திருமண தடை அகற்றும் இரட்டை விநாயகர் வழிபாடு
சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம், பேளூரில் வசிஷ்டா ஆற்றங்கரையில் நான்கு யுகங்களுக்கு முன்பே சிவபெருமான் சுயம்பு லிங்கமாகத் தோன்றினார். ஆதலால், இன்று ‘தான்தோன்றிநாதர்’ எனும் திருப்பெயருடன் அருள்பாலித்து வருகிறார்.
வசிஷ்ட முனிவர் வேள்வி புரிந்ததால் இந்நகர் ‘வேள்வியூர்’ என்று பெயர் பெற்றது. அதுவே இப்போது ‘பேளூர்’ என்று விளங்குகிறது. வசிஷ்ட முனிவர் யாகம் செய்த இடம் ‘யாகமேடு’ என்று அழைக்கப்படுகிறது.அங்கு கிடைக்கும் மண்ணை இக்கோயிலில் விபூதிப் பிரசாதமாக வழங்குகிறார்கள்.
பேளூர் ஆலயத்தில் சுயம்புலிங்கமாகத் தோன்றியுள்ள ‘தான்தோன்றிநாதர்’ கிழக்கு திசை நோக்கி காட்சியளிப்பது சிறப்பாகும்.
இக்கோயிலில் நுழைந்தவுடன் இடப்பக்கம் உள்ள தூணில் பிருங்க முனியின் சிலை வடிக்கப்பட்டுள்ளது. பிருங்கமுனிவர் பார்வதி தேவியை உதாசீனப்படுத்தி சிவபெரு மானை மட்டும் வழிபட்டு வந்தார். இதனால் சிவசக்தி பிருங்க முனியின் கால்களை வலுவிழக்கச் செய்து நடக்க முடியாமல் ஆக்கினார். அவர் இறைவனை வேண்ட, கைலாயநாதர் அம்முனிவருக்கு மூன்றாவது காலைக் கொடுத்து நடக்கச் செய்தார் என்பது புராணக் கதை. இந்த பிருங்க முனிக்கு மூன்று கால்கள் இருப்பதை சிலையில் சுண்டு மகிழலாம்.
இதே தூணில் பின்புறம் அர்த்தநாரீஸ்வரர் சிலையும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பஞ்சலிங்கங்கள்
ஆலயத்தின் மகாமண்டபத்திலிருந்து வலப்பக்கம் பஞ்சபூதங்களுக்கான பஞ்சலிங்கங்கள் ஐந்து சந்நிதிகளில் இருந்து அருள்புரிகிறார்கள்.
பஞ்சபூதங்களைக் கடந்து சென்றால், 63 நாயன் மார்களின் சிலைகள் உள்ளன. இதற்கு வலப்பக்கத்தில் காசி விஸ்வநாதர் சந்நிதி உள்ளது.
இதனைக் கடந்து சென்றால் நம்மை இன்முகத்துடன் வரவேற்பவர்தான், சித்தி விநாயகர். இந்தச் சிலை சமீப காலத்தில் நிறுவப்பட்டது.
இரட்டை விநாயகர்
இந்தச் சித்தி விநாயகருக்கு இடப்பக்கத்தில் இரட்டைப் பிள்ளையார் சந்நிதி உள்ளது. ஒருவர் வலம்புரி பிள்ளையார். இரட்டைப் பிள்ளையார் சந்நிதியில் வேண்டிக்கொண்டால். 90 நாளில் தடைகள் நீங்கித் திருமணம் நடைபெறும் என்பது அனுபவ உண்மை.திருமணத்திற்கு முன்பு வலம்புரி பிள்ளையாருக்கு ஒரு மாலையும், திருமணம் முடிந்த பின்பு இரண்டு பிள்ளை யாருக்கும் இரண்டு மாலைகளை அணிவித்து, நமது வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும்.
நாகமூர்த்தி
இரட்டை விநாயகர்களை வணங்கி வலம் வந்து திரும்பினால் 23 நாகமூர்த்தியின் சிலைகள் உள்ளன. அவர்களை வழிபட்டு இடப்பக்கம் திரும்பினால் ஆயிரம் லிங்கங்கள் கொண்ட ஆயிரலிங்க சந்நிதி அமைந்துள்ளது. நேர் எதிரே குருபகவானான தட்சிணாமூர்த்தி சந்நிதி உள்ளது.
ஆயிரலிங்க சந்நிதிக்கு இடப்பக்கத்தில் வள்ளி, தெய் வானையுடன் முருகன் சந்நிதி. இதன் எதிர்ப்புறம் பிரம்மா வும் விஷ்ணுவும் சிவனுடைய முடியையும் அடியையும் காண முயற்சி செய்த லிங்கோத்பவர் சிலை இருக்கிறது.
முருகன் சந்நிதிக்கு இடப்பக்கத்தில் கஜலட்சுமியின் சந்நிதி, இக்கோயிலின் வடக்கு மூலையில் பெரிய தேவி என்ற மூதேவி, ரௌத்திரி ஆகியோரின் சிலை ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவர்களைக் கடந்து வலப்பக்கம் திரும்பினால் சண்டிகேஸ்வரர் சந்நிதி. அதற்கு எதிரே துன்பங்கள் போக்கும் துர்க்கையம்மன் சந்நிதி உள்ளது.
அறம் வளர்த்த நாயகி
இங்கு எழுந்தருளியுள்ள அம்மனுக்கு ‘அறம் வளர்த்த நாயகி’ என்று பெயர். திருமணத் தடையை ‘கத்திரி தோஷம்’ என்று கூறுவர். எனவே தோஷம் நீங்கி, திருமணம் நடைபெற வேண்டி இந்த அம்மன் சந்நிதியில் இரவிக்கைத்துணி, தாலி, தேங்காய், பழம், வெற்றிலைப்பாக்கு வைத்து அர்ச்சனை செய்வார்கள்.அம்மனைத் தரிசித்துவிட்டு வெளியே வந்தால், பிச்சாண்டவர் சந்நிதியும், பைரவர் சந்நிதியும் உள்ளன. அதனருகில் நவக்கிரகங்கள் சந்நிதி உள்ளது. நவக்கிரகங்களை வழிபட்டு வலப்பக்கம் திரும்பினால் வில்வ மரம் நிற்கும். அதனடியில் சனி பகவான் ஒற்றைக்காலில் நின்று தவம் செய்யும் சிலை, நாம் காணவேண்டிய ஒன்று.
பிரதோஷம்
தான்தோன்றிநாதரது ஆலயத்தில் பிரதோஷ காலங் களில் நடைபெறும் பால் முழுக்கு மிகச்சிறப்பு வாய்ந்தது.
இருப்பிடம்
சேலம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 30 கி.மீ. தொலைவில் பேளூர் ஈஸ்வரன் கோயில் உள்ளது. அடிக்கடி பேருந்துகள் போய் வருகின்றன.