தவருக்கு கடக ராசி ஏழாவது இடமாக வருவதால், தம்பதிக்கு விருப்பமில்லை எனினும் பெரியோர் முடிவை தடுக்க முடியாமல் திருமணம் நடைபெறும். மனைவி மிக நல்லவராகவும், குடும்ப பாரத்தை சுமப்பவராகவும் இருப்பார். நான்காம் இடத்தில் சனி நின்றால் வறுமை சில சமயம் வாட்டும். ஆயினும் பிற்காலத்தில் சகல வசதிகளும் பெறுவார். எனினும் மனைவி மிக மிக ஜாக்கிரதையாக இருப்பார்.
மனைவிதான் கஷ்டப்பட்டு கணவனுக்கு உதவுவார். வீடு, நிலம், வாங்க முயன்று இறுதியில் வெற்றி பெறுவார். செவ்வாய், ராகு, கேது ஆகியோர் பார்வையை சனி பெற்றால் பல தொல்லைகளை சமாளிக்க நேரிடும். துர்க்கை வழிபாடு துயர்துடைத்து நற்பலன்களை நல்கும்.
கும்ப லக்னம்
கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சிம்மம் ஏழாவது இடமாக அமைவதால், திருமண வாழ்வில் போதிய திருப்தி அமையாது. மனைவி நற்குணங்களும், பெருந்தன்மையும் உடையவராக கணவனை கவர்வார். அதிகார தோற்றமும், அறிவு விசாலமும், விடாமுயற்சியும் அமையும். சுய கௌரவத்தை விட்டுக் கொடுக்காத நிலை ஏற்படும். தம்பதியருக்கு சினிமா, நாடகம், நாட்டியம் முதலிய கலைகளில் ஆர்வம் இருக்கும்.
ஐந்தாம் இடத்தில் இருக்கும் கிரகம் நல்லதாக அமைந்தால் ஒரு குறையும் வராது. ஐந்தில் பாவ கிரகங்கள் இருந்தால் சில நாட்களில் வறுமை ஏற்படும். திருமணம் சில கெடுதல்களை விளைவித்ததாக நினைப்பு எழும். சூரியனை சுப கிரகங்கள் பார்த்தால் எல்லா வகையிலும் மனமகிழ்ச்சி ஏற்படும். சூரியனைப் பாவ கிரகங்கள் பார்த்தால் எல்லா வகையிலும் கவலைகளும், துன்பங்களும் ஏற்படும்.
மீன லக்னம்
மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு கன்னி ராசி ஏழாவது இடமாக அமைவதால், மனைவியின் உடல் பலவீனப்படும். அடிக்கடி மனைவிக்கும் சிறுசிறு நோய்கள் வரும். மனைவி உறவில் அமைவார். ராகு, கேது கன்னியிலிருந்தால் அந்நியத்தில் அமையும். மனைவி எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருப்பார். எந்திரம் போன்று வேலைகளை செய்வார். தொழிலை காரணமாக வைத்து அல்லது தொழிலுக்கு உதவியாக திருமணம் அமையும். கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் சதா கேலியும், கிண்டலும் செய்து கொண்டிருப்பர். புதனை சுப கிரகங்கள் பார்த்தால் மனைவி படித்தவராகவும் எதிலும் முன் எச்சரிக்கை உடையவராகவும் இருப்பார். புதனை பாவ கிரகங்கள் பார்த்தால் வாயாடியாகவும், பிறர் மேல் குற்றம் காண்பவருமாக இருப்பார்.
சில விதிவிலக்குகள்
இதுவரை ஏழாம் இட ராசியை வைத்து மனைவி அமையும் நிலைகளை கண்டோம். இதுவே முடிவு அல்ல! ஏழாம் இடத்தை பார்க்கும் கிரகங்கள் நிலைகளை மாற்றி விடும்.
ஏழாம் இடத்தில் சூரியன் இருந்தால் ஜாதகர் இருப்பிடத்திலிருந்து கிழக்கு திசையில் மனைவி வாய்ப்பாள்.அதிகாரம் அதிகம் இருக்கும். 22 வயதுக்குள் திருமணம் நடைபெறும். மனைவி உறவில் அமைவாள். வாழ்க்கை அந்தஸ்து திருமணத்திற்கு பின் உயரும். சிறு தொழில் புரிந்து வாழ்பவர்கள் கூட ஏழாம் இடத்தில் சூரியன் இருந்தாலும், (அ )அதன் பார்வை இருந்தாலும் விரைவில் படிப்படியாக தொழில் வளர்ச்சி பெற்று வருவாய் ஈட்டி பொருள் சேர்ப்பர். இதனால் மனைவி தற்பெருமையும் கர்வமும் உடையவர் ஆவார். மனைவியின் சிடுசிடுப்பும் முன் கோபமும் அதிகரிக்கும். மேற்கூறிய பலன்கள் சிம்ம கும்ப லக்னங்களில் பிறந்தவர்களுக்கு பொருந்தும். எனினும் மேஷம், துலாம் லக்ன ஜாதகர்களுக்கு பொருந்தாது.
மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு துலாம் ராசியில் சூரியன் நீச்சம் அடைவதாலும், துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேஷத்தில் சூரியன் உச்சம் பெறுவதாலும் மேலும் பாதகாதிபதியாவதாலும் இப்பலன்கள் ஏற்படாது. எனவே சிம்ம, கும்ப லக்னக்காரர்களுக்கு ஏழாம் இடத்தில் சூரியன் இருப்பதால், பார்ப்பதால் யோகமும், மேஷம் துலாம் லக்னக்காரர்களுக்கு ஏழாம் இடத்தில் சூரியன் இருப்பதால் பார்ப்பதால் யோகமின்மையும், மற்ற லக்னக்காரர்களுக்கு 50% நற்பலன்களும் ஏற்படும்.
சந்திரன் ஏழாம் இடத்துக்கு அதிபதியாகவோ அல்லது ஏழாம் இடத்தில் நின்றோ, ஏழாம் வீட்டை பார்த்தோ இருந்தால், ஜாதகர் தன் கற்பனையில் கண்ட காரிகையை கைப்பிடிப்பார். அவர்களின் இல்லற சுகமும் எண்ணத்தைப் போலவே ஈடேறும். சந்திரனை ஏழாம் இடத்தில் பெற்றவர்கள் புண்ணியம் செய்தவர்களாவார். கணவன் கீறிய கோட்டை தாண்டாத மனைவி அமைவாள். அம்மனைவி மிகவும் சிக்கனமானவர். எளிய வாழ்வினராவார். சாந்தமான மலர்ந்த முகம் எப்பொழுதும் உடையவராவார். இவ்விருவரும் இணை பிரியாது வாழ்வார்.
விருச்சிக ராசிக்கு ஏழாம் இடத்தில் சந்திரன் நின்றாலும், ரிஷப ராசிக்கு ஏழாம் இடமான விருச்சகத்தில் சந்திரன் நின்றாலும் நேர்மாறான பலன்களை அமையும். விருச்சக ராசிக்கு பாதகாதிபதியாவதால் சந்திரன் ரிஷபத்தில் இருப்பது கெடுதிதான். விருச்சக லக்னத்திற்கு ரிஷபத்தில் சந்திரன் இருக்கையில் திருமணமாகியும் பாதகஸ்தானதிபதியின் விளைவால் மனைவி வெளியேறிய நிலை உண்டு.
தனுசு, கும்ப, சிம்ம லக்னங்களுக்கு முறையே 6,8,12ம் ஆதிபத்தியம் பெறுவதால் இந்த லக்னங்களுக்கு ஏழாம் இடத்தில் சந்திரன் என்றால் குடும்ப வாழ்க்கையில் பல சிக்கல்கள் தோன்றும்.
மேற்கூறிய லக்னங்களுக்கு ஏழாமிடத்து அதிபதி சுக்கிரனோடு சேர்ந்திருந்தாலும் சிக்கல்கள் தான் தோன்றி மறையும்.
மற்ற லக்னங்களுக்கு ஏழாம் இடத்து அதிபதியோடு 8, 6, 12 குடையவர்களும், ராகுவும் கேதுவும் சேராமல் இருக்க வேண்டும். அப்படி தனித்து இருந்தால் மிக நல்ல பலன்களே ஏற்படும். காதலர்களும் தங்கள் காதலில் வெற்றி பெறுவார்.
செவ்வாய் ஜென்ம லக்னத்தில் இருந்தாலும், ஏழாம் இடத்தில் இருந்தாலும் தாம்பத்ய வாழ்க்கையில் ஏதோ ஒரு வித மிரட்சி தோன்றி தோன்றித் மறையும். இவ்விடங்களில் செவ்வாய் நின்றால் தோஷம் ஏற்படுவதால் குரு, சனி சேர்க்கை அல்லது பார்வை பெற்றால் ஏற்படும் பாதக பலன்கள் குறைந்து, வாழ்க்கையில் ஒருவித நம்பிக்கை ஏற்படும். இல்லை எனில் வறுமையும் ,சிறு கஷ்ட நஷ்டங்களையும் அன்றாட வாழ்க்கையில் சந்தித்துக் கொண்டே இருக்க நேரிடும்.
முழு நீர் ராசியான கும்ப, மீனத்தில் ஏழாமிடமாகச் செவ்வாய் நின்றாலும் தோஷம் செய்யாது. சுக்கிரனுடைய வீடாகிய ரிஷப ,துலாத்திற்கு ஏழாவது வீடாகிய விருச்சக, மேஷ ராசிகளில் செவ்வாய் நின்றாலும் அவ்வளவு பாதக பலன்கள் ஏற்படாது. என்றாலும் போக விருப்பமுடையவராகவும், பகலில் சம்போகப் பிரியராகவும், தன் வயதுக்கு மூத்த பெண்களிடம் இச்சையுடையவராகவுமிருப்பர்.
தனது உச்ச வீடான மகரம் ஏழாம் இடமாக அமைந்து அதில் செவ்வாய் இருந்தால் கெடுதல் இல்லை. காரணம் கடக லக்னத்திற்கு யோகாதிபதியாகிறார் செவ்வாய்.
மகர லக்னத்திற்கு ஏழாம் இடமாகிய கடகத்தில் செவ்வாய் நின்றால் நீச்சமடைவதோடு அல்லாமல் பாதகாதிபத்தியமும் ஏற்படுகிறது அதனால் நல்லதல்ல. ஆனால் நீர் ராசியானதால் தோஷம் இல்லை. கும்பம் மிதுன லக்னங்களுக்கு ஏழாம் இடத்தில் செவ்வாய் நின்றால் கொஞ்சம் தோஷம் உண்டு. ஆனால் சனி பார்வை, சேர்க்கையானது குரு, பார்வை சேர்க்கையாவது ஏற்பட்டிருந்தால் தோஷம் நிவர்த்தி ஆகும். இல்லாவிட்டால் எத்தகைய கெடுதல்கள் உண்டோ அவ்வளவையும் சமாளித்தாக வேண்டும்.
நல்ல சந்தோஷமும் வாழ்க்கை ருசிகரமானதாக இருக்க வேண்டும் எனில் புதன் ஏழாம் இடத்தில் நிற்க வேண்டும். ஏழாம் இடத்தில் புதன் உள்ள ஜாதகருக்கு படிப்பு வாசனையுள்ள மனைவி வாய்ப்பாள். நல்லவளாகவும், குதூகலம் உள்ளவளாகவும், எப்போதும் சிரித்து விளையாடுபவராகவும் இருப்பாள். புருஷன் கோபக்காரனாலும் தன் சாதுரியத்தால் புருஷனை வலிந்து தன் வழிக்கு கொண்டு வருவாள். மகிழ்வாக பேசி கணவனையும் மகிழ்விப்பாள்.
நல்ல ஆடை ஆபரணம் பெற்றவளாகவும், கேளிக்கைகளில் விருப்பமுள்ளவளாகவும் சிறு வயதில் திருமணமாகக் கூடியவளாகளவுமிருப்பாள். பெரும்பாலும் உறவினர் அல்லாத வெளி உறவில், வடமேற்கு திக்கில் இருந்து வருவாள். சிக்கனமாக குடித்தனம் செய்வாள். தந்திரமாக பேசி தன் கணவனிடம் எல்லாவற்றையும் சாதித்துக் கொள்பவளாக இருப்பார். வயது ஆனாலும் பருவ குமரி போல் எப்போதும் காட்சியளிப்பாள். நவநாகரீக பாங்கை விரும்புவாள். இவள் பழைய சம்பிரதாயங்களை விரும்ப மாட்டாள்.
அளவோடு கூடிய தெய்வ பக்தி உடையவள். மிக புத்திசாலித்தனமாக குடும்பத்தை நிர்வகிப்பாள்.மா நிறமும், நடுத்தர உயரமும் கொண்ட இவளது கையில் எப்போதும் பணம் நடமாட்டம் இருந்துகொண்டேயிருக்கும். சுக்கிரன் சந்திரனுடன் சேர்ந்து புதன் ஏழாம் இடத்தில் இருந்தால் லலிதா கலைகளிலும், சினிமா, நாடகம், சங்கீதம் போன்றவைகளிலும் நாட்டம் மிகுந்தவளாவாள்.
புதன் ஜென்ம லக்னத்திலிருந்தாலும், ஏழாமிடத்திலிருந்தாலும் இத்தகைய பலன்கள் ஏற்படுமாயினும், மேஷ, விருச்சிக ,கும்ப, கடக லக்னக்காரர்களுக்கு புதன் ஏழாமிடத்திலிருந்தால் நேர்மாறான பலன்கள் தான் ஏற்படும். மற்ற லக்னக்காரர்களுக்கும் 6,8,12 ம் அதிபதிகள் சேர்க்கை பெறாமலிருந்தால் தான் சொல்லிய நற்பலன்களேற்படும்.
ரிஷப, துலா, மகர லக்னக்காரர்களுக்கு பெருத்த நன்மைகள் ஏற்படா விட்டாலும் புதனால் தீமைகளில்லை.
ஏழாமிடத்தில் குருவிருந்தால் வடகிழக்குத் திசையிலிருந்து மனைவி வருவாள். தனதானிய சம்பத்து விருத்தியாகும், மிக நல்லவளாகவும். உத்தம குணம் பெற்றவளாகவும், நீதி நெறி தவறாதவளாகவும் விளங்குவாள். தீவிர தெய்வ பக்தியும், கதாகாலட்சேபத்தில் புத்தி நாட்டமிருக்கும். உரத்த குரலில் பேசாத உத்தமியாகவுமிருப்பாள்.
கணவனுக்கு நன்றாகப் பணிவிடைகள் செய்வாள். கணவனது மனம் கோணாமல் நடந்து கொள்வாள். பூர்வ புண்ணியமில்லா விட்டால் இத்தகைய மனைவி வாய்ப்பது அரிதாகும். பெரியோர்களின் விருப்பப்படியும், குல வழக்கப்படியும் திருமணம் நடைபெறும்.கணவனும் மனைவியின் மனம் நோகாமல் நடந்து கொள்வார். இவர்களுடைய செலவு நியாயமான முறையிலும் தர்ம காரியங்களுக்காகவும் இருக்கும்.
ஏழாமிடத்தில் அமரும் குரு நீச்சமடையாமலும் சனி, ராகு. கேது சேர்க்கை பெறாமலும் சனியின் பார்வை விழாமலும் இருக்க வேண்டும்.இப்பலன்கள் ஏழாமிடத்தில் குரு இருந்தால் மட்டுமே ஏற்படுவதன்று. ஜென்ம லக்கினத்திலும் மூன்றாமிடத்திலும் பதினோராமிடத்திலும் நின்று ஏழாமிடத்தைப் பார்த்தாலும் ஏற்படுவதாகும்.
குருவுடன்6,8,12க்குடையவர்கள் சேர்ந்தாலும் குருவைப் பார்வைப் பார்க்காமல் இருந்தாலே நடக்கும். ஆனால்சில நாட்கள் கடந்த பிறகே திருமணம் நடைபெறுவதுண்டு.
அனுபவத்தில் துலா லக்ன ஜாதகர் ஒருவருக்கு ஜென்மத்தில் குருவிருந்து ஏழாமிடத்தைப் பார்த்தான். குடும்ப வாழ்க்கையில் மனமொத்து இருக்கவில்லை.
இன்னொரு துலா லக்ன ஜாதகருக்கு குரு மேஷத்தில் ஏழாமிடத்திலிருந்ததால் திருமணமே நடக்கவில்லை.
துலா லக்னத்திற்கு 3,6க்குடைய குரு. லக்னாதிபதியான சக்கிரனுக்குப் பகைவனானதால், ஏழாமிடத்திலிருப்பதும் லக்னத்திலிருப்பதும் நல்லதன்று.
அது போலவே.
ரிஷப லக்னத்திலும் ஏழிலிருப்பது நல்லதன்று. நல்லதன்று என்றால் திருமணத்தால் கெடுதி என்பது பொருள்.
இதுபோலவே மகர லக்னத்திற்கும், மூன்று பன்னிரண்டுக் குடையவன் ஆதலால் நன்மையில்லை. ஆனால், ஏழாமிடத்தில் உச்சமென்பதில் அதிக தீங்கில்லை என்று சொல்லலாம்.
மிதுன, கன்னி, தனுசு, மீன லக்னங்களில் பிறந்தவர்களுக்கு குரு ஜென்மத்திலிருந்தாலும், ஏழாமிடத்திலிருந்தாலும் ஒன்றுக்கு மேற்பட்ட களத்திரம் (மனைவி) அடையலாம்.
சுக்கிரன் ஏழாமிடத்தில் இருப்பது நன்றன்று. காரகோபாவநாஸ்தி என்றபடி களத்திர காரகம் பெற்ற சுக்கிரன் ஏழாமிடத்திலிருந்தால் ஜாதகருடைய நெறியில் தவறு ஏற்படும்.
ஏற்கனவே அறிமுகமான பெண்மணியை இவர் திருமணம் முடிப்பார்.மனைவி நல்ல அழகுப் பொருள்களை வாங்குவதில் இச்சை உள்ளவளாகவும், சினிமா. நாடகம் போன்ற நிகழ்ச்சிகளில் அதிக ஆர்வமும் காட்டி வருவாள்.ஆனால் திருமணம் ஏற்பட்டபின் வாழ்க்கை வலுப்பெற்றதாக அமையும். சிலருக்குக் காதல் திருமணம் ஏற்படுவதுண்டு.
சுக்கிரன் ஏழிலிருந்தாலும், ஜென்ம லக்னத்திலிருந்தாலும் சாதாரணமாக வாழ்க்கையில் பல ஆடம்பர வசதிகள் பெருகிடும். மனைவி சற்றுக் கருத்த நிறமாயினும் ரூபலாவண்ணியம் பெற்றிருப்பாள். செயற்கை அழகு அதிகம் இவளுக்குத் தேவைப்படும். மலர்ந்த முகத்துடன் மகிழ்ச்சியாகவே எப்பொழுதும் இருப்பாள். காதல் கதைகளையும், சிறு கதைகளையும் அதிகம் விரும்பிப் படிப்பாள்.