ஸ்ரீமத் பாகவத ஸ்லோகம்
பகவான் ஸ்ரீமந் நாராயணரின் மகிமைகளை விரிவாகச் சொல்லும் ஞானப்பொக்கிஷமே ஸ்ரீமத் பாகவதம். மகாபாரதம் எனும் மாபெரும் இதிகாசம் அருளிய பிறகும் மனநிறைவு இல்லாமல் தவித்தார் வேதவியாசர். பிறகு, நாரத மகரிஷியின் அறிவுரைப்படி பகவானின் மகிமைகளை, அவதாரச் சிறப்புகளை முழுமையாகச் சொல்லும் விதமாக, ஸ்ரீமத் பாகவதத்தை இயற்றி மனநிறைவும் சந்தோஷமும் அடைந்ததாக புராணங்கள் விவரிக்கின்றன.
இது வியாசரால் அவருடைய புத்திரர் சுக முனிவருக்கு அருளப்பட்டது. சுகர், இதை பரீட்சித்து மகாராஜாவுக்குக் கூறினார். அப்போது உடனிருந்து இதைக் கேட்கும் பாக்கியம் பெற்ற முனிவர்கள் மூலம் உலக மக்களை வந்தடைந்தது. இதன் ஸ்லோகங்கள் உன்னதமான பலன்களை அளிக்கவல்லன.
அவற்றில் ஒன்று இங்கே. இந்த ஸ்லோகம் கடன், சத்ரு பயம், வியாதி முதலான கஷ்டங்களைப் போக்கி, பிரிந்த சொந்தங்களைத் திரும்பவும் ஒன்று சேர்க்கவைக்கும் வல்லமை மிக்கது.
காயந்தி தே விசதகர்ம க்ருஹேஷு தேவ்யோ
ராக்ஞாம் ஸ்வ சத்ருவதமாத்ம விமோக்ஷணம் ச
கோப்யஸ்ச குஞ்சரபதேர் ஜனகாத்மஜாயா:
பித்ரோஸ்ச லப்த சரணா முனயோ வயம் ச
கருத்து: உத்தவர் ஸ்ரீபகவானை வேண்டுவதாக அமைகிறது இந்த ஸ்லோகம்.
சங்கசூடன் என்ற அசுரனிடம் இருந்து காப்பாற்றப்பட்ட கோபிகைகள் தங்களை எப்படி கானம் செய்கின்றனரோ…
மேலும், கஜேந்திரன் எனும் யானையைத் தாங்கள் காத்தது, ஸ்ரீராமாவதாரத்தில் சீதையைக் காப்பாற்றியது, வசுதேவர்- தேவகியை கம்சனின் கொடுமையில் இருந்து காப்பாற்றியது ஆகியவற்றைச் சொல்லி, தங்களைச் சரணடைந்த நாங்களும் முனிவர்களும் எப்படித் துதிக்கிறோமோ…
அதேபோன்று, ஜராசந்தனால் சிறையில் அடைக்கப்பட்ட அரசர் களின் மனைவிகள் தங்களின் குழந்தைகளை… கண்ணனின் புகழ் பாடியபடி சீராட்டும்போது, அவர்களின் தந்தையரை ஸ்ரீபகவான் விடுவித்துக் காப்பாற்றுவார்.