திருவெள்ளக்குளம் ஸ்ரீ அண்ணன் பெருமாள் கோயில்
எத்தனையோ சிறப்புக்களை உள்ளடக்கிய திருநாங்கூர் ஸ்தலத்தைப் போலவே பகவானின் பரிபூரண அனுக்கிரகத்தைப் பெற்ற இன்னொரு சிற்றூரும் உண்டு. இதற்கு திருவெள்ளக்குளம் என்று பெயர். சீர்காழியிலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தூரத்தில் தென்கிழக்கில் அமைந்துள்ளது. இன்றைக்கும் இயற்கையெழிலும் அமைதியான சூழ்நிலையிலும், பக்தர்களை ஆனந்தமயமான உலகத்திற்கு இழுத்துச் செல்லும் ஊராகவும் கருதப்படுகிறது. பல்வேறு அதிசய சம்பவங்கள் இத்தலத்தில் நடந்துள்ளது.
‘அண்ணன் பெருமாள் கோயில்’ என்றழைக்கப்படும் திருவெள்ளக் குளக்கோயிலில் மூலவர் ஸ்ரீ அண்ணன் பெருமாள் நின்ற திருக்கோலம், உற்சவர் ஸ்ரீநிவாசப் பெருமாள். தாயார் பூவாரி திருமகள். உற்சவர் பத்மாவதி தீர்த்தம் சுவேத புஷ்கரணி. விமானம் தத்வதோதக விமானம் ருத்ரருக்கும் ஸ்வேதராஜனுக்கும் திருமால் காட்சிதந்த புண்ணியஸ்தலம், திருமங்கையாழ்வார் பாடல் பெற்ற ஸ்தலம்.
சூர்ய குமாரனது மகன் துந்துகுமாரன் என்னும் அரசகுமாரன் தன்னுடைய ஒன்பதாவது வயதில் மரணம் ஏற்படும் என்பதை முன்னதாக அறிந்து – இதைத் தடுக்க மறுத்த முனிவரிடம் சென்று உபதேசம் பெற்றான். பின்னர் நேராக திருமால் குடி கொண்டிருக்கும் அண்ணன் பெருமாள் கோயிலுக்கு வந்தான். இங்குள்ள புஷ்கரணியில் நீராடி பெருமாளை நோக்கித் தவம் இருந்தான். தவத்திற்கு மகிழ்ந்த பெருமான் துந்து குமாரனுக்கு நீண்ட ஆயுளைப் பெற்றுத் தந்தார். மார்க்கண்டேயனைப் போல் சாகாவரம் தந்தார். அத்தகைய பெருமை பெற்ற தலம்.
இன்னொரு சமயம் தேவலோக நங்கைகளில் ஒருத்தியான குமுதவல்லி இந்த ஸ்தலத்து புஷ்கரணியிலுள்ள குமுத மலர்களைப் பறித்துச் செல்ல வந்தபோது திருமங்கை மன்னனிடம் காதல் கொண்டாள். தன்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் சில நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டுமென்று கேட்க திருமங்கை மன்னனும் அவ்வாறே நிறைவேற்றி கடைசியில் அரசபதவியைத் துறந்து குமுதவல்லியை மணந்து ஆழ்வாராக மாறினார். திருமங்கையாழ்வார், குமுதவல்லியை மணம் செய்து கொண்ட ஸ்தலம். தாயார் சன்னதியில் குமுதவல்லிக்கும் ஒரு தனி சன்னதி உண்டு. வடவேங்கட ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு அண்ணன் என்பதால். திருப்பதிக்கு வேண்டிக் கொண்டதை அங்கு செலுத்த முடியாதவர்கள் இங்கு செலுத்தலாம்.
பரிகாரம் :
தெரிந்தோ தெரியாமலோ செய்த கொலை பாவம். கொள்ளையடித்த பாவம். ‘பொய் சொல்லி ஏமாற்றிய பாவம் ஆகியவை இந்த ஸ்தலத்திலுள்ள சுவேத புஷ்கரணியில் நீராடினால் விலகி விடுகிறது. ஜாதகத்தில் எந்த கிரகம் தோஷமாக இருந்தாலும் அவற்றை நிவர்த்தி செய்ய இங்கு வந்தால் போதும். தோஷம் விலகிவிடும் என்பது ஐதீகம். இந்த ஸ்தல புஷ்கரிணியில் எந்த பாவம் செய்தாலும் போக்கிவிடும் சிறப்புத்தன்மை இருப்பதால் சகலவிதமான தோஷங்களுக்கும் ஓர் சிறந்த பரிகாரத் ஸ்தலமாக விளங்கி வருகிறது.
கோவில் இருப்பிடம் :