ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026 : சிம்மம்
ராகு கேது பெயர்ச்சி நாள் -2025
வைகாசி மாதம் 4ம் தேதி(18.05.2025) ஞாயிற்றுக்கிழமை இரவு 07.38 மணிக்கு சூரிய உதயாதி 34.38 நாழிகைக்கு திருக்கணிதப்படி ராகு பகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.
சிரித்த முகமும் அழகிய வசீகரமான கண்களையுடைய சிம்ம ராசி அன்பர்களே! வாழ்க்கையில் மிகப்பெரிய பதவியை அடைய விரும்புவீர்கள். ஒரு சிலருக்குத் தான் அதில் வெற்றி கிடைக்கும். வயிற்றுவலி, முழங்கால்வலி போன்றவை அடிக்கடி ஏற்படும். மது, மாமிசம் ஆகியவற்றில் விருப்பமுண்டு. கலைகளில் ஆர்வமுண்டு, நல்ல உணவுகளையே விரும்பிச் சாப்பிட்டாலும் மிகக் குறைவாகவே சாப்பிடுவீர்கள். தெய்வபக்தி. ஆச்சாரம், அனுஷ்டானம் உண்டு. கோள் சொல்வதில் உங்களுக்கு நிகர் யாருமில்லை. வாக்கு, நாணயம் தவறுவீர்கள். தன்னிஷ்டப்படி வாழ விரும்புவீர்கள். நல்ல விதமான புரிந்து கொள்ள வேண்டிய மனைவி, குடும்பம் உங்களுக்கு அமைந்தால் அது உங்கள் யோகந்தான்.
உங்களுக்கு கடந்த ஒன்றரை வருட காலமாக இராகு பகவான், அஷ்டமஸ்தானத்திலும், கேது பகவான் இரண்டாமிடத்திலும் அமர்ந்து மிகுந்த சோதனைகளை ஏற்படுத்தினார்கள். வீண்பழி, அவச்சொல், உடல் உபாதை, உடலில் அரிப்பு, விஷக்கடி, உயரே இருந்தோ அல்லது வாகனத்தில் இருந்தோ கீழே விழுந்து கை. கால்களில் அடிபடுதல், கணவன் மனைவியருக்குள்ளே பிரச்சனைகள், தொழிலில் வாக்கு, நாணயம் தவறுதல், போலீஸ், கோர்ட், கேஸ் மற்றும் நீண்ட காலமாகத் திருமணம் போன்ற சுபகாரியங்கள் தடையாகுதல் போன்ற தீய பலன்களே ஏற்பட்டது.
ஒரு சிலர் வேலையிலிருந்து நிறுத்தப்பட்டீர்கள். அல்லது உத்தியோகத்தில் பிரச்சனைகளை சந்தித்தீர்கள். ஜாதகத்தில் நல்ல திசாபுத்திகள் அப்படியும் ஒரு சில அசுப பலன்களையாவது இராகுவும் – கேதுவும் கொடுக்கத்தான் செய்தார்கள். 7 மிடத்து சனியும் 10 மிடத்து குருவும் சேர்ந்து கெடுதலையே செய்தார்கள்.
தற்சமயம்18.05.2025 அன்று இராகுபகவான் உங்கள் இராசிக்கு ஏழாமிடமாகிய கும்ப ராசிக்கும், கேது பகவான் உங்கள் ஜென்ம இராசிக்கும் பெயர் ஆகின்றார்கள். ஏழாமிடத்து இராகு, ஜென்ம கேதுவும் அத்தனை யோகம் தரக்கூடியவர் அல்ல என்றாலும், இதற்கு முன்பு இருந்த இடங்களை விட இப்போது பரவாயில்லை என்றே சொல்ல வேண்டும்.
இராகு ஏழாமிடத்துக்கு வரும் போது தொழில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், கூட்டுத் தொழில் புரிபவராயிருந்தால் பங்காளிக்குள் தகராறு ஏற்படும். யாருக்காவது ஜாமீன் போட்டு மாட்டிக் கொள்ள நேரிடும். மருத்துவச்செலவு அதிகமாகும். சிலர் குடும்பத்தை விட்டுப் பிரிய நேரிடலாம். வீண் செலவும், வீண் அலைச்சலும் உண்டாகும். சிறுசிறு விபத்துக்களும், விரோதங்களும் உண்டாகும். கணவன் – மனைவி உறவு சுகமிராது. குடும்பத்தில் சுபகாரியங்கள் செய்வதனால் உரிய சாந்தி பரிகாரங்களைச் செய்துவிட்டு சுபகாரியம் செய்யலாம். நண்பர்கள், பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்.
கேது ஜென்ம ராசிக்கு வரும் போது சமபலன்களே ஏற்படும். ஆரம்பத்தில் தொழில் மந்தநிலையும், நண்பர்களே உறவினர், பகையும் ஏற்படும். குடும்பத்தில் யாருக்காவது நோய் அதிகமாகும். பிற்பகுதியில் தொழிலில், இலாபமும், செல்வமும் கிடைக்கும். சனியினால் கெடுபலன்கள் அதிகரிக்கும். ஜாதகத்தில் நல்ல திசாபுத்திகள் நடைபெற்றால் இராகு கேதுவால் அதிக பாதிப்புகள் இருக்காது. ஆனால் குருப்பெயர்ச்சி முதல் நன்மைகள் ஏற்படும்.
வியாபாரிகள்
தூர தேச தொழில் முயற்சிகள் வெற்றியடையும். வியாபாரத்தில் பங்காளித் தகராறு ஏற்பட்டு, பிரிவினை ஏற்படலாம். அதனால் உங்களுக்கு நன்மையே உண்டாகும். பிறஇனத்தைச் சேர்ந்தவர்கள் உதவுவார்கள். பழைய கடன்கள் அடைபடும். அதுபோல புதுக்கடன் ஏற்படும். அடிக்கடி மெஷின் போன்றவை ரிப்பேர் செய்ய வேண்டிவரும். இருந்தாலும் சிறிது பிரயாசைக்குப் பின்பு தொழில் நல்ல முறையில் நடக்கும்.
உத்தியோகஸ்தர்கள்
விரும்பிய இடமாற்றம் கிடைக்கத் தாமதமாகும். அடிக்கடி பிரயாணங்கள் நேரிடும். அதற்காகக் குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம். மேலதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். ஆனால் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது. குடும்பத் தேவைக்களுக்காக ஆபீஸில் லோன் முயற்சி செய்வீர்கள், சிறிது முயற்சிக்குப் பின் லோன் கிடைக்கும்.
பெண்கள்:
இதற்கு முன்பு அபார்ஷன் போன்றவற்றைச் சந்தித்தீர்கள். மாமியார். நாத்தனார் உறவிலிருந்து பகை நீடிக்கத்தான் செய்யும், ஆனாலும் முன்பு போல பிரச்சனை ஏற்படாது. ஒரு சிலருக்குத் தனிக்குடித்தனம் போக சந்தர்ப்பம் உண்டாகும். விரும்பிய நகை, ஆடை அணிகலன்களைக் கணவர் வாங்கித் தருவார் சகோதர பகை நீடிக்கும்.
மாணவர்கள்:
கல்வியில் நாட்டம் அதிகமாகும். நல்ல முறையில் உயர்கல்வி படிப்பதற்காக சிலர் வெளியூரில் ஹாஸ்டலில் தங்கிப் படிக்க நேரிடும். சில தீய நண்பர்கள் சேர்க்கை ஏற்படும். அவர்களிடமிருந்து ஒதுங்கி இருப்பது நல்லது.
கலைஞர்கள்:
வெளிவட்டாரப் பழக்கமும், பிற இனத்தவர் தொடர்பும் அதிக வாய்ப்புகள் ஏற்படுத்தும், உள்ளூரில் மதிப்பிராது. வெளியூரில் புகழ் உண்டாகும்.ஓரளவுக்குக் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய அளவுக்கு சம்பாத்தியம் கிடைக்கும்.
அரசியல்வாதிகள்
இன்றைய நண்பர்கள் நாளைய எதிரிகளாகவதும், நேற்யை எதிரிகள் இன்றைய நண்பர்களாவதுமாக இருக்கும். முன்னேற்ற பாதை தெரியும். அதிக உழைப்பையும். பணத்தையும் அரசியலில் நீங்கள் செலவழிக்க வேண்டி வரும்.
விவசாயிகள்:
சமபலன்கள் நடைபெறும். மகசூல் அதிகம் இருந்தாலும் இலாபம் குறைவாகவே கிடைக்கும். கால்நடைகள், வாகனம் போன்றவற்றில் சேதாரம் ஏற்படக் கூடும்.
பரிகாரம்:
ஒருமுறை காளஹஸ்தி சென்று வழிபடுவது நல்லது. கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரம் சென்று இராகு பகவானையும் சீர்காழி அருகிலுள்ள கீழப்பெரும்பள்ளம் சென்று கேதுவையும் வழிபடலாம்.
சங்கரன் கோவிலுக்குச் சென்று அங்குள்ள புற்றில் பால், பழம் வைத்து வழிபட்டுவிட்டு சங்கரலிங்கம், சங்கர நாயனார், கோமதி அம்பாளை தரிசித்து வரலாம்.
ஒன்பது நபர்களுக்கு உளுந்து தானம் செய்யலாம். செவ்வாய்க்கிழமை தோறும் இராகு காலத்தில் துர்க்கையை வழிபட்டால் விசேஷமாகும்.
வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தியையும், சனிக்கிழமை தோறும், சனிபகவானையும் வழிபட்டால் நல்லது. குருப்பெயர்ச்சியன்று குருபகவானை வழிபடவும்.