ஏழரை சனி என்றால் என்ன?
பொதுவாக, சனி(Sani) பகவான்- ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்திற்கு (அதாவது உங்கள் ராசிக்கு) 3,6,11 ஆகிய இடங்களில் வரும் போதெல்லாம் நன்மைகளை வாரி வழங்குவார். அப்போது அவர் வள்ளல். ஏன்? குரு போன்ற சுபக் கிரகங்கள் கூட அந்த அளவுக்கு நன்மையை செய்ய முடியாது. அவ்வளவு நன்மையை சனி செய்வார்.
ஆனால், அதே சனி 12,1,2,4,5,7,8,9,10 ஆகிய இடங்களுக்கு வரும் போதெல்லாம் நம்மை வறுத்து நூடில்ஸ் ஆக்கி விடுவார்.அதிலும் 12,1,2 ஆகிய இடங்களில் வரும் போது அதனை ஏழரை சனி என்று சொல்வோம். அந்தக் காலத்தில் தான் அதிகம் பேருக்கு திருமணம் நடக்கும். விளையாட்டாக சொல்ல வில்லை, உண்மையை தான் சொல்கிறேன். அதாவது அதிக பொறுப்பை தலை மீது ஏற்றி வேடிக்கை பார்ப்பார் சனி.சிலந்தி வலையில் சிற்றெறும்பு சிக்கிய கதையாக ஏழரை வருடம் இருக்கும். (ஆனால், இங்கு சனி நல்ல சிலந்தி, நம்மை சாப்பிட்டு விட மாட்டார்.
மாறாக மூன்றாம் இடத்திற்கு வரும் சமயத்தில் நன்மைகளை கொடுத்து தேற்றி விட்டுப் போவார். சனி சார், நீங்க நல்லவரா? இல்ல கெட்டவரா? என்று கேட்கும் அளவிற்கு ஏழரைச் சனி முடிந்து மூன்றாம் இடத்திற்கு வரும் சனி நன்மையை செய்வார்).
இதற்கு அடுத்த படியாக சனி எட்டாம் இடத்திற்கு வரும் போது பெரும் தீமையை செய்வார். ஏழரை ஆண்டு காலம் தரும் வேதனையை அந்த இரண்டரை காலங்களில் தந்து விடுவார். அதிலும் நம் உறவுகளில், நமக்கு பிடித்த வயோதிக நபர்களை கொஞ்சம் அதிக கவனம் எடுத்து பார்த்துக் கொள்ள வேண்டி இருக்கும் (சனி அஷ்டமத்தில் வரும் போது).
அடுத்து சனி நான்கில் வரும் போது அர்த்தாஷ்டம சனி என்பார்கள் (அதாவது அஷ்டமத்தில் பாதி). சொல்லவே வேண்டாம்.
ஏழரை சனி நடக்கும் போது செய்ய வேண்டிய பரிகாரங்கள்
இதில் ஏழரைச் சனி நடக்கும் காலங்களில் பைரவரை வழிபாடு செய்வது. சனிக் கிழமைகளில் சனியின் காயத்திரி மந்திரத்தை நல்லெண்ணெய் தேய்த்து குளித்து முடித்த பிறகு பூஜை அறைக்கு வந்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி தியானிப்பது. தாய், தந்தை இல்லாதவர்கள் மட்டும் காக்கைக்கு எள் சோறு வைக்கலாம்.(வெங்காயம், பூண்டு அதில் இருக்க கூடாது).
துர் வார்த்தைகள் (ஏழரை, சனியன் போன்ற இன்னும் பல வார்த்தைகள்) வாயில் வராமல் பார்த்துக் கொள்வது.முடிந்தால் சனிக்கிழமைகளில் எள், நல்லெண்ணெய், இரும்பு ஆகிய இவற்றில் ஏதேனும் ஒன்றை தானம் செய்வது (முடிந்தால் யாரிடம் இருந்தும் இதனை பெறாமல் இருப்பது)கருப்பு துணியை பிரம்மச்சாரிகளுக்கு தானம் அளிப்பது போன்ற இவை அனைத்துமே சனிப் ப்ரீத்தி ஆகும்.
இது தவிர ஆஞ்சநேய வழிபாடு செய்யலாம்.
ஸ்ரீ ருத்திரம் அடிக்கடி பாராயணம் செய்யலாம்.
பின்குறிப்பு :
அதுவே இரண்டாவது சுற்று நடக்கும் ஏழரைச் சனியை பொங்கு சனி என்பார்கள். இது நிறைய நன்மையை செய்யும். ஆனால், அதுவே, மூன்றாவது சுற்று நடக்கும் சனியை மங்கு சனி என்பார்கள். இது தீமையை செய்யும்.