யோகங்கள்
கஜ கேசரி யோகம்
குருபகவான் லக்னத்தில் இருந்து 7-வது இல்லத்திலும் ,சந்திரனிலிருந்து ஒரு கேந்திரத்திலும் தங்கியிருந்தால் கஜ யோகம் கிடைக்கும். சந்திரனில் இருந்து நான்காவது இல்லத்தில் குருபகவான் தங்கினால் கஜ கேசரி யோகம் கிடைக்கும்.இரண்டு யோகங்களும் செல்வம், செல்வாக்கு உடல் ஆரோக்கியம் ,நீண்ட ஆயுள் முதலியவற்றை ஜாதகருக்கு அளிக்கும்.
சந்திர மங்கள யோகம்:
சந்திரனுக்கு ஏழாம் ராசியில் அல்லது ஏதாவது ஒரு ராசியில் சந்திரனுடன் சேர்ந்து செவ்வாய் தங்கினால் சந்திரமங்கள யோகம் கிடைக்கும். இந்த யோகம் உள்ளவர்கள் செல்வத்துடனும், மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்.
ஆதி யோகம்:
நல்ல கிரகங்கள் சந்திரனுக்கு 6,7,8 இடங்களில் தங்கியிருந்தால் ஆதி யோகம் கிட்டும்.ஆதி யோகம் உள்ளவர்கள் கட்டளையிடும் அதிகாரிகளாகவும், படை நடத்திச் சென்று வெற்றி கொள்ளும் தலைவர்களாகவு,ம் அமைச்சர்களாகவும் விளங்குவர். செல்வம், புகழ், அரச யோகம் ஆகியவை இவர்களுக்கு எளிதில் கிட்டும். குறிப்பிட்ட இடங்களில் நல்ல கிரகங்கள் தாங்காமல் தீய கிரகங்கள் தங்கினாலும் கூட ஆதி யோகம் கிடைக்கும். அத்தகைய கிரக அமைப்பினால் கிடைக்கும் யோகத்தின் மூலம் அரசியல் செல்வாக்கு ,மக்களிடையே புகழ் முதலியவை பெருகும்.
வசுமதி யோகம்:
குரு, புதன், சுக்கிரன் ஆகியவர்கள் லக்னம் அல்லது சந்திரனுக்கு 3 ,6, 10, 11 இல்லங்களில் தங்கி இருந்தால் வசுமதி யோகம் கிட்டும். அப்படிப்பட்ட ஜாதகர்கள் பெரிய பணக்காரர்களாக விளங்குவார்கள். எல்லா சுகபோகங்களையும் அனுபவிப்பார்கள். பொருள் தட்டுப்பாடு என்பது அவர்கள் வாழ்க்கையில் தலையிடவே முடியாது.
அனப யோகம்:
சந்திர ராசிக்கு பன்னிரண்டாம் இல்லத்தில் புதன் ,செவ்வாய் ,குரு சுக்கிரன், சனி ஆகிய ஐந்து கிரகங்களும் அல்லது இவற்றில் ஏதாவது ஒரு கிரகம் ஒரு தங்கினால் அனபா யோகம் கிடைக்கும். அப்படிப்பட்டவர்கள் உடல் ஆரோக்கியத்துடனும், செல்வம், செல்வாக்குடன் விளங்குவர்.கவலை, தொந்தரவுகள் அற்றவர்களாகவும் விளங்குவார்கள். சூரியன் பன்னிரண்டாம் இடத்தில் இருப்பது அவ்வளவு நல்லதல்ல.
அமல யோகம்:
லக்னம் அல்லது சந்திர ராசிக்கு பத்தாம் இல்லத்தில் சுப கிரகங்கள் தங்கியிருந்தால் அமல யோகம் கிட்டும்.இந்த யோகம் கிடைக்க பெற்றவர்கள் தயாள குணம் ,அன்பு ,செல்வம், செல்வாக்கு உடையவர் களாகவும் ,அரசியல் துறையில் புகழ்பெறுபவர்களாகவும்,எல்லோராலும் மதிக்கப்படுபவர்களாகவும் விளங்குவார்கள்.
நள யோகம்:
எல்லா நல்ல கிரகங்களும் நல்ல ராசி களிலோ அல்லது இயற்கையான அவற்றின் ராசிகளில் தங்கினால் நல்ல யோகம் கிடைக்கும். திறமை ஆரோக்கியம், செல்வம் ஆகியவற்றுடன் விளங்குவார்கள். ஆனால் இந்த வகை ஜாதகர்கள் அங்கஹீனம் உடையவர்களாகவும் இருக்கலாம்.
சுனப யோகம்:
சந்திரனுக்கு இரண்டாம் இல்லத்தில் சூரியனைத் தவிர குரு ,சுக்கிரன் புதன் ,செவ்வாய், சனி ஆகிய கிரகங்களில் ஏதாவது ஒன்று தங்கினால் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் தங்கினாலும் சுனபா யோகம் கிடைக்கும். சுனபா யோகம் உடையவர்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், செல்வம் செல்வாக்குடன், உயர் பதவியுடன் அரச போகமும் வாழ்வர்.
வலசி யோகம்:
லக்கினம் அல்லது சந்திர ராசிக்கு இரண்டாவது இடத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நல்ல கிரகங்கள் ஏதாவது தங்கினால் வலசி யோகம் கிட்டும். அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியுடனும்,புகழுடனும் திட காத்திரத்துடனும் , உள்ள உறுதியுடன் விளங்குவார்கள்.
கேதார யோகம்:
எந்த ராசியிலேனும் எந்த கிரகங்களாயினும் நான்கு சேர்ந்து தங்கி அது லக்கினமாகவும் இருந்தால் கேதார யோகம் கிட்டும் .ஜாதகர்கள் பெரிய நிலச்சுவான்தார்களாகவும், கால்நடை அதிகம் வைத்திருப்பவர்களாகவும் அன்பும், தயாள குணமும், உள்ளவர்களாகவும் சுக வாழ்க்கை வாழ்பவர்களாக இருப்பர்.