இறப்பின் நிலை-கருடபுராணம்
சடலத்தின் தகனத்திற்கு பின் செய்யப்படும் சடங்குகள்!
தகனத்தின் மறுநாள் எரிந்த உடலிலிருந்து எலும்புகளையும் சாம்பலையும் சேகரிக்க வேண்டும்.
சிதைக்கு தீவைத்தவன் தான் உடுத்தியுள்ள ஆடைகளுடன் தலைமுழுகி , இறந்தவனை நினைத்து எள்ளும் தண்ணீ இறைக்க வேண்டும்.
தகனத்திற்கு வந்த உறவினர்கள் , மரித்தவனின் வீடுவரை மீண்டும் வந்து , அவனது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவேண்டும்.
கருடா ! அதன் பிறகு தகனம் செய்த இடத்தில் சிறிது பாலைத் தெளிக்க வேண்டும். இவ்வேளையில் புத்திரன் அழக்கூடாது. அவ்வாறு அழுவானாயின் , இறந்தவனின் ஜீவனை அந்தப் பாலை உண்ணும்படி வற்புறுத்துவதாகும்.சிறிதளவு பாலையும் தண்ணீரையும் கலந்து , வீட்டின் புழக்கடை கூரையில் தெளிக்க வேண்டும்.
இவ்வேளையில் இறந்தவனின் ஜீவன் , தான் உலகத்தில் வாழும் காலத்தில் செய்தவற்றையெல்லாம் நினைத்து , மீண்டும் ஒரு உடல் தனக்குக் கிடைக்காதா என்று ஏங்கும். ஆனால் அப்போதே அப்பிரேத ஜீவனை , எமதூதர்கள் எடுத்துச் செல்ல வந்துவிடுவதால் , அந்த ஜீவன் தகனம் செய்யப்பட்ட இடத்தையும் , தான் கிடத்தப்பட்டிருந்த வீட்டின் புழக்கடையையும் பார்த்து ஏங்கும்.
அடுத்து , தகனத்திற்குப் பிறகு பத்து நாட்கள் எந்த இடையூறுமின்றி இறந்தவனைக் குறித்து அவனது புத்திரன் பிண்டம் இட்டு , கைநிறைய தண்ணீர் இறைக்க வேண்டும் . பிண்டத்தில் வேகவைத்த அரிசி , காய்கறிகள் , பழங்கள் அனைத்தும் இடம்பெற வேண்டும்.
இறந்தவனுக்குப் புத்திரன் இல்லையெனில் , அவனது மனைவி இப்பிண்டத்தைச் செய்யலாம். மனைவியும் இல்லாத நிலையில் அவனது சீடனோ , சகோதரனோ செய்யலாம். இப்பிண்டத்தைத் தகனம் செய்த இடத்திலோ அல்லது ஏதேனும் புண்ணிய க்ஷேத்திரத்திலோ செய்யலாம்.
பத்து நாட்கள் தொடர்ந்து செய்யப்படும் ஒவ்வொரு பிண்டத்தின் ஒரு பகுதி . மரித்தவனின் ஜீவன் பிண்ட சரீரம் எடுப்பதற்காக அளிக்கப்படும்.. ஒரு பகுதி எம தூதர்களுக்கு அளிக்கப்படும்.
இந்த பிண்டங்ளை அளிக்கும் போது இறந்தவனை நினைத்து அளித்தால் போதும்.வேறு எந்த மந்திரங்களோ சடங்குகளோ தேவையில்லை.