திவ்ய தேசம் -ஸ்ரீ அஷ்டபுஜகர பெருமாள் கோவில்
எம்பெருமானின் திருக்கல்யாணக் குணங்களை எப்பொழுதும் சொல்விக் கொண்டே இருக்கலாம். அதேபோல் எம்பெருமானின் திருமேனியழகை எத்தனை மணிநேரமும் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம். பகவான் பார்க்க மட்டுமா அழகு இல்லை இல்லை. அவரது ஒவ்வொரு அவதாரமும் அழகுதான், இதையெல்லாம் பார்க்க நமக்கு கண் கோடி வேண்டும். அப்படிப்பட்ட அழகை காஞ்சீபுரத்திலேயே ‘அஷ்ட புயகர’ கோவிலுக்கு வந்தால் ஆனந்தமாக தரிசிக்கலாம்.
காஞ்சீபுரத்திலுள்ள ரங்கசாமிக் குளத்திற்கு தெற்கேயுள்ள ‘இந்தக் கோயில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம்.
- மூலவர் ஆதிகேசவப் பெருமாள் நின்ற திருக்கோலம். சங்கு, சக்கரம், வாள், மலர், அம்பு, வில், கேடயம், கதையுடன் காட்சியளிக்கிறார். சக்ராதரர் என்று வேறு பெயரும் உண்டு.
- தாயார் அலர்மேல் மங்கைத்தாயார்.
- தீர்த்தம் கஜேந்திர புஷ்கரணி.
பிரம்ம தேவர் செய்யும் யாகத்தை அழிக்க சரஸ்வதி தேவி அரக்கர்களை அனுப்பினாள். இதனால் கடுங்கோபம் கொண்ட திருமால் எட்டு கைகளோடு ஆயுதமேந்தி போராடி அந்த அரக்கர்களைக் கொன்றதால் இந்த ஸ்தலத்திற்கு “அஷ்டபுயகரம்” என்று பெயர்.
இன்னொரு சம்பவம் இங்கு நடந்தது. ‘மகாசந்த முனிவர்’. திருமாலை நோக்கித் தவம் செய்து கொண்டிருக்கும் பொழுது இந்திரன் அவரது தவத்தை கலைத்தான். தன் தவ பலத்தால் மகாசந்த முனிவரை யானையாக மாற்றினான்.
யானையாக மாறினாலும், திருமாலுக்கு தினமும் அருகிலுள்ள குளத்திலிருந்து ஒரு தாமரையைப் பதித்து இறைவனை ஆராதித்து வந்தபோது ஒருநாள் அந்த யானையின் காலை, குளத்திலுள்ள முதலை பிடித்துக் கொள்ள பகவானை நோக்கி அந்த யானை கதறியது. பெருமாள் இந்த அறை கூவலைக் கேட்டு கருடவாகனத்தில் ஓடோடி வந்து தனது கையிலிருந்த சக்கராயுதத்தால் முதலையைக் கொன்று யானையைக் காப்பாற்றினார்.
இப்படி ‘கஜேந்திரனான’ அந்த யானைக்கு அடைக்கலம் தந்த ஸ்தலம் என்பதால் இந்த ஸ்தலம் மிகவும் புண்ணியமானதாகக் கருதப்படுகிறது.
பேயாழ்வாருக்கும். பெருமாள் கஜேந்திர மோட்சக் காட்சியை காட்டினார். திருமங்கை ஆழ்வார் ,பேயாழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள்.
சித்திரை மாதம் ஆடிமாதம் வெகு சிறப்பான விழாக்கள் நடக்கும்.
பரிகாரம்
கஷ்டங்கள், காலை இறுகப் பிடித்து உயிர் போகும் அளவுக்கு மாறக்கூடிய நிலை ஏற்பட்டவர்களும், நல்லதையே எல்லோருக்கும் செய்யப் போய் வம்பில் மாட்டிக் கொண்டு அவஸ்தைபடுபவர்களும் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு கதிகலங்கி நிற்பவர்களுக்கும் சொத்து சுகம் வீடு மனை ஆஸ்திகளை அநியாயமாகப் பறி கொடுத்து நிற்பவர்களுக்கும் ஒரே புகலிடம் இந்த திருக்கோயிலில் குடியிருக்கும் ஆதிகேசவப் பெருமாளின் திருவடிதான். இந்தப் பெருமாள் கோயிலை ஒன்பது தடவை வலம் வந்து சேவித்தால் அத்தனையும் அடுத்த நிமிடமே பஞ்சாய்ப் பறந்து விடும். தன்னம்பிக்கையும் அதிகமாகும். தைரியம் பிறக்கும் அதோடு பெருமாளும் பக்கபலமாக இருந்து காப்பாற்றுவார்.