குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026-மிதுனம்
குரு பெயர்ச்சி நாள் மற்றும் நேரம்
சித்திரை மாதம் 31 ஆம் தேதி(14.05.2025) புதன்கிழமை இரவு10.36 மணிக்கு சூரிய உதயாதி 42.02 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கிறார்.
ஐப்பசி மாதம் 1ம் தேதி(18.10.2025) சனிக்கிழமை இரவு 7.47 மணிக்கு சூரிய உதயாதி 34.20 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் அதிசாரமாக மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு செல்கிறார்.
கார்த்திகை மாதம் 19ம் தேதி(05.12.2025) வெள்ளிக்கிழமை மாலை 05.25 மணிக்கு சூரிய உதயாதி 27.40 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் வக்ரகதியில் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கு திரும்புகிறார்.
குரு பெயர்ச்சி கிரக நிலைகள்
மிதுன ராசி அன்பர்களே! கடந்த ஒரு வருடமாக குருபகவான் உங்கள் ராசிக்குப் பன்னிரண்டாமிடத்திலே அமர்ந்திருந்தார். எடுத்ததெல்லாம் தண்டச் செலவுகள், காரிய முடக்கம், சிறு விபத்துகள், திருடு போகுதல், உடல் நலக்குறைவு, சிறு ஆபரேசன், பொருளாதார நெருக்கடி, நகைகளை அடகு வைத்தல், வீண் விரயங்கள், தேவையில்லாத பிரயாணங்கள் போன்ற அசுப விரயங்களும், அதே சமயம் புது மிஷின் வாங்குதல், லோன் போட்டு புதுக்கட்டிடம் கட்டுதல், வீட்டுக்கு ஆடம்பரச் சாமான்கள் வாங்குதல், தீர்த்த யாத்திரை செய்தல், திருமணம், சடங்கு, உறவினர் வகையில் செய்முறை செய்தல் போன்ற சுபவிரயங்களும் செய்ய வேண்டி வந்தது. இந்த முறை குருபகவான் உங்களது சொந்தவீடாகிய மிதுன ராசியில் வந்து அமரப் போகின்றார். புலிப்பாணி முனிவரும்.
“பாரப்பா இன்னுமொன்று பகரக்கேளு
பரமகுரு ஜென்மத்தில் வந்த போது கூறப்பா
கோதண்டபாணி வீரன் கொற்றவ குடியேறிப் போகச் செய்தார்
சீரப்பா ஜென்மத்துக்கு வேதை மெத்த
சிவசிவா செம்பொன்னும் நஷ்டமாகும்.”
வீரப்பா வேந்தனுட தோஷமுண்டு என்று கூறுகிறார். “ஜென்மராமர் வனத்திலே சீதையை விடுத்ததும்” என்று இன்னொரு ஜோதிடப் பாடலையோ நினைத்துப் பயப்படத் தேவையில்லை. குருபகவானின் பார்வைக்கு பலம் அதிகம். குருபகவான் தன்னுடைய சொந்த வீட்டிலே அமர்ந்து 5மிடமாகிய. மாகிய. பூர்வபுண்ய ஸ்தானத்தையும், 7மிடமாகிய களத்திர ஸ்தானத்தையும். 9மிடமாகிய பாக்கிய ஸ்தானத்தையும் பார்வையிடுவது மிகவும் சிறப்பாகும்.
என்னதான் ஜாதகத்தில் நல்ல திசாபுத்திகள் நடைபெற்றாலும், ஜென்ம குருவினால் சிறிய பாதிப்பாவது ஏற்படத்தான் செய்யும், ஒரு சிலருக்கு சொத்தை விற்று கடன் அடைக்கவும் நேரிடலாம்.
குரு பார்வை பலன்கள்

ஜென்ம ராசியில் குரு சஞ்சரிக்கும் போது, அரசாங்கப் பிரச்சனைகள், சகோதர பகை. மனைவி மக்களிடம் தகராறு. குடும்பத்தை விட்டு ஏதேனும் காரணத்தால் பிரியநேர்தல். பணவிரயம் போன்றவற்றில் ஏதாவது ஒன்றையாவது செய்யத் தான் செய்வார். கடன் வாங்கி, வீடு கட்டும் யோகமும், சுபகாரியங்களும் ஒரு சிலருக்கு நடைபெறும். பூர்வீகச் சொத்தில் வில்லங்கம் நீங்கும். குருபகவான். ஏழாமிடத்தைப் பார்ப்பதால், ஒரு சிலருக்கு திருமணம் கைகூடும். சிலருக்கு புத்திரபாக்கியம் ஏற்படும். பெரிய மனிதர் சந்திப்பு, மகான்களின் ஆசி போன்றவையும் கிடைக்கும். தெய்வ வழிபாடு நேர்த்திக் கடன் செலுத்துதல் போன்றவையும் நடக்கும். சனிப்பெயர்ச்சியானது. சனி பத்தாமிடத்தில் இருப்பதால் கெடுதல் இராது. நன்மைகளே ஏற்படும்.
ஒரு சிலருக்கு ஜாதகத்தில் நல்ல திசாபுத்திகள் நடைபெறாவிட்டால், ஐ.பி. கொடுத்தல், மறைந்து வாழுதல், கடன்படுதல் போன்றவை ஏற்படக்கூடும். கவனம் தேவை. வக்ர கதியில் 72 நாட்கள் குருபகவான் கடகராசியில் சஞ்சாரம் செய்யும் போது, 2மிடத்து குருவால் நல்ல பலன்கள் நடைபெறும்.
வியாபாரிகள் : தொழிலில் போட்டி, பொறாமை, எதிர்ப்புகள் அதிகம் இருக்கும். மிகுந்த பிரயாசைக்குப் பிறகு கடினமாக உழைக்க வேண்டி வரும். ஓய்வே இருக்காது. ஒன்று போனால் மற்றொன்று என்ற விதமாக பிரச்சனைகள் இருந்து கொண்டேயிருக்கும். அரசாங்கத் தொந்தரவு ஏற்பட்டு, மன உளைச்சல் உண்டாகும். எப்படியோ தொழிலை சமாளித்து நடத்துவீர்கள். கடன்கள் முழுமையாகத் தீராவிட்டாலும், பாதிக்காது. வருமானம் நல்ல முறையில் வரும். பணம் அதிகம் நிலுவையில் நிற்கும். புது முயற்சியில் நீ பிரயாசைக்குப் பிறகு வெற்றியடையும். புதுமிஷின், வாகனம் வாங்கவும், புது கட்டிடம் கட்ட யோகம் அமையும். சனியால் நன்மைகள் கிடைக்கும்.
உத்யோகஸ்தர்கள் : இடமாற்றம் உத்தரவு வரலாம். அதனால் சில காலம் குடும்பத்தை விட்டு, தனியே சென்று வாழ நேரிடலாம். ஆபிஸில் லோன் எதிர்பார்த்தவர்கள் உடனே பெற முடியாது. ஆனால் கிடைத்துவிடும். அலைச்சல் அதிகம். அதுபோல, பிரமோசன், சம்பள உயர்வு போன்றவையும் மிகுந்த பிரயாசைக்குப் பிறகே கிடைக்கும். அடிக்கடி பிரயாணங்கள் நேரிடும். வருமானம் உயரும்.
பெண்கள் : கணவரும், பிள்ளைகளும் உங்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்வார்கள். எத்தனை உடல் உபாதை இருந்தாலும் தாங்கிக் கொள்வீர்கள். ஒரு சிலருக்கு அபார்ஷன், வயிற்றுவலி போன்றவற்றை சந்திப்பீர்கள். ஆனால் குடும்பத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒரு சுபகாரியம் நிறைவேறும். சனிபகவான், பொங்குஞ்சனியாக இருந்து நன்மைகள் ஏற்படும்.
மாணவர்கள் : கல்வியில் நாட்டம் குறையும். அதனால் பெற்றோரிடம் திட்டு வாங்குவீர்கள். ஆசிரியர் சொல்லிக் கொடுக்கும் போது. பாடங்கள் புரிவது போல இருக்கும். வீட்டுக்கு வந்தவுடன் மறந்துவிடும். கடுமையாக உழைக்க வேண்டிவரும். ஆனால் எப்படியும் நல்லமுறையில் படித்து நிறைய மதிப்பெண்களை எடுத்து விடுவீர்கள்.
கலைஞர்கள்: முயற்சி அதிகம் தேவைப்படும். அப்போது தான் வாய்ப்புகளும் கிடைக்கும். வெளியூர் பிரயாணங்கள் நிறைய உண்டாகும். வருமானத்தை விட செலவும், அலைச்சலும் தான் அதிகமிருக்கும். சனிப்பெயர்ச்சி ஆனதும் நிறைய வாய்ப்புகள் கிடைத்து, பேரும். புகழும், வருமானமும் அதிகரிக்கும். கடன் தீரும்.
அரசியல்வாதிகள்: கட்சி, போராட்டம் என்று சிறைவாசம், கோர்ட்டு, கேஸ் என்று அலைவீர்கள். ஆனால் உங்களை யாரும் மதிக்கவில்லையே என்று ஏங்குவீர்கள். மறுநாளே உங்களை எல்லாரும் மதிப்பது போல தோற்றம் உண்டாகும். இரண்டுங்கெட்டானாக அரசியலில் இருப்பீர்கள். சனிபகவான் பொங்குஞ்சனியாக இருந்து, நன்மைகள் உண்டாகும்.
விவசாமிகள் : விவசாயம் சுமாராக நடக்கும். வரவுக்கும், செலவுக்கும் சமமாக இருக்கும். அதிக உழைப்பு உழைக்க வேண்டி வரும். கால்நடை வாகனம் விருத்தியிராது.சனியினால் ஓரளவு விவசாயம் பலன் தரும். லாபமும், கையிருப்பும் மிஞ்சும்.
பரிகாரம் :
- சனிக்கிழமை தோறும் சனிபகவானை வழிபட உத்தமம்.
- ஒருமுறை திருச்செந்தூர் சென்று. செந்திலாண்டவரைத் தரிசித்து விட்டு. தக்ஷிணாமூர்த்திக்கும். பாலசுப்பிரமணியருக்கும். நெய்தீபம் ஏற்றி வழிபட்டு விட்டு, 5 ஆண்டிகளுக்கு அன்னமிட்டு வந்தால் நல்லது.
- வியாழக்கிழமை தோறும் தக்ஷிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட சிறப்பு.
- சென்னைக்கு அருகேயுள்ள “பாடி” என்ற திருவலிதாயம் என்ற ஊருக்குச் சென்று. ஸ்ரீவலிதாயநாதர் மற்றும் ஸ்ரீதாயம்மையைத் தரிசித்து வருவது சிறப்பு.
- கும்பகோணம் அருகிலுள்ள ஆலங்குடி சென்று வழிபடுவது நலம்.
- செங்கோட்டை அருகிலுள்ள “புளியரை” என்ற ஊருக்குச் சென்று தக்ஷிணாமூர்த்தியை வழிபட நல்லது.
- மதுரையிலிருந்து மேலூர் திருப்பத்தூரிலிருந்து “பட்டமங்கலம்” என்னும் ஊருக்குச் சென்று. அங்குள்ள அஷ்டமாசித்தி தக்ஷிணாமூர்த்தியை வழிபட்டால் நலம்.