குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026- மகரம்
குரு பெயர்ச்சி நாள் மற்றும் நேரம்
சித்திரை மாதம் 31 ஆம் தேதி(14.05.2025) புதன்கிழமை இரவு10.36 மணிக்கு சூரிய உதயாதி 42.02 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கிறார்.
ஐப்பசி மாதம் 1ம் தேதி(18.10.2025) சனிக்கிழமை இரவு 7.47 மணிக்கு சூரிய உதயாதி 34.20 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் அதிசாரமாக மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு செல்கிறார்.
கார்த்திகை மாதம் 19ம் தேதி(05.12.2025) வெள்ளிக்கிழமை மாலை 05.25 மணிக்கு சூரிய உதயாதி 27.40 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் வக்ரகதியில் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கு திரும்புகிறார்.
குரு பெயர்ச்சி கிரக நிலைகள்
மகர ராசி அன்பர்களே! நீங்கள் இது காறும் குருவினால் மிகுந்த நன்மைகள அடைந்திருக்க வேண்டும்.ஆனால் நீங்கள் நிறையக் கஷ்டப்பட்டதால், குருபகவான் செய்த யோகங்கள் எந்தவித நல்ல பலனையும் முழுதாக தரவில்லை. இந்த முறை குருபகவான் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் சென்று அமரப் போகின்றார். ஆறாமிடத்துக் குரு. பொதுவாக நன்மை செய்வதில்லை .
“பாரப்பா பரமகுரு ஆறிலேர பலமுள்ள மகாபலி சக்ரவர்த்தி
சீரப்பா சிறைகூடம் சென்றாரப்பா சிவசிவா
தேவர்கள் தன் கொடுமையாலே ஈறப்பா
இராஜபயம் கலகம் துன்பம் இல்லறத்தில் களவுபோம்
கிலேசம் மெத்த வீரப்பா வெகுபயமாம் சர்ப்பதோஷம்
வேந்த நின்ற பதவியறிந்து வினையை முட்டே”.
என்ற புலிப்பாணி முனிவரின் பாடலையும்,
“சத்திய மாமுனியாறிலே இருகாலே தலை பூண்டதும்”
என்ற ஜோதிடப் பாடலையும் படித்துப் பயப்படத் தேவையில்லை. குருபகவான் உங்கள் ராசிக்குப் பத்தாமிடமாகிய தொழில் ஸ்தானத்தையும், 12 மிடமாகிய விரயஸ்தானத்தையும், 2மிடமாகிய தனம், குடும்பம், வாக்கு ஸ்தானத்தையும் பார்வையிடப் போகின்றார் அல்லவா?
குரு பார்வை

கடன் வாங்கி சுபகாரியங்கள், திருமணம், சடங்கு போன்றவையும் நடக்கும், வாக்கு, நாணயம் தவறக்கூடிய சூழ்நிலைகள் வராமல் பார்த்துக் கொள்வார். எனவே பழைய கடனை அடைக்க புதுகடன் வாங்க வேண்டிவரும். மூத்த சகோதரருடன் கருத்து வேறுபாடு தோன்றும். அரசாங்கத் தொந்தரவுகள், வீண் பிரச்சனைகள், வாகனத்தில் சிறு விபத்து போன்றவையும்,
தேவையில்லாத ஆடம்பரச் செலவுகளும் ஏற்படும். எதாவது ஒரு சிறு காரணத்துக்காக, கோர்ட், கேஸ், வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஒரு சிலரின் அஜாக்கிரதையினால், பணம், பொருள் காணாமற்போக அல்லது திருடுபோக வாய்ப்புண்டு. அதிகச் செலவுகள் ஏற்பட்டாலும், சமாளிக்கக்கூடிய அளவுக்கு பணப்புழக்கம் இருக்கும். பணம் வெளியே அதிகளவு நிலுவையில் நிற்கும். கடன் முழுமையாகத் தீராவிட்டாலும், பெரிய பாதிப்புகள் ஏற்படுத்தாது.
திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும். இந்த குருப்பெயர்ச்சியானது, உங்களுக்கு மிகப்பெரிய யோகத்தைச் செய்யாவிட்டாலும், கண்டிப்பாக கஷ்டப்படுத்தாது என்பது உறுதி. பூர்வீகச் சொத்துக்களை விற்பனை செய்ய வேண்டி வரலாம். பிள்ளைகள் வழியில் செலவுகள் ஏற்படக்கூடும். 8.10.2025 முதல் 21.12.2025 முடிய 72 நாட்கள் குரு கடகத்தில் இருக்கும் போது, மிக நல்ல பலன்கள் ஏற்படும். சனிப்பெயர்ச்சி முதல் மிகுந்த நன்மைகள் ஏற்படும்.
வியாபாரிகள் : மகர ராசி வியாபாரிகளுக்கு பழைய தொழிலில் ஏகப்பட்ட போட்டியும். பொறாமையும் இருக்கும். டென்சன் நிறைய ஏற்படும். பணம் அதிகம். நிலுவையில் நிற்கும். எதிர்பார்த்த லோன் முதலியவை நீண்ட பிரயாசைக்குப் பிறகு கிடைக்கும். புதிய கட்டிடம் கட்டி இடமாற்றம் செய்யவோ, அல்லது புதிய தொழில் ஏதாவது ஒன்றை ஆரம்பிக்கவோ வாய்ப்புகள் அமையும்.
வியாபார சம்மந்தமான கோர்ட், கேஸ். பிரச்சனைகள் இழுத்தடிக்கும் தொழிலாளர் உறவு சுமூகமாக இராது. லாபம் நிறையக் கிடைத்தாலும் கூட, அதிகச் செலவினங்களால், னங்களால், பதியகடன் வாங்க நேரிடும். எனவே அகலக்கால் வைக்காமலிருந்தால், தொழிலை நல்ல முறையில் நடத்தலாம். சனிப்பெயர்ச்சிக்கு பிறகு ஓரளவு பிரச்சனைகள் தீரும். பொருளாதாரம் மேம்படும்.
உத்யோகஸ்தர்கள் : வேலையில்லாமல் தவித்தவர்களுக்கு ஒரு சாதாரணமான வேலை அமையும். திடீர் இடமாற்றம் ஏற்படக்கூடும். உங்களை விட திறமையில்லாதவர்கள். உங்களை ஓரங்கட்டப் பார்ப்பார்கள். ஆனால் உங்களிடம் அது பலிக்காது. ஆபிஸில், லோன் போட்டு வீடு, வாகனம் வாங்க ஒரு சிலருக்கு யோகம் ஏற்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு இன்னும் தாமதமாகும். ஆனால் கிடைத்து விடும். சனிப்பெயர்ச்சிக்கு பிறகு வேலையில் மதிப்பு, மரியாதை கூடும். அனைத்தும் நலமாகும்.
பெண்கள் : கணவன், மனைவி உறவு ஒருநாள் போல மறுநாள் இராது, பிள்ளைகள் உங்கள் வெறுப்பைச் சம்பாதிப்பார்கள். வேலைக்குச் செல்லும் பெண்களினால், ஆபிஸில் பிரச்சனை. தலைவலி, உடற்சோர்வை அடைவீர்கள். லோன் வாங்கி, ஆடை, ஆபரண யோகம் அமையும் அல்லது புதுவீடு கட்டி குடி புகுவீர்கள், மாமியார், நாத்தனார் உறவு சுமூகமாக இராது.
ஒரு சிலர் தனிக்குடித்தனம் செல்ல நினைப்பீர்கள். அதற்கு கணவரின் ஒத்துழைப்புக் கிடைக்காது. எப்படியோ நாளும் பொழுதும் செல்லும் பணத் தட்டுப்பாடு இருக்கும். ஒரு சிலர் நகைகளை அடகு வைப்பீர்கள். சனிப்பெயர்ச்சிக்கு பிறகு ஓரளவு கஷ்டம் குறையும். பொருளாதாரம், உடல்நலம் சீராகும்.
மாணவர்கள் : கல்வியில் ஊக்கமுண்டாகும். விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். ஒரு சிலர் படிப்புக்காக நிறைய செலவழிக்க வேண்டியது வரும். வெளியூரில் தங்கியோ. வெளிநாட்டில் படிக்கவோ ஒரு சிலருக்கு வாய்ப்புகள் உண்டு. நண்பர்கள் விஷயத்தில் கவனம் தேவை.
கலைஞர்கள் : அடிக்கடி வெளியூர் வாய்ப்புகள் கிடைக்கும். பேரும், புகழும் மட்டுமே மிஞ்சும். செலவுகள் சரிக்கட்ட முடியாமல் தத்தளிப்பீர்கள். ஒரு சிலர் மனைவியின் நகைகளை அபகு வைப்பீர்கள். பிறகு திருப்பிக் கொடுக்க முடியாமல் திணறுவீர்கள். போதைக்கு அடிமையாகாமல் இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு வாய்ப்புகள், நிறைய தேடி வரும்.
அரசியல்வாதிகள் : உங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று வருந்துவீர்கள், எதிர்பாராமல் சிறிய பதவி ஒன்று தேடிவரும். வருமானத்தை, டம்பத்துக்காக ஆடம்பரமாகச் செலவு செய்து விட்டு, குடும்பத் தேவைகளை கவனிக்காமல் விட்டு விடுவீர்கள். எனவே குடும்பத்தை முதலில் கவனியுங்கள். எல்லாம் சரியாகிவிடும்.
விவசாயிகள் : நன்செய்ப் பயிர் சரியிராது. புன்செய்ப் பயிர் நன்கு விளையும், மிளகாய் வற்றல், சூரியகாந்தி பலன் தரும். வாகனங்கள் சுமாரான பலன்களைத் தரும். கணக்குப் பார்த்தால் ஒன்றும் பெரிதாக மிச்சமிராது. கால்நடைகள் விருத்தியிராது. சனிப்பெயர்ச்சி முதல் ஓரளவு நன்மைகள் கிடைக்கும். கையிருப்பு மிஞ்சும்.
பரிகாரம் : குருப்பெயர்ச்சியன்று கும்பகோணம் சென்று அருகேயுள்ள ஆலங்குடி சென்ற தக்ஷிணாமூர்த்தியை வழிபடுங்கள். வசதி இல்லாதவர்கள் அருகிலுள்ள சிவன் கோவிலுக்கு சென்று குருபகவானை வழிபடுங்கள். கொண்டைக்கடலை படைத்து நெய் தீபமேற்றி, முல்லை மலரால் குருவை வழிபடுங்கள்.
மதுரை – மேலூர் – திருப்பத்தூர் அருகேயுள்ள பட்டமங்கல சென்று அங்குள்ள அஷ்டமாசித்தி தக்ஷிணாமூர்த்தியை 108 முறை வலம் வந்து வணங்கினா நலம்.
தெற்கே உள்ளவர்கள் செங்கோட்டை அருகிலுள்ள புளியரை சென்று தக்ஷிணாமூர்த்தியை வழிபட நல்லது.