திவ்ய தேசம் -திருக்கோவலூர்
பெருமாளின் பாதங்களை சரணடைந்தவர்களுக்கு இல்லை இனி தொல்லை என்றாலும் பெருமாளும் நம் சரணாகதியை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் எல்லோருக்கும் அந்த பாக்கியம் கிடைக்குமா? என்று ஒரு கவலை இருந்தால் அந்தக் கவலையை திருக்கோவலூர் கோயிலில் உள்ள திரு விக்ரமன் நிச்சயம் தீர்ப்பார். இந்த புனிதமான திருத்தலம் விழுப்புரம் காட்பாடி பாதையில் திருக்கோவிலூர் சந்திப்பில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. திருவண்ணாமலை விழுப்புரம் மார்க்கத்தில் 36 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.
மலையமான் நாடு, கிருஷ்ணன் கோவில், திருக்கோவிலூர் என்று பல பெயர்கள் உண்டு. தென்பெண்ணை ஆற்றின் தென்கரையில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் மூன்று பிரகாரங்கள், 11 நிலை ராஜகோபுரம், மேற்கே ஏழு நிலைக்கொண்ட கோபுரம் கொண்ட திருக்கோவில்.
- மூலவர் திரு விக்ரமன் இடது காலை தரையில் ஊன்றி வலது காலை விண்ணை நோக்கி தூக்கி சங்கு சக்கரத்தோடு காட்சியளிக்கிறார்.
- உற்சவர் கோபாலன் திருமகள், பூமிதேவியுடன் அனுக்கிரமிக்கிறார்.
- தாயார் பூங்கோவல் நாச்சியார்.
- தீர்த்தம் பெண்ணையாறு, சக்கர தீர்த்தம், கிருஷ்ண தீர்த்தம்.
- விமானம் கர விமானம்.
மகாபலி, மிருகண்டு முனிவர், பிரம்மன், இந்திரன், குஷகி, செளனகர், காச்யபர், காலவரி, பொய்கையாழ்வா,ர் பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோருக்கு இத்தல பெருமாள் பல தடவை நேரடியாக தரிசனம் கொடுத்த புண்ணிய ஸ்தலம்.
இந்த கோவில் பஞ்ச கிருஷ்ணராய ஷேத்திரங்களில் ஒன்று. ஒரு சமயம் மிருகண்டு முனிவர் இந்த ஸ்தலத்திற்கு வந்து திருமாலை நோக்கி தவம் செய்தார். திருமாலும் மிருகண்ட முனிவருக்கு தரிசனம் காட்டி என்ன வேண்டும் என்று கேட்க, தனக்கு வாமன அவதார காட்சியை மீண்டும் காட்ட வேண்டும் என்றார். பெருமாளும் உடனே வலது காலை விண்ணில் வைத்து இடது காலை பூமியில் அழுத்தி வாமன அவதாரத்தை காட்டினார். இன்னொரு சமயம் இங்கு தங்கி தவம் செய்து கொண்டிருந்த முனிவர்களை துன்புறுத்திய பாதாள கேது என்ற அரக்கனை திருமால் “குசத்வஜன்” என்ற மன்னன் மூலம் கொன்று முனிவர்களது பயத்தை போக்கியதாக வரலாறு உண்டு. இந்தக் கோயில் 500 ஆண்டுகளாக ஜீயர் சுவாமிகளின் பரம்பரையில் இருந்து வருகிறது. கி.மு 500 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட கோயில் என்பது மிகவும் பிரசித்தம்.
பரிகாரம்
எப்பேர்ப்பட்ட கஷ்டங்கள் வந்தாலும், சரி யாரால் எந்த ரூபத்தில் பிரச்சனைகள் தோன்றினாலும் சரி, கவலையே பட வேண்டாம் உடனடியாக இந்த கோவிலுக்கு வந்து பெருமாளை மனம் உருகி பிரார்த்தனை செய்தால் போதும், அவர்களை காப்பாற்றி விடுவார். கடன் தொல்லை, குடும்பத்தகராறு, எதிரிகளால் பயமுறுத்துதல், உறவினர்களால் கேடு, கெட்ட பெயரால் துன்பப்படுவது போன்ற அத்தனைக்கும் பிரசித்தியம், திருவிக்ரமானது பொற்பாதங்களில் சரணடைவதுதான். இதுவரையில் இங்கு வந்த சரணடைந்தவர்கள் யாரும் கெட்டுப் போனதே இல்லை. சௌக்கியமாக இருக்கிறார்கள்.
கோவில் இருப்பிடம்