மாந்தி பற்றிய விளக்கங்கள்
எவ்வாறு ராகு கேதுக்களுக்கு சொந்த வீடு கிடையாதோ அதேபோல் மாந்திக்கும் சொந்த வீடு கிடையாது. ராகு, கேதுவை விட மாந்திக்கு இந்த வீடு சமாச்சாரத்தில் சற்று உரிமை அதிகமாகிறது. ஏனென்றால் சனியின் மகன் மாந்தி என்பதால் சனியின் வீடான மகரம் கும்பத்தில் இவருக்கு ஆதிபத்தியம் அதிகம் என்று கருதலாம். ராகு கேதுக்கள் நிழல் கிரகங்கள் ஆகும்.மாந்தி, அர்த்தபிரகாராயன், எமகண்டன் ஆகியவை இருண்ட கிரகங்களாகும்.
- ராகு கேதுக்கள் எந்த வீட்டில் இருக்கிறதோ அந்த வீட்டில் சொந்த விடாக மதித்து அவர்கள் நின்ற ராசிநாதனின், ஆதிபத்ய, காரகத்துவம பலன்களை எடுத்துக் கொள்வது போன்ற தன்மை மாந்திக்கும் உண்டு.
- மற்ற கிரகங்களுக்கு உள்ளது போன்ற சக்தி மாந்திக்கும் உண்டு.
- சனி மகரத்தில் கும்பத்தில் கொடுக்கும் ஆதிபத்திய பலன்களில் முழு அளவில் கொடுக்கும்பொழுது, மாந்தி அந்த இடத்தில் இருந்தால் பாதி அளவுதான் கொடுப்பார்.
- மாந்தி 12, 2,7 ஆம் வீடுகளைப் பார்க்கிறார்.
- சனியின் காரகத்துவ பலன்களிலும் பாதி அளவு மாந்தி எடுத்துக் கொள்வார்.
- மாந்தியின் நிறம்: கண் மை போன்ற பளபளப்பான கருமையான நிறம் ஆகும்.
மாந்தியின் குணங்கள்:
- இவர் மிகவும் குரூரமானவர்.
- கல்வி ஞானம் இல்லாதவர்.
- நல்ல குணத்தை எதிர்பார்க்க முடியாது.
- நல்ல பாம்பு குணத்தை உடையவர்.
- வஞ்சகம், சூது, கபடம் ஆகியவற்றை பிரதானமாக உடையவர்.
- கிழிந்த ஆடைகளை உடையவர்.
- உடல் முழுவதும் நஞ்சு நிறைந்தவர்.
- ஆணவம் உடையவர்.
- யாரையும் மதிக்காத குணம் கொண்டவர்.
- அதிக காம இச்சை உடையவர்.
- குள்ளமானவர்.
- சனியைப்போல் மந்த புத்தி உடையவர்.
- விகாரமான முகம் உடையவர்.
- மாரகத்திற்கு இவர் அதிபதி ஆகிறார்.
- இந்த இடத்தில் ஒன்று குறிப்பிட விரும்புகிறேன். பொதுவாக ஒருவருக்கு கெடுதல் ஏற்பட்டால் “சனியன் பிடித்து விட்டது” என்று கூறுவது அன்றாட வாழ்க்கையில் நாம் கேட்கும் ஒரு சமாச்சாரம்.
கிரகங்களில் சனியின் உருவம் விசித்திரமானது. வேறு எந்த கோள்களுக்கும் இவ்வாறு விசித்திர உருவம் இல்லை. மிகவும் கரு நீல நிறத்துடன் பார்த்தாலே அருவருப்பை கொடுக்கக் கூடிய அளவிற்கு இந்த கிரகம் அமைந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். நமது உடலில் உள்ள உயிர் விசித்திரமானது, ஆச்சரியமானது. சனியின் சக்தியால்தான் உயிருள்ளது. எனவேதான் ஆயுள்காரகன் சனி என்று ரிஷிகள் கூறியுள்ளனர்.சனி தசை ,சனி புத்தி, சனி அந்தரம், சனி சூஷ்ம தசை, சனி பிராண தசை ஆகிய காலங்களில் தான் ஒருவருடைய உயிர் பிரியும். சனியின் மகனான மாந்திக்கும் இந்த குணநலன்கள் ஒத்துவரும். எனவேதான், மார்க்கத்தை அறிய உள்ள வழிகளில் மாந்தி ஸ்புடத்தையும் சேர்த்துக் கணக்கிட முறையும் முன்னோர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதர கிரகங்களின் இஷ்ட தெய்வங்கள் குறிப்பிட்டது போன்று, மாந்திக்கு துர் ஆவிகளை தெய்வமாக முன்னோர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதையும், இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகிறேன். அதாவது ஒருவருக்கு ஜாதகப்படி 60 வயது என்றால் எதிர்பாராத விபத்து மற்றும் பூகம்பம் போன்ற நிகழ்வுகளால் அவர் ஐம்பது வயதில் கூண்டோடு மரணம் என்பதினால், மரணமடைந்தால் அவரது ஆவியானது 60 வயது வரை அலைந்து கடைசியில் மோட்சம் அடையும் என்பது ரிஷிகள் சொன்னது ஆகும். இந்த துர் ஆவிகளுக்கு மாந்தி காரகனாகிறார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் மாந்தி அமையப் பெற்ற ஜாதகர்கள் தங்கள் குடும்பத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடந்து இருப்பின் அந்த ஆத்மா சாந்தி அடையும் பொருட்டு, அவரவர் குடும்ப வழக்கப்படி சாந்தி பரிகாரம் செய்யலாம். ஜாதக பல தீபிகைப்படி குளிகன், பிரேதத்தால் உண்டான பயத்தையும், விஷபீடிகையையும் குறிக்கும்.
எனவே மாந்தி எந்த வீட்டில் அமர்ந்துள்ளாரோ, அந்த வீட்டின் காரக பலன்களை மேற்படி கூறியபடி அவர் தனது குணத்துடன் செய்வார். கூட்டத்தோட மரணமடைவது தொடர்பான விளக்கம் சர்வார்த்த சிந்தாமணியில் உள்ளது. அதன் தொகுப்பு வருமாறு.
கூட்டத்தோடு மரணம் தொடர்பான ஒரு விளக்கம் அளிக்க விரும்புகிறேன்.இந்த நிகழ்வுகள், இதிகாச காலம் முதல் இன்று வரை தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இரு தேசத்தலைவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் ஆயிரக்கணக்கானோர் மரணமடைந்தனர். இன்றைக்கு ரயில், பஸ் விபத்துக்கள், வெடிகுண்டுகள், துப்பாக்கிச் சண்டைகள், பூகம்பம் போன்றவற்றால் ஒரே நேரத்தில் அநேகம் பேர் இறக்கின்றனர்.
ஒரு சிலர் ஜாதக அமைப்பினாலும் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படலாம். அதுபற்றி சர்வார்த்த சிந்தாமணி கூறுவது பற்றி பார்ப்போம்.
எட்டாம் இடத்தில் பல கொடிய கிரகங்கள் அமைந்து, இக்கொடிய கிரகங்கள் செவ்வாயுடைய நவாம்சத்திலும், கொடிய சஷ்டியம்சங்களிலும் இருக்க நேர்ந்தால், அந்த ஜாதகர் பலருடன் சேர்ந்து ஒரே தருணத்தில் உயிர் விடுவார்.
எல்லாம் சுப கிரகங்களும் நீச்சம் அடைந்தோ, பகை வீட்டில் அமர்ந்தாலோ, சூரியனுடன் நெருங்கியோ, கிரக யுத்தத்தில் தோல்வியுற்றோ இருப்பின் அந்த ஜாதகர் கூட்டத்தினால் கொல்லப்படுவார். அல்லது கூட்டத்தில் பலருடன் மரண மெய்துவார்.
சனி, ராகு, சூரியன் இவர்கள் எட்டாமிடத்தினால் பார்க்கப்பட்டு, கொடிய அம்சத்தில் சூரியனுடன் நெருங்கி இருந்தால், அந்த ஜாதகர் பலரோடு ஒன்றாய் உயிர் விடுவார்.