ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026 :துலாம்
ராகு கேது பெயர்ச்சி நாள் -2025
வைகாசி மாதம் 4ம் தேதி(18.05.2025) ஞாயிற்றுக்கிழமை இரவு 07.38 மணிக்கு சூரிய உதயாதி 34.38 நாழிகைக்கு திருக்கணிதப்படி ராகு பகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.
தூய்மையான உள்ளமும், அறிவாற்றலும் நிரம்பிய துலாம் ராசி அன்பர்களே! நீங்கள் நல்ல உடலும், மங்கலமான நிறமும் உடையவர்கள். வயிறு,கண், தோல் சம்பந்தமான வியாதியுடையவர்கள். தெய்வநம்பிக்கை அதிகமுண்டு, பிரயாணம் செய்வதில் அதிக விரும்பமிருக்கும்.ஆடம்பரம் பிடிக்காது. பேராசை இருக்காது. வெளியுலகத் தொடர்பு அதிகமிராது. நல்ல திறமைசாலிகளாகவும், பராக்கிரமசாலிகளாகவும் இருப்பீர்கள். ஏதேனும் ஒரு வேலை செய்து கொண்டிருக்க பிரியப்படுவீர்கள்.
இதுவரை கடந்த ஒன்றரை வருட காலமாக இராகு பகவான் உங்கள் இராசிக்கு ஆறாமிடத்திலும் கேது பகவான் பன்னிரண்டாம் இடத்தில் இருந்தார்கள். கேது சிறிய பிரச்சனைகளையும் வைத்தியச் செலவுகள், தொழில் முடக்கத்தையும், பண விரயத்தையும், கணவன், மனைவி உறவில் சிறு பிரச்சனைகளையும் ஏற்படுத்தினார். தொழில் போட்டி, பொறாமையும், வீண் அலைச்சல் போன்றவை செய்தார். ஆனால் இராகு பெரிய யோகங்கள் வழங்கினார். தொழிலில் இருந்த முடக்கத்தை நீக்கி நல்வழிப்படுத்தினார். போட்டி, பொறாமை நீங்கி இலாபத்தை அதி அதிகப்படுத்தினார். பிரயாணங்களில் நன்மையே ஏற்பட்டது. இருப்பினும் சனி, குரு, கேதுவால் கடன் படுதலும், பண விரயமும் ஆஸ்பத்திரிச் செலவும் ஏற்பட்டது.
தற்சமயம் 18.05.2025 அன்று இராகு பகவான் உங்கள் இராசிக்கு பஞ்சம் ஸ்தலமான கும்ப ராசிக்கும், கேதுபகவான் இலாப ஸ்தானமாகிய சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாகின்றார்கள்.
இராகு பகவான் ஐந்தாமிடத்துக்கு வரும் போது செய்தொழிலில் இலாபம் கிடைக்கும். பொருள் சேரும், லாட்டரி பந்தயம், வெற்றி, மேலதிகாரிகளின் ஆதரவு உண்டாகும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக இராவிட்டாலும் பாதகமாகவும் இராது. வேலை நிமித்தமாக நல்ல சாப்பாடு நேரத்தில் உண்ண முடியாது. பூர்வீகச் சொத்தில் பிரச்சனைகள் ஏற்படும் அல்லது விற்க நேரிடும். வீண் கவலைகள், வீண் அலைச்சல்களும், பகவான் பிள்ளைகள் வழியில் செலவினங்களும் இருக்கத்தான் செய்யும்.
கேது பகவான் பதினொன்றாமிடத்துக்கு வருவதால் தொட்ட காரியமெல்லாம் துலங்கும். நீங்கள் மண்ணைத் தொட்டால் பொன்னாகும். கணவன், மனைவி உறவு சீரடையும். பிரயாணம் வெற்றி தரும். ஆன்மீக யாத்திரை நலம் தரும். உறவினர், நண்பர் ஆதரவு கிடைக்கும். உத்தியோக உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். சிலருக்கு புதிய வீடு, மனை, ஆடை, ஆபரணங்கள், வாகனங்கள் வாங்க யோகம் அமையும். குடும்பத்தில் யாருக்காவது புத்திர பாக்கியம் ஏற்படக்கூடும்.
மொத்தத்தில் இந்த இராகு – கேதுப் பெயர்ச்சி உங்களுக்கு அதிக நன்மைகளையும், சிற்சில கெடுபலன்களையும் வழங்கப்போகின்றது. பொதுவாக அதிகமான நன்மைகளையே நீங்கள் அடைவீர்கள். ஆனால் குரு மற்றும் சனிப்பெயர்ச்சியால் நன்மைகள் அதிகரிக்கும். ஜாதகத்தில் நல்ல திசாபுத்திகள் நடந்தால் அதிக நன்மையே ஏற்படும்.
வியாபாரிகள்:
வியாபாரத்தை அபிவிருத்தி செய்ய லோன் கிடைக்கும். பழைய கடன்கள் அடைபடும். புதிய கடன் வாங்கி, புது மிஷின், கட்டிடம் போன்றவை வாங்குவீர்கள்.தொழிலை இடமாற்றம் செய்ய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டுத்தொழில் சிறிது பாதிக்கும். வியாபாரத்தில் இலாபம் அபரிமிதமாகக் கிடைக்கும். அரசாங்கத் தொந்தரவுகள் கவலை தந்தாலும் பின்பு உங்களுக்கு சாதகமாகவே முடியும். குரு, சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு நன்றாக இருக்கும்.
உத்தியோகஸ்தர்கள்:
மேலதிகாரிகள் கண்டிப்புடன் நடந்து கொள்வார்கள். அதே சமயம் உங்களுக்குக்கொடுக்க வேண்டிய மரியாதையையும் சம்பள உயர்வு, பிரமோசனையும் சரியாக கொடுத்து விடுவார்கள். குடும்பத் தேவைகளை நல்ல முறையில் சமாளிக்க முடியும். சிலர் ஆபீஸில் லோன் போட்டு மும்பத் வாகனம் வாங்குவீர்கள். குரு. சனிப்பெயர்ச்சிக்குப்பிறகு, இடமாற்றம் குடும்பத்தை விட்டுப் பிரிதல், வெளிநாடு செல்லுதல் போன்றவை ஏற்படலாம்.
பெண்கள்:
கணவன் – மனைவி உறவு நல்ல முறையில் அமையும். ஒரு சிலருக்கு கருச்சிதைவு, வயிற்றுவலி போன்ற நோய்கள் ஏற்பட்டு சிறு வைத்தியச்செலவினால் குணமாகும். சகோதரர்கள், பெற்றோர்கள் ஆதரவு கிடைக்கும். குழந்தைகள் உங்கள் சொல்லைக் கேட்க மாட்டார்கள். அவர்கள் வழியில் பணவிரயம் ஏற்படலாம். பூர்வீகச் சொத்துக்களை நல்ல முறையில் பராமரிப்பீர்கள். குரு, சனிப்பெயர்ச்சியானது நன்றாக இருக்கும்.
மாணவர்கள்:
உயர்கல்வி யோகம் உண்டாகும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்ல யோகம் உண்டு. தாய்மாமன் வீட்டில் இருந்தோ அல்லது அவர்களுடைய ஆதரவிலோ படிக்க வாய்ப்புகள் கிடைக்கும். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு, மிகவும் நன்றாக இருக்கும்.
கலைஞர்கள் :
நல்ல முறையில் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்வீர்கள். குடும்பத் தேவைக்கு அதிகமாகவே வருமானமிருக்கும். பேரும், புகழும் ஏற்படும். சிலர் தவறான பழக்கங்களுக்கு அடிமையாகி விடுவீர்கள்.
விவசாயிகள்:
மிகவும் அருமையான காலமாகும். வருமானம் பெருகும். விளைச்சல் அதிகரிக்கும். கால்நடை, வாகனம் செழிக்கும். புது நிலபுலன்கள் வாங்குவீர்கள்.
பரிகாரம்:
தினமும் அரசமரத்தைச் சுற்றி வருவதும், நாகதோஷ பரிகாரம் செய்வதும் உத்தமம்.
கருங்கல்லில் நாகப் பிரதிஷ்டையும் முறைப்படி செய்யலாம்.
ஒருமுறை இராமேஸ்வரம் சென்று, பிதுர்களுக்கு திவம் கொடுத்து வந்தால் நல்லது.
தேவிபட்டிணம் சென்று கடலுக்குள் உள்ள நவக்கிரகங்களை வழிபட்டு வந்தாலும் உத்தமம்.
செவ்வாய்கிழமை தோறும் இராகு காலத்தில் துர்க்கையை வழிபடுவது நல்லது.
ஒருமுறை திருச்செந்தூர் சென்று ஸ்ரீசெந்திலாண்டவரையும், ஸ்ரீசண்முகரையும், ஸ்ரீபாலசுப்பிரமணியரையும் வழிபட்டு விட்டு 5 சாமியார்களுக்கு அன்னதானம் செய்தால் மிகவும் நல்லது.