புனர்விவாகம்
இல்லற வாழ்வில் பிரிவினையை ஏற்படுத்தும் கிரக அமைப்புகள் –கிரகங்களால் ஏற்படும் பிரிவினை
ஒருவரது ஜாதகத்தில் 7-ஆம் இடம் என்பது வாழ்க்கை துணையை குறிக்கும் இடமாகும் ஏழாம் அதிபதி ஆட்சி, உச்சம், கேந்திரம், திரிகோணம் மற்றும் நட்பு நிலையில் இருக்கும்போது கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரித்து வாழ்க்கை தரம் உயரும்.
மாறாக ஏழாமிடத்தில் லக்ன ரீதியான அசுபர் இருந்தால் மண வாழ்வு சங்கடம் தரும் பலருக்கு சனி, செவ்வாய், ராகு-கேது மட்டுமே திருமண வாழ்வை தடைசெய்யும் மற்ற கிரகங்கள் பாதிப்பைத் தருவதில்லை என்ற நம்பிக்கை இருக்கிறது.
திருமணத்தை எந்த கிரகம் தடை செய்தாலும் பழியை சுமப்பவர்கள் ராகு-கேது செவ்வாய் ,சனி மட்டுமே ஏழாம் இடத்தில் எந்த கிரகங்களும் இல்லாமல் இருந்தால் நலம். ஏழாம் இடத்தில் நிற்கும் கிரகத்தின் ஏழாம் பார்வையால் லக்னம் பாதிக்கப்படும். லக்னம் பாதிக்கப்பட்டால் ஜாதகரின் சிந்தனை செயல்திறன் குறையும் எனினும் தனித்த கிரகங்களால் பெரிய பாதிப்பு இருக்காது.
கிரக சேர்க்கைகள் தரும் பிரிவினைகள்
லக்னத்திற்கு 7ஆம் இடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் இணைந்திருப்பது ,சம்பந்தம் பெறுவது பல தீய விளைவுகளுக்கு காரணமாகிறது ஏழாம் அதிபதியுடன் ராகு கேதுக்கள் சம்பந்தம் பெறுவது திருமண வாழ்வில் பிரிவினையை தருகிறது. மேலும் சுக்கிரன் இல்லற வாழ்வுக்குரியவர் சுக்கிரன் ஆணுக்கு மனைவியைப் பற்றியும் பெண்ணுக்கு மண வாழ்க்கையைப் பற்றியும் சொல்கின்றவர்
சுக்கிரன் களத்திரகாரகன் அதாவது வாழ்க்கை துணையை அமைத்துக் கொடுப்பவர் சுக்கிரன் ஜாதக கட்டத்தில் நல்ல நிலையில் இருப்பது அவசியம் ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் ராகு கேதுவுடன் எந்த விதத்திலாவது சம்பந்தம் பெற்றாலும் கருத்து வேறுபாட்டை மிகைப்படுத்துகிறது.
செவ்வாய் ஆண்களுக்கு வீரியத்தையும் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியத்தையும் தருபவர்.பெண்களின் ஜாதகத்தில் செவ்வாய் ராகு கேதுவுடன் சம்பந்தம் பெற்றால் மன போராட்டத்தால் பிரிவினை ஏற்படுகிறது.
பாவகம் மற்றும் பாவகாதிபதிகளால் உருவாகும் பிரிவினை
ஜோதிடரீதியாக தம்பதிகளின் ஜனனகால ஜாதகத்தில் ஏழாம் பாவகம் மற்றும் அதிபதிகள் 6,8,12-ம் பாவகம்மற்றும் அதன் அதிபதியுடன் சம்பந்தம் பெரும் பொழுது பிரிவினை ஏற்படுகிறது 2-ம் 7-ம் அதிபதி வக்ரம் பெற்றால் மனநிறைவான மணவாழ்க்கையை தருவதில்லை
தசாபுத்திகள் தரும் பிரிவினைகள்
ஜாதகருக்கு 6 ,8 ,12ம் அதிபதிகள் மற்றும் 6, 8 ,12ல் நின்ற கிரகங்களின் தசா புத்தி காலங்களில் மனதிற்குப் பிடிக்காத பல சம்பவங்கள் வம்பு ,வழக்கு, பிரிவினை ஏற்படுகிறது குறுகிய கால தசை நடத்தும் சூரியன், சந்திரன் ,செவ்வாய், கேது போன்ற கிரகங்களாக இருந்தால் பாதிப்பு குறுகிய கால மாகவே இருக்கிறது நீண்ட காலம் தசை நடக்கும் குரு, சனி, ராகு, புதன், சுக்கிர தசையில் வாழ்நாள் முழுவதையும் பிரிவினையுடனே கழிக்க செய்கின்றன
கோட்சாரம் தரும் பிரிவினைகள்
வருட கிரகங்களான குரு, சனி, மற்றும் ராகு கேது பெயர்ச்சிகள் லக்னத்திற்கு 7-ஆம் இடத்திற்கோ, 7-ஆம் அதிபதிக்கோ சம்பந்தம் பெறும்போது மனக்கசப்பில் பிரிவினையை தந்துவிடுகின்றன .
ஜனன கால ஜாதகத்தில் இது போன்ற குறைபாடுகள் இருப்பவர்கள் சாஸ்திர சம்பிரதாய முறைப்படி ஆண் மற்றும் பெண்ணுக்கு தாரபலம் நிறைந்த நாளில் திருமணம் நடத்தவேண்டும் முகூர்த்த லக்னத்திற்கு ஏழாம் அதிபதி வலிமையுடன் இருக்கும் நேரத்தில் திருமணம் செய்யும் போது பெரிய பாதிப்பு நிச்சயம் தவிர்க்க படும்.தம்பதிகள் மகிழ்ச்சியுடன் இல்லறம் நடத்துவார்கள்
புனர்விவாகம்
திருமண வாழ்வில் ஏற்படும் பிரிவினைகள் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ இருக்கலாம். வெகு சிலர் பிரியாமல் அதீத கருத்து வேறுபாட்டுடன் தினமும் சண்டை ,சச்சரவுடன்,மனவேதனையுடன் வாழலாம். பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பலாம், அல்லது கருத்து வேறுபாட்டுடன் வாழ்பவர்கள் நிம்மதிக்கான தீர்வை தேடலாம். இது போன்ற மன சங்கடங்களுக்கு ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்ட தீர்வே புனர்விவாகம் அதாவது பிரச்சனை உடைய தம்பதிகள் மீண்டும் ஒருமுறை சுப நாளில் திருமணம் செய்து கொள்வது இந்த புனர்விவாகம்
இல்லற வாழ்வில் இணக்கமும் மனநிறைவும் இல்லாதவர்கள் விருப்பமில்லாமல் திருமணம் செய்து கடமைக்காக வாழ்ந்து பின் நாட்களில் மனமொத்து வாழ நினைக்கும் தம்பதிகள், மரபு வழியில் முழுமையான திருமண சடங்கு நடக்காதவர்கள், பதிவு திருமணம் செய்தவர்கள், நல்ல முகூர்த்த லக்னத்தில் திருமணம் நடைபெறதவர்கள் ,திருமணத்தன்று மணப்பெண் வீட்டுவிலக்காகி திருமணம் நடந்தவர்கள், தொழில் மற்றும் உத்யோக நிமித்தமாக பிரிந்து வாழ்பவர்கள், திருமணம் நடந்த பிறகு பிரிந்து மீண்டும் சேர்ந்து வாழ விரும்பும் தம்பதிகள் நடத்தலாம்
குறைந்தது 48 நாட்கள் இல்லற வாழ்க்கையில் ஈடுபடாமல் இருந்து சாஸ்திர சம்பிரதாய முறைப்படி மரபுவழி திருமண சடங்குகளை முறையாக கடைபிடித்து புனர்விவாகம் செய்து புது வாழ்க்கையைத் தொடங்கலாம்
கோட்சாரமும்- புனர்விவாகமும்
கோட்சாரத்தில் ரிஷபம், கடகம், கன்னி, மகரம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசி மற்றும் லக்னத்தை சேர்ந்தவர்களுக்கு புனர்விவாகம் வாழ்வில் பெரும் மாற்றத்தையும் ஏற்றத்தையும் தரும் எனவே திருமண வாழ்வில் சங்கடத்தை அனுபவிப்பவர்கள் புனர்விவாகம் செய்துகொண்டு ஆதர்சன தம்பதிகளாக வாழ இறைவனை வேண்டுகிறோம்.