குரு பெயர்ச்சி பலன்கள் (Guru Peyarchi Palangal) – சிம்மம்
சித்திரை மாதம் 9ம் தேதி (22.04.2023) சனிக்கிழமை, உதயாதி நாழிகை 43:30 அதாவது இரவு 11: 27 மணிக்கு ரேவதி நட்சத்திரம் 4ம் பாதம் மீன ராசியில் இருந்து அஸ்வினி நட்சத்திரம் 1ம் பாதம் மேஷ ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி அடைகிறார்.
சூரிய பகவானின் அருள் பெற்ற சிம்ம ராசி அன்பர்களே!! உங்கள் ராசிக்கு 5-ம் இடமான தனுசுக்கும், எட்டாம் இடமான மீனத்துக்கும் உரியவரான குரு பகவான் தற்பொழுது ஒன்பதாம் இடமான பித்ரு ஸ்தானத்துக்கு செல்கிறார். அவரின் விசேஷப் பார்வைகள் ஐந்தாம் பார்வை உங்கள் ராசியிலும், ஏழாம் பார்வை சகோதர ,தைரிய வீரிய ஸ்தானத்திலும்,9-ம் பார்வை பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் பதிவது சிறப்பு. இந்த அமைப்பின்படி இது உங்களுக்கு சீரான வளர்ச்சிகளை ஏற்படுத்தக் கூடிய காலகட்டமாக இருக்கும். அதே சமயம் எதிலும் அவசரமும், அலட்சியமும் தவிர்ப்பது நல்லது.
வேலை -அலுவலகம்
அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய உயர்வுகள் வரத் தொடங்கும். வீண் பழி ஏற்றிருந்த நிலைமை மாறும். மேலதிகாரிகள் ஆதரவு மகிழ்ச்சி தரும். உங்கள் உயர் அதிகாரிகள் உங்களிடம் தரும் பணிகள் எதையும் பிறரை நம்பி ஒப்படைக்க வேண்டாம். சட்டென்று உணர்ச்சிவசப்படுவதும், சடார் என்று வார்த்தைகளை விடுவதும் நன்மைகளை எதிர்மறையாக்கி விடலாம். நாவடக்கம் மிக முக்கியம்.
குடும்பம்
குடும்பத்தில் விடியல் வெளிச்சம் பரவத் தொடங்கும். விசேஷங்களும், விருந்தினர் வருகையும் நிகழும். இந்த சமயத்தில் மறந்தும் யாரையும் உதாசினமாக பேசிவிட வேண்டாம். வாழ்க்கைத் துணையுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். வாரிசுகளால் பெருமை சேரும். பூர்வீக சொத்துக்கு வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். ஆடை, ஆபரணம் சேரும். பூமி சார்ந்த சொத்து வாங்குவது ,விற்பதில் நேரடி கவனம் அவசியம்.
தொழில்
செய்யும் தொழிலில் கடின சூழல் நீங்கி வளர்ச்சி அதிகரிக்கும். புதிய முதலீடுகளில் முறையான ஒப்பந்தமும், எச்சரிக்கையான செயல்பாடுகளும் அவசியம். பங்கு வர்த்தகம், ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்கள் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.
அரசு -அரசியல்
அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு ஆதரவு அதிகரிக்கும். அதே சமயம் மேல் இடத்திற்கும் உங்களுக்கும் இடையில் சில திரை போட முயற்சிக்கலாம். வார்த்தைகளையும், செயல்களையும் எப்போதும் நிதானமாக இருப்பது நல்லது.
மாணவர்கள் மனம் போல் மதிப்பெண் பெறுவீர்கள். படிப்பதை ஒரு முறைக்கு இருமுறை எழுதி பார்ப்பது நல்லது. எந்த விஷயத்திலும் பெற்றோர், ஆசிரியர் வழிகாட்டலை கேளுங்கள்.
கலை, படைப்பு துறையினர் அவரவர் திறமைக்கு உரிய அங்கீகாரமும் பாராட்டும் பெறுவீர்கள், வாழ்க்கையில் நிதானமும் செயல்களில் உறுதியும் இருந்தால் உங்கள் திறமையை ஊரே போற்றும்.
எச்சரிக்கை
பயண பாதைகளில் வேகம் கூடவே கூடாது. வழிப்பாதையில் பிறர் தரும் உணவை தவிர்த்து விடுங்கள். ரத்த அழுத்தம்,முதுகு தண்டுவடம், மூட்டுகள் தேய்மானம், நரம்பு கோளாறு, பல் உபாதைகள் போன்ற உடல் பிரச்சினைகள் வரலாம்.
பலன் தரும் பரிகாரம்
ஒரு முறை பட்டீஸ்வரம் சென்று துர்க்கை அம்மனுக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து விட்டு வாருங்கள். துர்க்கை அருளும்,குருவின் அனுகிரகமும் உங்கள் வாழ்க்கையை செழிக்க செய்யும்.