குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026- மீனம்
குரு பெயர்ச்சி நாள் மற்றும் நேரம்
சித்திரை மாதம் 31 ஆம் தேதி(14.05.2025) புதன்கிழமை இரவு10.36 மணிக்கு சூரிய உதயாதி 42.02 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கிறார்.
ஐப்பசி மாதம் 1ம் தேதி(18.10.2025) சனிக்கிழமை இரவு 7.47 மணிக்கு சூரிய உதயாதி 34.20 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் அதிசாரமாக மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு செல்கிறார்.
கார்த்திகை மாதம் 19ம் தேதி(05.12.2025) வெள்ளிக்கிழமை மாலை 05.25 மணிக்கு சூரிய உதயாதி 27.40 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் வக்ரகதியில் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கு திரும்புகிறார்.
குரு பெயர்ச்சி கிரக நிலைகள்
மீன ராசி அன்பர்களே! கடந்த ஒரு வருடமாக குருபகவான் உங்கள் ராசிக்கு மூன்றில் மறைந்ததால், பொருளாதார ரீதியாக ஏற்றத்தாழ்வான சூழ்நிலை ஏற்பட்டது. உடல் உபாதை கூடியது. தொழில் போட்டியும், எதிரிகள் கை ஓங்கவும் செய்தது.
மன அமைதி குறைந்தது. ஒரு சிலர் தவறான பழக்க வழக்கங்களுக்கு ஆளானீர்கள். தொழில் நல்ல முறையில் நடைபெற்று, லாபம் கிடைத்தாலும், எதிரிகளின் சூழ்ச்சியினால் ஏதாவது ஒரு பிரச்சனை ஏற்பட்ட வண்ணமிருந்தது. வீண்வம்பு, விவகாரங்கள் ஏற்பட்டது. காதலில் பிரச்சனைகள் ஏற்பட்டது. புதிய தொழில், உத்யோகம் ஏற்பட்டாலும், கடனும் ஏற்பட்டது.
இந்த முறை குருப்பெயர்ச்சியானது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் குரு அமர்ந்து பலன் செய்யப் போகின்றார். நான்காமிடம் குருவுக்கு அத்தனை சிறப்பானதல்ல என்றாலும் நான்காமிடத்துக் குரு பற்றி
சொல்லப்பா சூதாட்டம் கொடியதப்பா சுகமுள்ள பஞ்சவர்கள் வினையினாலே அல்லப்பா அகிலங்கள் வினையினாலே அப்பனே ஆரணியம் சென்றானவர்
நல்லப்பா நாலதனில் குருவு மேற நரச்சுகமுங் கிட்டாது நலிவுமுண்டு மல்லப்பா மண்ணாலும் பொன்னால் வேதை மகத்தான குருபதியின் கடாட்சத்தாலே”.
புலிப்பாணி முனிவரும், “தர்மபுத்திரர் நாலிலே வனவாசம்படி போனதும்” என்று இன்னொரு ஜோதிடப் பாடலும் கூறியவாறு அத்தனை பிரச்சனைகள் ஏற்படப் போவதில்லை என்று அடித்துச் சொல்லலாம்.
குரு பார்வை

குருபகவான் நான்காமிடத்தில் கேந்திராதிபத்ய தோஷம் பெற்றாலும், தொழில் ஸ்தானத்தைக் குரு பார்ப்பதால், தொழில் பெருகும். புதிய தொழில் முயற்சிகள் கைகூடும். ஒரு சிலர் இடமாற்றம், பழைய வாகனத்தை விற்று புது வாகனம் வாங்குதல், நகைகளை அவசரத் தேவைக்கு அடகு வைத்தல், கடன் வாங்கி திருமணம், சடங்கு போன்ற சுபகாரியங்கள் செய்தல் போன்ற பலன்களை அடைய வேண்டிவரும். ஏழரைச் சனியினாலும், ராகு – கேதுவாலும் பாதிப்புகள் அதிகரிக்கும். எதிலுமே தடங்கலும் அதனால் மனஉளைச்சலும் ஏற்படும்.
மேலும் தர்மபுத்திரர் போல சூதாடினால் தானே வனவாசம் ஏற்படும். நீங்கள் தான் நேர்மையானவராயிற்றே எனவே லாட்டரி, ஸ்பெகுலேசன் துறைகளில் ஈடுபடாதீர்கள். வாகனத்தில் சிறு விபத்து, உடல்நிலை பாதிப்பு, தாய்க்கு பீடை, ஏற்பட வாய்ப்புண்டு. சிலருக்கு வீடு, கட்டிடம், இடத்தை விற்று, கடன் அடைக்க நேரிடலாம். சிலருக்கு பழைய சொத்தை விற்று விட்டு, புது வீடு, மனை வாங்க யோகம் வரும்.
குரு வக்ர கதியில் கடகத்தில் இருக்கும் 72 நாட்கள், நன்மைகள் ஏற்படும்.
வியாபாரிகள் : பழைய தொழிலில் முடக்கம் இருக்கும். அதிகமான கவனம் தேவைப்படும். ஒரு சிலர் புதிய தொழில் செய்யவோ, தொழிலை இடமாற்றம செய்யவோ வாய்ப்புகள் உண்டாகும். லாபம் எல்லாமே ஏதாவது ஒரு வழியில் செலவாகிவிடும். வேலைக்காரர் உறவு சுமூகமாக இராது. சரக்குகள் தேங்கும். பணம் அதிகம் நிலுவையில் நிற்கும். வசூலாகாது. வியாபார சம்பந்தமான வழக்கு வியாஜ்ஜியங்கள் தோன்றலாம். எச்சரிக்கையுடன், திட்டமிட்டு காரியமாற்றுங்கள்.
உத்யோகஸ்தர்கள் : வேலையில் பிடிப்பில்லாமல் இருப்பீர்கள். திடீரென்று இடமாற்றம் உத்தரவு வரும். அடிக்கடி பிரயாணங்கள் ஏற்படும். உடல் பாதிப்பால் அடிக்கடி லீவு போட வேண்டிவரும். மனஅமைதி குறைந்து காணப்படுவீர்கள். தேவையில்லாமல் ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். சிலர் கடன் வாங்கி, வீடு, வாகனம் வாங்குவீர்கள். பின்பு கடனை அடைக்க முடியாமல் தவிப்பீர்கள். மேலதிகாரிகள் உங்கள் மீது வெறுப்பைக் காட்டுவார்கள். கீழே பணிபுரிபவர்களும், சக ஊழியர்களும், அனுசரணையாக நடக்க மாட்டார்கள். நீண்ட நாட்களாக வேலை தேடியவர்களுக்கு ஏனோ, தானோவென்று ஒரு திருப்தியில்லாத வேலை அமையும்.
பெண்கள்: கணவர் உங்களை மதிக்கவில்லையே என்று ஏங்குவீர்கள். குடும்பத்தில் தாய்வீடு உறவு பகையாகும். உத்யோகம் பார்க்கும் பெண்கள், உத்யோகத்திலும் அமைதி இராது. குடும்பத்திலும், மாமியார், நாத்தனார், உறவு சரியிராது. கடன் வாங்க வேண்டியிருக்கும்.திடீரென்று வயிற்றுவலி ஏற்படும் மிச்சம் பிடிக்கவே இயலாது. ஏதோ கடமைக்காக வாழ்வது போல இருக்கும்.
மாணவர்கள் : கல்வியில் ஆர்வம் உண்டாகும். பரீட்சை நேரத்தில் மறதியும், உடல் சோர்வும் உண்டாகும். கெட்ட நண்பர்கள் பழக்கம் ஏற்பட்டு, தீய பழக்கங்களை கற்றுக் கொடுப்பார்கள். யாரிடமும் பழகாதீர்கள். விரும்பிய பாடப் பிரிவிலே இடம் கிடைக்கும். கிடைத்த பிரிவில் ஆர்வம் செலுத்துங்கள். எதிர்காலம் பிரகாசமாகக் காத்திருக்கின்றது.
கலைஞர்கள்: அடிக்கடி வெளியூர் பிரயாணம் ஏற்படும். நல்ல வாய்ப்புகள் கிடைத்து.திறமையைக் காட்டுவீர்கள். ஆனால் உங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காது. உங்களைவிடத் திறமை குறைந்தவர்கள் உங்களை மிஞ்சி நிற்பார்கள். வீண் அலைச்சலும், பணவிரயமும் கெட்ட பழக்கமும் ஏற்படப் போகின்றது.எத்தனை வருமானம் வந்தாலும், இறுதியில் எதற்காவது வேண்டியிருக்கும். கிடைத்ததை வைத்துத் திருப்தியாகக் காலந்தள்ளுங்கள். கடன் வாங்க
அரசியல்வாதிகள் : எத்தனை திறமைகள் இருந்தும், பெரிய மனிதர்கள் நட்பு இருந்தும் உங்களுக்குரிய பதவி கிடைக்காது. ஏனோதானோ வென்று ஒரு சிறிய பதவி கொடுத்து உங்களைத் திருப்திப் படுத்த முயல்வார்கள். அதில் உங்கள் திறமையைக் காட்டுங்கள். எதிர்காலம் பிரகாசமாக இருக்கின்றது.
விவசாயிகள் : கால்நடை வாகனம் சுமாராக இருக்கும். சேதம் ஏற்படும். பயிர் விளைச்சல் சரியிராது. நல்ல விலை கிடைக்காது. நஷ்டம் ஏற்படும்.
பரிகாரம் : மதுரை மேலூர் திருப்பத்தூரில் இறங்கி, பட்டமங்கலம் என்னும் ஊருக்குச் சென்று அங்குள்ள சிவன் கோவிலின் வாசலில் ஆலமரத்தடியில் அமர்ந்துள்ள அஷ்டமாசித்தி தக்ஷிணாமூர்த்தியை வழிபட்டு வாருங்கள்.
வாராவாரம் வியாழக்கிழமை தக்ஷிணாமூர்த்தி சந்நிதியில், நெய் தீபமேற்றி, கொண்டைக்கடலை படைத்து, பொன்னிற வஸ்திரம் சாற்றி, முல்லை மலரால் வழிபட உத்தமம். குருவுக்குச் சமமானவர்களிடம் ஆசிர்வாதம் பெறுங்கள்.
கும்பகோணம் அருகிலுள்ள ஆலங்குடி சென்று வழிபடுங்கள் நலம். காளஹஸ்தி சென்று ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்யுங்கள்.
செங்கோட்டை அருகிலுள்ள புளியரை சென்று, தக்ஷிணாமூர்த்தியை வழிபட நல்லது.