வாழ்க்கையை உயர்த்தும் தொழில்கள்
ஒருவருக்கு ஜோதிட விதிப்படி தொழில் அமைந்துவிட்டால் வெற்றி பெறுவது நிச்சயம். விதி இல்லாமல் தன் விருப்பப்படி தொழில் தேடிக் கொண்டால் தோல்வியும் துன்பமும்- நஷ்டமும் தொடர்வது சத்தியம்.தோல்வியும் நஷ்டமும் தொடர்வதால் அடிக்கடி தொழில் மாற்றிக்கொண்டே இருப்பார் வருடம் ஒரு தொழில் அல்லது ஐந்து வருடத்தில் ஆறு தொழில் என காலம் ஓடிக் கொண்டிருக்கும், இவரை சார்ந்தவர்கள் மனம் வாடிக்கொண்டிருக்கும், படிப்படியாக கடன் கூடிக் கொண்டிருக்கும், கடன் கொடுத்தவர்கள் இவரை தேடிக் கொண்டிருப்பார்கள்.
ஒருவரின் தொழிலை அறிந்து கொள்ள 12ஆம் வீட்டின் ஆதிபத்திய காரகங்கள் நவகிரகங்களின் நூற்றுக்கணக்கானவைகளை விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் தொழிலை தெரிந்து எடுத்துரைக்க முடியும். சுய தொழில் செய்ய விரும்புவோர்கள் எடுத்தவுடனே பெரிய முதலீடு போட்டு தொழில் தொடங்க எல்லோராலும் எளிதில் முடியாது.
உடல் உழைப்பை நம்பி சிறு முதலீடு போட்டு வியாபாரம் தொடங்கி அதில் வெற்றியும் பெறுவதற்கு உரிய கிரக நிலைகளை காண்போம்:
ஒருவரின் ஜாதகத்தில் ராசிக்கு 10ம் வீட்டு அதிபதி லக்னத்தில் அமர்ந்தாலும் அல்லது 10ம் வீட்டோன் நின்ற வீட்டதிபதி லக்னத்தில் அமர்ந்தாலும் சிறுதொழில் புரிவான், சிறந்து விளங்குவான்
ஒருவரின் ஜாதகத்தில் ராசிக்கு 10ம் அதிபதியும் லக்னாதிபதியும் சேர்ந்தாலும் ,பார்த்துக் கொண்டாலும், பரிவர்த்தனை ஆனாலும் சுயதொழில் தொடங்குவான், பெரிய அளவில் வளர்வான்
ஒருவரின் ஜாதகத்தில் ராசிக்கு 10ம் அதிபதி லக்கினத்திற்குப் 10ல் அமர்ந்தாலும் லக்னத்துக்கு 10ம் அதிபதி ராசி நாதன் உடன் சேர்ந்தாலும் குறுந்தொழில் தொடங்குவான், விறுவிறுவென்று வளர்வான்.
ஒருவரின் ஜாதகத்தில் ராசிக்கு 10ம் அதிபதியும் லக்கினத்திற்குப் 10ம் அதிபதியும் இணைந்து லக்னத்துக்கு 1,4,7, 10 ல் அமர்ந்து பலம் பெற்றால் சுயதொழிலால் பெரிய வெற்றி பெற்று புகழுடன் வாழ்வான்
ஒருவரின் ஜாதகத்தில் ராசிக்கு 10ம் அதிபதி லக்கினத்துக்கு 9ம் அதிபதியுடன் இணைந்து இருந்து வலுத்தால் அறிவை முதலீடாக்கி தொழில் தொடங்கி பலருக்கு வழிகாட்டியாக விளங்குவான்
ஒருவரின் ஜாதகத்தில் ராசிக்கு 10ம் அதிபதி லக்னாதிபதி நின்ற வீட்டுக்கு 7ல் நின்றால் சுய தொழில் செய்வார். இதில் ஒருவர் வக்ரமானால் இளமையில் பல தொழில் புரிந்து நடுத்தர வயதுக்கு மேல் ஒரே தொழிலில் ஈடுபட்டு வெற்றி கொடி கட்டுவார்.
ஒருவரின் ஜாதகத்தில் ராசிக்கு 10ம் அதிபதி லக்னத்திற்கு 2ல் அமர்ந்தாலும் அல்லது லக்னத்துக்கு பத்தாம் அதிபதி ராசிக்கு 9-ம் அதிபதி சாரம் வாங்கினாலும் சாஸ்திர தொழில் செய்து சமூகத்தில் அந்தஸ்துடன் வாழ்வார்.
ஒருவரின் ஜாதகத்தில் ராசிக்கு 10ம் அதிபதி லக்னத்திற்கு 10ம் அதிபதி லக்னாதிபதி சாரம் வாங்கி 7ல் நின்றால்(சி.எ ) கணக்காளராக சுயமாக தொழில் செய்து சுகஜீவியாக வாழ்வார்.
ஒருவரின் ஜாதகத்தில் ராசியில் லக்னமும் தனித்தனியாக அமைந்து இரண்டுக்கும் 10ம் அதிபதி ஒருவராக வந்து அவர் லக்ன கேந்திரத்தில் ஆட்சி, உச்சம் பெற்றால் சுயதொழில் எளிமையாக தொடங்கி இமயம் போல் வளர்வான், சிகரம் போல் வாழ்வான்.
ஒருவரின் ஜாதகத்தில் ராசிக்கு 10ம் அதிபதி எந்த கிரகமோ அந்த காரகத்தின் தொழி லையும் அவர் லக்னத்துக்கு எந்த வீட்டில் அமர்கிறார் என்பதை கவனித்து அந்த வீட்டின் ஆதிபத்தியம் காரகத்துவம் இதையும் இணைத்து தொழிலை கூறவேண்டும்.
கற்ற கல்வி இருந்தும், கடின உழைப்பு மிகுந்தும், அளவற்ற முயற்சி எடுத்தும், அனுபவம் அதிகம் இருந்தும், நாணயமாக நடந்தும் கிரகங்கள் பலவீனமாக அமைந்தால் தோல்வியை தோளிலும் நஷ்டத்தை தொழிலிலும் சோகத்தை நெஞ்சிலும் சுமந்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு உதாரண ஜாதகத்தை பார்ப்போம்.
பிறந்த தேதி :16.08.1970
பிறந்த நேரம் :பின்னிரவு 12.15
பிறந்த நட்சத்திரம் :உத்திராடம்
பிறந்த சூரிய திசை பாக்கி : 0.0.7
இந்த ஜாதகர் உத்திராட நட்சத்திரம் மகர ராசி ரிஷப லக்னத்தில் பிறந்துள்ளார் லக்னாதிபதி சுக்கிரன் கன்னி ராசியில் நீசம் பெற்று உள்ளார். மேலும் ரிஷப லக்னத்திற்கு பத்தாம் அதிபதி சனி பகவான் 12ல் மறைந்து நீசம் பெற்று உள்ளார். சுக்கிர பகவானும் சனி பகவானும் ஒருவருக்கு ஒருவர் சஷ்டாஷ்டகமாக உள்ளனர் மகரம் ராசியாக வருகிறது. ராசிநாதன் சனிபகவான் 4ல் நீசம் பெற்று உள்ளார் ராசிக்கு 10ம் அதிபதி சுக்கிர பகவானும் கன்னியில் நீச்சம் பெற்று ராசிநாதனுக்கு மறைந்துள்ளார். ஜாதகர் ராகு மகா திசையில் பொறியியல் துறையில் கட்டிடக்கலை படித்து சுய தொழிலுக்கு வந்து விட்டார்.
பல முயற்சி எடுத்தும் தொழிலில் தொடர்ந்து தோல்வி நஷ்டம் விரயம் என்று சந்தித்து இன்று ஒருவரிடம் அடிமையாக இருந்து வருகிறார்.
முக்கியமாக ஒருவரின் ஜாதகத்தில் ராசிக்கு பத்தாம் அதிபதியும் லக்கினத்திற்குப் பத்தாம் அதிபதியும் எந்த விதத்திலாவது தொடர்பு பெற்று இருக்க வேண்டும்.
இவர்களுடன் ராசிநாதன் மற்றும் லக்னாதிபதி சம்பந்தம் இருக்க வேண்டும்.மேலும் இவர்கள் நால்வரில் ஒருவர் அல்லது இருவர் லக்கினம் அல்லது ராசிக்கு கேந்திரத்தில் ஆட்சி ,உச்சம் பெற்று பஞ்சமகா புருஷ யோகத்தில் இருந்து அவர்களின் திசையும் வந்துவிட்டால் தான் தொடங்கும் சுய தொழிலில் பெரும் புகழும் செல்வமும் செல்வாக்கும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ்வார்கள் என்பது அனுபவம் உணர்த்தும் உண்மையாகும்.