கிரக வக்கிரம்
நவ கிரகங்கள் சூரியனை மையமாக வைத்து வலதுபுறமாக முன்னோக்கி சுற்றி வருகின்றன. இது அக்கிரகங்களின் சகஜமான நிலையாகும். சில சமயங்களில் தன் நிலையிலிருந்து மாறி பின்னோக்கி சுற்றுகின்றன இந்த நிலையை வக்கிர நிலை என்கிறோம்.
நவகிரகங்களில் ராகு, கேது இரண்டும் எப்பொழுதுமே பின்னோக்கி சுற்றுவதால் அதற்கு தனியாக வக்கிர நிலை கிடையாது.
சூரியன் சந்திரன் இரண்டும் ஒளிக் கிரகங்கள் இருப்பதால் இவர்களுக்கு வக்கிர நிலை கிடையாது.
பஞ்சபூதக் கிரகங்கள் என்று சொல்லக்கூடிய குரு, சனி, செவ்வாய், புதன், சுக்கிரன் இந்த ஐந்து கிரகங்களுக்கு மட்டும்தான் வக்கிர நிலை உண்டு.
இந்த 5 கிரகங்களும் குரு, சனி, செவ்வாய் ஆகிய மூன்றுக்கும் ஒருவிதமாகவும், புதன், சுக்கிரன் ஆகிய இருவருக்கும் ஒரு விதமாகவும் வக்கிரம் ஏற்படுகிறது.
குரு வக்கிரம், சனி வக்கிரம்
குருவும் சனியும் சூரியனிடமிருந்து 120 பாகை விலகிச் செல்லும் பொழுது வக்கிரம் ஆரம்பமாகிறது. 270 பாகை வரும்பொழுது வக்கிரம் நிவர்த்தியாகிறது. நட்சத்திர கணக்கில் பார்த்தால் 9 நட்சத்திரங்கள் இடைவெளி இருக்கும் போது வக்கிரம் ஆரம்பமாகும். அடுத்து 18 நட்சத்திரங்கள் இடைவெளியில் உள்ள போது வக்கிர நிவர்த்தி ஆகிவிடும்.
ராசிச் சக்கரத்தில் சூரியன் இருக்கும் வீட்டிலிருந்து 5வது வீட்டில் வக்கிரம் ஆரம்பம் 6,7,8 வீட்டில் உறுதியான வக்கிரம், 9வது வீட்டில் வக்கிர நிவர்த்தி.
எனவே குருவும், சனியும் சூரியனிடமிருந்து 5,9 ஆம் இடங்களில் இருக்கும் போது வக்கிரம் இருந்தாலும் இல்லாமலும் போகலாம். ஆனால் 6ஆம் இடத்தில் இருக்கும் பொழுது உறுதியான வக்கிர நிலை, 7ம் இடத்தில் இருக்கும்போது அதி வக்கிர நிலை 8ம் இடத்தில் இருக்கும்போது வக்கிரம் இறங்கும் நிலை, இது எந்தவித கணக்கீடுகளும் இல்லாமல் ஒரு ஜாதகத்தை பார்த்தவுடன் கூறிவிடலாம்.
செவ்வாய் வக்கிர நிலை
செவ்வாய் சூரியன் இருக்கும் வீட்டிற்கு 6வது ராசியில் வரும்பொழுது வக்கிரம் அடையும். 8வது ராசியில் வந்ததும் வக்கிர நிவர்த்தி ஆகி விடும்.
புதனும் சுக்கிரனும் இந்த அமைப்பில் வக்கிர நிலை ஏற்பட முடியாது. சூரியன் புதன், சுக்கிரன் ஆகிய மூன்று கோள்களுமே முக்கூட்டு கிரகம். எனவே சூரியனை விட்டு புதன் 28 பாகைக்கு மேலும் சுக்கிரன் 49 பாகைக்கு மேலும் போகமுடியாது. இந்த அமைப்பு இயற்கையாகவே அமைந்து விட்டதால் மேற்சொன்ன ஆறு ராசிகள் வித்தியாசம் இங்கு பொருந்தாது, வாய்ப்பும் இல்லை. இந்த கிரகங்களின் வக்கிர நிலை வேறு விதமானது.
புதன் வக்கிர நிலை
கிரகங்களில் அடிக்கடி வக்கிரம் பெறும் கிரகம் புதன் தான்..
புதனின் வக்கிர நிலையை பற்றி அடுத்த பதிவில் விரிவாக பார்ப்போம்…