ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026 :ரிஷபம்
ராகு கேது பெயர்ச்சி நாள் -2025
வைகாசி மாதம் 4ம் தேதி(18.05.2025) ஞாயிற்றுக்கிழமை இரவு 07.38 மணிக்கு சூரிய உதயாதி 34.38 நாழிகைக்கு திருக்கணிதப்படி ராகு பகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.
புகழும், செல்வாக்கும் பொருந்திய ரிஷப ராசி அன்பர்களே! நீண்ட கழுத்தும், தேகமும் நல்ல வாளிப்பான உடல் அமைப்பும் கொண்டவர். நீங்கள் கவர்ச்சிகரமான உடல்வாகும். யாரையும் கவர்ந்து இழுக்கக் கூடிய பேச்சுத்திறனும் உண்டு, கலை, சித்திரம் வரைதல், சொற்பொழிவு இவற்றில் அதிக ஈடுபாடு உண்டு. அடிக்கடி சளித் தொந்தரவு உங்களைக் கஷ்டப்படுத்தும், சகோதரருடன் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்ட வண்ணமிருக்கும் நியாயம் நேர்மை தவறி நடப்பீர்கள். யாருக்கும், எதற்கும் அஞ்சமாட்டீர்கள். நண்பர்களுக்காக உயிரையும் கொடுப்பீர்கள். அதே நண்பர்கள் துரோகம் செய்தால் அவனை மன்னிக்கவும் மாட்டீர்கள். பெண் மோகம் அதிகமுண்டு. அந்திமக் காலத்தில் நிறைய சம்பாதிப்பீர்கள்.
கடந்த ஒன்றரை வருட காலமாக இராகு பகவான் உங்கள் இராசிக்குப் பதினொன்றாமிடத்தில் அமர்ந்தும் கேது பகவான் ஐந்தாமிடத்தில் அமர்ந்தும் மிகுந்த நன்மைகளைச் செய்தார்கள். தொழிலில் இலாபமும், வீடு, மனை, வாங்க யோகமும் ஏற்படுத்தினார்கள். பல மகான்களின் தரிசனம், புண்ணிய ஸ்தலங்களில் தெய்வ வழிபாடு போன்ற நன்மைகளையும் தந்தார்கள்.
குடும்பத்தில் சுபகாரியம், பூர்வீகச் சொத்தை நல்ல முறையில் விற்று அந்தப் பணத்தை நல்ல வகையில், பயன்படுத்துதல் போன்ற சுபகாரியங்கள் நடைபெற்றன.
தற்சமயம் இராகு பகவான் உங்கள் இராசிக்கு பத்தாமிடம் என்னும் தொழில் ஸ்தானத்துக்கும், கேது பகவான் நான்காமிடம் என்னும் தசம சதுர்த்த கேந்திரத்துக்கும் பெயர்ச்சியாகின்றார்கள்.
இராகு பகவான் பத்தாமிடத்தில் அமர்ந்து செய்தொழிலில் முன்னேற்றம், சுபகாரியங்களில் வெற்றி, பெரியவர்களின் ஆதரவு, ஆடம்பரச் செலவு செய்து, சுபகாரியம் மற்றும் விருந்து வகைகள் போன்றவறறைக் கொடுப்பார். மேலதிகாரிகள் ஆதரவு, சம்பள உயர்வு,பதவி உயர்வை ஏற்படுத்துவார். வெளியூர் பிரயாணங்களில் வெற்றியும், ஆதாயமும் உண்டாகும். கணவன் – மனைவி உறவில் சந்தோஷம் கிடைக்கும்.
ஆனால் கேது பகவான் உங்கள் இராசிக்கு நான்காமிடத்தில் அமர்ந்து உங்களது பெற்றோர் உடல்நிலையைப் பாதிப்படைய வைப்பார். அதன்மூலம் செலவுகள் ஏற்படும். உங்களுக்கும் உடல்நிலை பாதிப்பு, செய்தொழிலில் எதிர்பாராத தடங்கல், கடன் பிரச்சனைகள், பொருளாதாரப் பற்றாக்குறை, வீண் அலைச்சல் போன்றவையும் வாகன வகையில் விபத்துக்களும், வாகனம், கால்நடைகள் மற்றும் கோழி வளர்ப்பு போன்ற வகையில் சேதாரம் போன்றவற்றை ஏற்படுத்துவார். உடலில் விஷக்கடியினால் அலர்ஜி, அரிப்பு போன்றவையும் நாய் கடித்தல் அல்லது வீட்டுக்குள் பூரான், தேள் போன்ற விஷ ஜந்துக்கள் நடமாட்டம் போன்றவற்றை ஏற்படுத்துவார். ஆனாலும் அதிக பயம் ஏற்படாது.
கணவன்-மனைவி உறவு சுகமாகவே இருக்கும். மொத்தத்தில் இந்த இராகு கேது பெயர்ச்சியானது இராகுவால் நன்மையும், கேதுவால் சுமாரான பலன்கள் கலந்ததாகவே இருக்கும். ஜாதகத்தில் நல்ல திசாபுத்திகள் நடைபெற்றால் பாதிப்புகள் குறையும். நன்மைகள் பெருகும். அடுத்த சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு நன்மைகள் அதிகரிக்கும். ஆனால் குருப்பெயர்ச்சியானது மிகுந்த நன்மைகள் அள்ளித்தரும்.
வியாபாரிகள்;
வியாபாரிகளுக்குத் திடீர் இலாபம் ஏற்படும். அதிகமான சந்தோஷத்தை அடைவீர்கள். சிலநாட்களுக்குள்ளேயே எதிர்பாராத பணவிரயம் ஏற்படும். மனவருத்தம் அடைவீர்கள். வெளியில் பணம் அதிகம் நிலுவையில் நிற்கும். வதனுக்காக நிறைய அலைய வேண்டி வரும். சிலருக்குப் புதிய தொழில் செய்ய வாய்ப்புகள் உண்டாகும். பழைய தொழிலும் நல்ல முறையில் நடக்கும். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு கவனத்துடன் நடந்து கொள்ளுங்கள். பணஇழப்பு நேரிடலாம்.
உத்தியோகஸ்தர்கள்:
உத்தியோகத்தில் மேல்திகாரிகள் நல்ல மதிப்பு கொடுப்பார்கள். ஆனால் உங்களுக்கு கீழே பணிபுரிபவர்கள் உங்களைக் கண்டு பொறாமைப் படுவார்கள்.
அடிக்கடி லீவு போட வேண்டி வரும், உத்தியோக நிமித்தமாக அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டி வரும். சிலர் புது வீடு, மனை, வாங்க ஆபிஸில் லோன் எதிர்பார்ப்பீர்கள். கடின முயற்சிக்குப் பின்னே அது கிடைக்கும். குருப்பெயர்ச்சிக்கு பிறகு நன்றாக இருக்கும்.
பெண்கள் :
சிற்சில உடல் உபாதை, ஆஸ்பத்திரிச் செலவு ஏற்படும். பிறந்த வீட்டாருடன் சிறிது மனக்கசப்பு ஏற்படும். பின்னர் அது சரியாகி விடும். கணவர் நல்ல முறையில் நடத்தினாலும் உங்களுக்கு மனது நிலை கொள்ளாமல் தவிப்பீர்கள். குடும்பத்தில் சுபகாரியம், திருமணம் விருந்து போன்றவை நடக்கும். குருப்பெயர்ச்சிக்கு பிறகு மிகுந்த நன்மைகள் ஏற்படும்.
மாணவர்கள் :
படிப்பில் நாட்டம் குறையும். ஆர்வம் இருந்தாலும் உடற்சோர்வை ஏற்படுத்தும். பரீட்சை நேரத்தில் மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்ற நோய் ஏற்பட்டு உங்களைப் பயமுறுத்தும். ஆனால் நீங்கள் தடையில்லாமல் பரீட்சை எழுதி நல்ல முறையில் பாஸாகி விடுவீர்கள்.
கலைஞர்கள்:
செய்தொழிலில் பேரும், புகழும், செல்வமும் கிடைக்கும். கிடைத்த சந்தர்ப்பங்களை முழுமையாகப் பயன்படுத்த முடியாமல் குடும்ப சூழ்நிலையும் உங்களது உடல்நிலையும், உங்களைப் பாதிக்கும். இருந்தாலும் ஏதோ சமாளித்து எழுந்து விடுவீர்கள். நல்ல பல புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் பெயர்ச்சிக்காக உங்களுக்கு அமையும். குருப்பெயர்ச்சி நன்றாக இருக்கும்.
அரசியல்வாதிகள்:
அரசியலில் நண்பர்களும், எதிரிகளும் சம அளவில் இருப்பார்கள். திடீர் பதவியொன்று உங்களைத் தேடி வரும். அதனால் பிறருடைய பொறாமைக்கு ஆளாவீர்கள். ஆடம்பரமாகச் செலவு செய்து, குடும்ப சுபகாரியங்கள் நடத்துவீர்கள். குருப்பெயர்ச்சியில் பணவரவு அதிகம் ஏற்படும்.
விவசாயிகள்:
விளைச்சல் அதிகரிக்கும். ஆனால் பயிர்கள் நோய் விழுந்து சேதமாகலாம். எனவே எச்சரிக்கை தேவைப்படும். குருப்பெயர்ச்சியில் சுபச்செலவுகள் நிறைய ஏற்படும்.
பரிகாரம்:
கும்பகோணம் அருகிலுள்ள நவக்கிரக ஸ்தலங்கள் ஒன்பதையும் வழிபட்டால் நல்லது. ஒருமுறை திருப்பதி அருகேயுள்ள காளஹஸ்தி சென்று வழிபட்டு வருவது உத்தமம். சிவன் கோவிலில் திங்கட்கிழமை தோறும் சண்டிகேஸ்வரரை வழிபட்டால் நல்லது. தினசரி விநாயகரை வணங்கி காரியமாற்றினால் சிறப்பாகும். காஞ்சிபுரம் சென்று சித்ரகுப்தர் கோயிலில் வழிபட்டால் நலம் உண்டாகும்.