மைத்ர முகூர்த்தம் 2025
எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் நேரம் தான் மைத்ர முகூர்த்தம். கடன் இல்லாத வாழ்க்கை வாழனும் இருக்கிற கடனை எல்லாம் அடைத்து விட்டு நிம்மதியாக இருக்க வேண்டும் என்று பலரும் நினைக்கின்றனர். மனிதனை வாட்டி எடுக்கின்ற கடன் தொல்லையை தீர்க்க மைத்ர முகூர்த்தம் என்ற ஒன்று ஜோதிடத்தில் இருக்கிறது.
மைத்ர முகூர்த்தம் நேரத்தை பயன்படுத்தி நமது கடன் எத்தனை கோடிகளாக இருந்தாலும் அதை முழுமையாக அடைத்து விட முடியும். நீங்கள் பெரும் தொகையை தர வேண்டிய கடன் தொகையில் கொஞ்சம் மேலும் குறிப்பிட்ட இந்த நாளில் இந்த நேரத்தில் சம்பந்தப்பட்டவருக்கு திருப்பிக் கொடுங்கள் எவ்வளவு பெரும் தொகையானாலும் சிறுக சிறுக அடைப்பட்டு விடும் என்பது உறுதி.
கடனாளியாவது யார்? ஒருவர் எப்போதும் கடனாளியாக இருப்பதில்லை. சூழ்நிலை கடனாளியாக்கி விடுகிறது. ஜோதிடத்தில் ஆறாம் பாவத்தை கடன் பற்றி கூறும் பாவமாக கூறப்பட்டிருக்கிறது. கால புருஷனுக்கு ஆறாம் இடமாக கன்னி அமைந்துள்ளதால் கன்னி ராசியில் அமைந்த கிரகமும், புதனோடு சேர்ந்த கிரகமும், புதனின் வீட்டில் நிற்கும் கிரகமும் கடனின் தன்மையைப் பற்றி கூறும் அமைப்பாகும்.
கடன் தொல்லைகள்
- ஜாதகப்படி லக்னாதிபதி ஆறாம் இடத்தில் பகை பெற்றோ, தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை பெற்றோ அல்லது தனித்தோ அமர்ந்து தசா புத்தி நடைபெற்றால் அவருக்கு அந்த காலகட்டம் முழுவதும் வம்பு, வழக்கு, கடன் தொல்லைகள் ஏற்படும்.
- லக்னாதிபதி ஆறாம் வீட்டிலும், ஆறாம் வீட்டின் அதிபதி லக்னத்திலும் பரிவர்த்தனை பெற்று அமர்ந்தாலும் அவர்களுக்கு கடன் பிரச்சனைகள் வாழ்நாள் முழுவதும் இருந்து கொண்டே இருக்கும்.
கடன் வாங்க கூடாத நேரம்
குரு தான் இருக்கும் வீட்டை வளர்ப்பார். ஒருவர் ஜாதகத்தில் குரு கால புருஷனுக்கு ஆறாம் பாவமான கன்னியில் அல்லது ஜாதக ஆறாம் பாவத்தில் கோச்சார ரீதியாக பயணம் செய்யும்போது கடன் வாங்கக்கூடாது. எனவே ஆறாம் பாவத்தில் நிற்கும் போது கடனை வளர்த்திடுவார்.
கடனாளியாக்கும் சனி பகவான்
குரு -ராகு, கேது கிரகங்களுடன் சேர்ந்து நிற்கும் போது புதிய கடன்கள் வாங்கவோ அல்லது கடனை அடைக்கவும் முயற்சி செய்யக் கூடாது. ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி ஆகியவை நடைபெறும் பொழுது கடன் வாங்க முயற்சி செய்யக் கூடாது.
கடன் அடைக்கும் காலம்
செவ்வாய்க்கிழமையும் அஸ்வினி நட்சத்திரமும் சேருகின்ற நாளில் மேஷ லக்னம் அமைந்துள்ள நேரம் மைத்ர முகூர்த்தம் ஆகும். இதே போல செவ்வாய்க்கிழமையும் அனுஷ நட்சத்திரம் சேருகின்ற நாளில் விருச்சக லக்கினம் அமைந்துள்ள நேரம் மைத்ர முகூர்த்தம் ஆகின்றது.

கடன் பிரச்சினை தீர்க்கும் முகூர்த்தம்
கடன் தொல்லையால் மீள முடியாமல் தவிப்பவர்கள் இந்த மைத்ர முகூர்த்த நேரத்தை கணித்து அந்த தருணத்தில் கடனில் சிறு பகுதியாவது அடக்க முயற்சிப்பது சிறப்பு. கடன் கொடுத்தவர் இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக வாங்க மறுக்கிறார் எனில் சிறு சிறு தொகையை நமது வங்கிக் கணக்கில் சேர்த்து சேமித்து பிறகு மொத்தமாக அடைக்கலாம். அப்படி மாதம் தோறும் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் நேரம் ஆனது மைத்ர முகூர்த்தமாக இருக்கும் பட்சத்தில் வெகு சீக்கிரத்தில் பணம் சேர்ந்து மொத்த கடனும் அடைபடும்.

கடன் தொல்லை அகல பரிகாரம்
கடன் தீர்ப்பதில் கேது பகவானும் செவ்வாய் பகவானும் மிகவும் பெரும் பங்காற்றுகின்றனர். கேதுவின் அதிதேவதை விநாயகரை வணங்குவது, செவ்வாயின் அதிதேவதை முருகனை வணங்குவது, கேது செவ்வாய் சேர்க்கை பெற்ற மைத்ர முகூர்த்தத்தில் கடன் அடைப்பது விரைவில் கடன் அடைய சிறந்த வழிகள் ஆகும். செவ்வாய்க்கிழமை விநாயகருக்கு வெற்றிலை மாலை சாற்றலாம்.
கடன் தீர்க்க என்ன செய்வது ?
எந்த காரணத்திற்காக கடன் வாங்கினாலும் அது அடைய சனீஸ்வர பகவானின் அருள் தேவை. ருணம் எனில் கடன் என்று பொருள். கடன் தீர்க்க கால பைரவரை வணங்கலாம். லட்சுமி நரசிம்மரை குறித்த ருண விமோசன ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்து வந்தால் எல்லாவித கடன்களும் அடைபடும். ருத்ர மூர்த்தியும் நரசிம்மரும் சேர்ந்த உருவமான ஸ்ரீ சரபேஸ்வரமூர்த்தியை பிரதோஷ காலத்தில் முக்கியமான ருண விமோசன பிரதோஷ காலத்தில் வழிபட தீராத கடன் தீரும். சனீஸ்வர பகவானுக்கு பிரியமான பித்ரு காரியங்களை சரிவர செய்ய வேண்டும் சனி ஜெயந்தி நாளில் வரும் அமாவாசை தினத்தில் முன்னோர்களை நினைத்து வழிபட கடன் பிரச்சனை தீரும்.