கார்த்திகை மாத ராசி பலன்கள்
மேஷம்
(அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் வரை)
குரு, சனி, கேது மற்றும் புதன் ஆகிய நால்வரும் இம்மாதம் முழுவதும் சுப பலம் பெற்றுத் திகழ்கின்றனர்! 17-ம் தேதி வரை சுக்கிரன் அனுகூலமாக சஞ்சரிக்கிறார்!! பண வசதி திருப்திகரமாக உள்ளது. ஆயினும், விரய ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால், எதிர்பாராத செலவுகள் ஏற்படும். ஆதலால், சேமிப்பிற்கு சாத்தியமில்லை.
அஷ்டம் (8) ஸ்தான சூரியனால், சிறு சிறு உஷ்ணம் சம்பந்தமான சரும உபாதைகள் ஏற்படக்கூடும். கூடியவரையில், வெளியே அலைவதைத் தவிர்ப்பது நல்லது. கேதுவின் அனுகூல நிலையினால், எதிர்பாராத பண வரவிற்கும் சாத்தியக்கூறு உள்ளது. விவாகம் சம்பந்தமான முயற்சிகள் வெற்றி பெறும். வெளிநாட்டில் வேலைபார்த்துவரும் பெண் அல்லது பிள்ளையின் வருகை, மகிழ்ச்சியை அளிக்கும்.தசா, புக்திகள் அனுகூலமாக இருப்பின், வெளிநாடு சென்றுவரும் வாய்ப்பும் உள்ளது.
பரிகாரம்
திருநாகேஸ்வரம், சூரியனார்க் கோயில் தரிசனம் உதவும். திருக்கோயில்களுக்குச் செல்லும்போது, தீபமேற்றிவைக்க, பசு நெய் அல்லது செக்கிலாட்டிய நல்லெண்ணெய் எடுத்துச் செல்ல மறந்துவிட வேண்டாம். தீபத்திற்கு அளவற்ற தெய்வீக சக்தி உள்ளது.
அரிசிமாவு – நைசாக அரைத்த சர்க்கரை மாவு இரண்டையும் கலந்து உங்கள் வீட்டிற்கருகாமையிலுள்ள திருக்கோயிலின் வெளிப் பிராகாரத்தைச் சுற்றிலும் தூவி விட வேண்டும். சில மணி நேரத்தில் அத்துனை மாவுகளும் காணாமற்போவது போல் (அதை எறும்புகள் தின்றுவிடும்), உங்களுடைய கஷ்டங்களும் பனி போல் விலகிவிடும்.
ரிஷபம்
(கிருத்திகை 2ம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2ம் பாதம் வரை)
குரு, சூரியன், புதன் ஆகிய மூவரைத் தவிர, மற்ற கிரகங்களனைத்தும் உங்களுக்குச் சாதகமாக சஞ்சரிக்கின்றனர், இம்மாதம் முழுவதும்! பணப் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்வார், சுக்கிரன்! முயற்சிகள் அனைத்திலும் வெற்றியைத் தேடித் தருவார், பூமி காரகரான, செவ்வாய்!! குடும்பச் சூழ்நிலை மன நிம்மதியைத் தரும். திருமண முயற்சிகளில் சிறு குழப்பம் ஏற்பட்டு, அதன் பிறகு, வரன் அமையும்.
ஒரு சிலருக்கு, சொந்த வீடு அமையும் யோகமும் உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. தேவையான சந்தர்ப்பங்களில் பிறர் உதவி உங்களைத் தேடி வரும் என்பதை கேதுவின் சஞ்சார நிலை உணர்த்துகிறது. குடும்ப நலன் கருதி, நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். உங்கள் பிள்ளை அல்லது பெண் ஒருவர் உயர் கல்வி காரணமாகவோ அல்லது உத்தியோகம் கருதியோ வெளிநாடு செல்லும் யோகமும் அமைத்துள்ளது.
பரிகாரம்
ஜென்ம ராசியில் குரு சஞ்சரிப்பதால், வியாழக்கிழமைகளில் அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிற்குச் சென்று, தரிசித்துவிட்டு வருவது மிகச் சிறந்த பரிகாரமாகும்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3ம் பாதம் வரை)
சூரியன், சனி ஆகியோர் அனுகூல நிலைகளில் சஞ்சரிக்கின்றனர். 18-ம் தேதியிலிருந்து, சுக்கிரனும் சாதகமாக மாறுகிறார். மற்ற கிரகங்களால் நன்மை எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை! கார்த்திகை 18- தேதியிலிருந்து சுக்கிரன் சுப பலம் பெறுகிறார். வரவிற்கேற்ற செலவுகள் ஏற்படும். மாதத்தின் கடைசிவாரத்தில், நிதிப் பற்றாக்குறை ஏற்படக்கூடும்.
குரு பகவான் விரய ஸ்தானத்தில் நிலைகொண்டுள்ளதால், எதிர்பாராத செலவுகளைச் சமாளிப்பது கஷ்டமாக இருக்கும். சூரியன் சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். நெருங்கிய உறவினர்களிடையே ஏற்படும் தேவையற்ற வாக்குவாதங்கள், மன அமைதியைப் பாதிக்கும். குரு பகவானின் நிலை அனுகூலமாக இல்லை. ஆதலால், திருமண முயற்சிகளில் எவ்வித முடிவும்எடுக்க இயலாத குழப்பம் நீடிக்கிறது.
தசா, புக்திகள் அனுகூலமற்று இருப்பின், புதிய கடன்களை ஏற்க நேரிடும். ஒரு சிலருக்கு, வீடுமாற்றம் ஏற்படும் பிரச்னை உருவாகும். முதல் இரண்டு வாரங்கள் கணவர் மனைவியரிடையே சண்டை, சச்சரவு ஏற்பட்டு, அந்நியோன்யக் குறைவு உருவாகும். வெளிநாட்டில் பணியாற்றிவரும் பிள்ளை அல்லது பெண்ணிற்கு, உத்தியோகம் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்பட்டு, கவலையை அளிக்கும். நெருங்கிய உறவினரின் உடல் நலன் பாதிக்கப்பட்டு, கவலையை அளிக்கும். கீழே கூறியுள்ள பரிகாரம் உடனுக்குடன் பலனளிக்கும்.
பரிகாரம்
தினமும்,காலை மாலை இருவேளைகளிலும் ஸ்ரீகந்தர் சஷ்டி கவசம் மற்றும், ஸ்ரீவிஷ்ணு சகஸ்ர நாமம் சொல்லி வந்தால் போதும்.
தாரக மந்திரமான ஸ்ரீராம ஜெயம் – புத்தகத்தில் 108 முறை அல்லது 1008 முறை எழுதி வரவும். உங்கள் துன்பங்கள் அனைத்தும் விலகிடும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?
கடகம்
(புனர்பூசம் 4ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் வரை)
லாபஸ்தானத்தில் குரு அமர்ந்து, கேதுவும் அனுகூலமாக அமர்ந்திருப்பதால், வருமானம் தேவையான அளவிற்கு இம்மாதம் முழுவதும் இருக்கும். லாப ஸ்தானத்தில் ராகு அமர்ந்து, அஷ்டம ராசியில் சனி பகவானும் சஞ்சரிப்பதால், வரவிற்குச் சமமான செலவுகளும் இம்மாதம் காத்துள்ளன! மாதத்தின் கடைசி வாரத்தில் நிதிப் பற்றாக்குறை சற்று கடினமாகவே இருக்கும் !! சனி பகவானின் நிலையினால், உடல் நலனில் கவனமாக இருத்தல் மிகவும் அவசியம்.
கடக ராசியில் பிறந்துள்ள முதியோர்கள், இரவு நேரத்தில் கழிவறைக்குச் செல்லும்போது, ஜாக்கிரதையாக இருத்தல்வேண்டும். ஏனெனில், கீழே விழுந்து, அடிபடும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எச்சரிக்கை செய்கின்றன. நிரந்தர உடல் உபாதைகளுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளும் நோயாளிகள் குறித்த நேரங்களில் மருந்து மாத்திரைகளை உட்கொண்டு, ஓய்வெடுத்தல்மிகவும் அவசியம்.
ராசிக்கு, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியனும், ஜென்ம ராசியில் செவ்வாயும் நிலைகொண்டுள்ளதால், வெளியில் செல்லும்போதும், இரவில் வாகனங்கள் ஓட்டும்போதும் நிதானமாக இல்லாவிட்டால், விபத்துகளில் சிக்கிக்கொள்ள நேரிடும் என்பதை கிரக நிலைகள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. விவாக முயற்சிகளில், வரனைப் பற்றி தீர விசாரித்து, அதன் பின்னரே வரனை நிச்சயிக்க வேண்டும். இல்லாவிடில்,பிறகு வருந்தநேரிடும்,
பரிகாரம் : தினமும் காலையில் சிறிது பருப்பு, நெய்,எள்,சேர்த்த ஐந்து சாத உருண்டைகளை காகத்திற்கு வைத்து வர வேண்டும். அளவற்ற சக்திவாய்ந்தது, இந்தப் பரிகாரம். புராதன ஜோதிட நூல்களில் இதுபற்றி விவரிக்கப்பட்டுள்ளது.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் வரை)
குரு, சுக்கிரன் ஆகிய இருவருமே இம்மாதம் முழுவதும் அனுகூலமாக இல்லை! வரவை விட, செலவுகளே அதிகமாக இருக்கும். சில தருணங்களில், பிறர் உதவியை நாட வேண்டிய அவசியமும் ஏற்படக்கூடும். அஷ்டம ராசியில் ராகுவும், அர்த்தாஷ்டக ராசியில் சூரியனும் சஞ்சரிப்பதால், அடிக்கடி ஏதாவதொரு உடல்உபாதை ஏற்பட்டு, மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ள நேரிடும்.
குடும்பப் பொறுப்புகள் சம்பந்தமாக. அலைச்சலும்,கவலையும் அதிகரிக்கும். களத்திர ஸ்தானத்தில், சனி பகவான் அமர்ந்திருப்பதால், மனைவியின் ஆரோக்கியத்திலும் கவனமாக இருத்தல் அவசியம். குடும்ப ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால், நெருங்கிய உறவினர்களுடன் பகையுணர்ச்சி மேலிடும். விவாக முயற்சிகளில் இழுபறி நிலை நீடிக்கும்.
மருத்துவச் செலவுகளில் பணம் விரயமாகும். மாத ஆரம்பத்திலிருந்தே திட்டமிட்டு செலவு செய்தால், பிறர் உதவியை நாடவேண்டிய அவசியமிராது. பெண் அல்லது பி ள் ளை ஒருவரின் உத்தியோகப் பிரச்னை மன நிம்மதியைப் பாதிக்கும். சிலருக்கு பூர்வீகச் சொத்து ஒன்று கைவிட்டுப் போகும் சாத்தியக்கூறும் உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.
பரிகாரம்: திரு நள்ளாறு, திருநாகேஸ்வரம், காள ஹஸ்தி, நாக மங்களா இவற்றில் எதாவதொரு திருக்கோயில் தரிசனம் மிகச் சிறந்த பரிகாரமாகும். இயலாதவர்கள், இத்திருக்கோயில்களை மனத்தளவில் தியானித்து, மாலையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வைத்தால் போதும்.
கன்னி
(உத்திரம் 2ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2ம் பாதம் வரை)
புதன் மற்றும் ராகு ஆகிய இருவரைத் தவிர மற்ற கிரகங்கள் அனைவரும் உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிக்கின்றனர், இம்மாதம் முழுவதும்! மேலும், உங்கள் ஜென்ம ராசிக்கு குரு பகவானின் சுபப் பார்வை கிடைப்பதும் இம்மாத நன்மைகளை அதிகரிக்கக்கூடியகிரக நிலையாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நிகழும். கருவுற்றிருக்கும் வனிதையருக்கு, சுகப் பிரசவம் நிச்சயம்! ஜென்ம ராசியில் கேது அமர்ந்திருப்பதால்,மனதில் ஆன்மிகச் சிந்தனைகள் ஓங்கும்.
தசா, புக்திகள் சாதகமாக இருப்பின், பாடல் பெற்ற திருத்தல தரிசனம் கிடைப்பதற்கும் வழிவகுத்தருள்வார் கேது! குரு பகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்து, ஜென்ம ராசிய பார்வையிடுவதால், இம்மாதம் சற்று தாராளமாகவே நீங்கள் செலவு செய்யலாம். திட்டமிட்டு செலவு செய்தால், எதிர்காலத்திற்கென்று சேமிப்பிற்கும் வாய்ப்புள்ளது.
ஒரு சிலருக்கு, சொந்த வீடு அமையும் யோகமும் உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. திருமண வயதில் பெண் அல்லது பிள்ளை இருப்பின், மனத்திற்குப் பிடித்த வரன் அமையும். பிள்ளை அல்லது பெண் வெளிநாடு செல்ல ஆர்வமிருப்பின், பூர்வாங்க ஏற்பாடுகளை இம்மாதத்தில் செய்யலாம். அவசியமான விசா எளிதில் கிட்டும். சென்று – வர நிதி வசதியும் அதிகம் பாடுபடாமல் கிடைக்கும்.
பரிகாரம்
சனிக்கிழமைதோறும் மாலையில் பிரதோஷ கால நேரத்தில் (5.30 -7.00) மண் அகலில் ஐந்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வைப்பது,கற்பனை செய்து பார்க்கக்கூட இயலாத பரிகார பலனைத் தரும். 12 கிழமைகள் செய்வது நல்லது.
துலாம்
(சித்திரை 3ம் பாதம் முதல், சுவாதி விசாகம் 3ம் பாகம் வரை)
வரவும், செலவும் சமமாக இருக்கும், இம்மாதம் முழுவதும்! இருப்பினும், பற்றாக்குறை ஏற்படுவதற்கு சாத்தியக்கூறு இல்லை என்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. சுக்கிரனும், ராகுவும் அனுகூலமாக இருப்பதால்,எதிர்பாராத பண வரவிற்கு சாத்தியக்கூறு உள்ளது. அந்நிய நாட்டில் பணியாற்றிவரும் பெண் அல்லது பிள்ளையின் எதிர்பாராத வருகை,மனதிற்கு மகிழ்ச்சியையும்,உற்சாகத்தையும் அளிக்கும். மோட்சகாரகரான, கேது, கன்னியில் நிலைகொண்டிருப்பதால், மனதில் ஆன்மிகச் சிந்தனைகள் அதிகரிக்கும்.
மகான்கள், ஆன்மிகப் பெரியோர்கள் ஆகியோரின் ஆசியும், அருளும் கிட்டும். பிரசித்திப் பெற்ற சேத்திரங்கள் தரிசனம் கிடைப்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளது. ஒரு சிலருக்கு,கங்கா ஸ்நான பாக்கியம் கிடைப்பதற்கும் வாய்ப்பு உருவாகும். திருமண முயற்சிகளில் சிறு தடங்கல்கள் ஏற்படக்கூடும். சுக்கிரனின் நிலையினால், குடும்பத்தில் ஒற்றுமையும் அந்நியோன்யமும் அதிகரிக்கும். அஷ்டம ராசியில், குருவும், பூர்வபுண்ணியராசியில்,சனி பகவானும், அமர்ந்திருப்பதால், குடும்பப் பிரச்னைகளினால், மன அமைதி சற்று பாதிக்கப்படும், பரிகாரம் உதவும்.
பரிகாரம்
சனி மற்றும் குருவிற்கு பரிகாரம் செய்வது நல்ல பலனையளிக்கும். தினமும் காலையில் ஐந்து சாத உருண்டைகள் செய்து, சிறிது நெய், எள், பருப்பு சேர்த்து காகத்திற்கு அளித்துவந்தால், போதும்! பி பிரமிக்கத்தக்க பலன் கிடைக்கும்.
விருச்சிகம்
(விசாகம் 4ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை வரை)
குரு, சுக்கிரன் மற்றும் லாப ஸ்தானத்தில் கேது ஆகியோர் உங்களுக்கு அளவற்ற நன்மைகளைச் செய்வார்கள் மாதம் முழுவதும் பண வசதிக்குக் குறைவிராது. குடும்பத்தில் சிறு சுப நிகழ்ச்சிகள் நிகழ்வதால், மனதிற்கு மகிழ்ச்சியும், நிறைவும் ஏற்படும். கர்ப்பிணிப் பெண்களுக்கு, சுகப் பிரசவம் ஏற்பட கிரக நிலைகள் சுப பலம் பெற்றுள்ளன.
களத்திர ஸ்தானத்திற்கு குரு பகவான் சுப பலம் பெற்றிருப்பதால், திருமண முயற்சிகளுக்கு உகந்த மாதமிது! கணவர் மனைவியரிடையே – ஒற்றுமை நிலவும். உத்தியோகம் காரணமாகவோ அல்லது வேறு காரணங்களினாலோ இதுவரை பிரிந்திருந்த தம்பதியினர் ஒன்றுசேர்வதற்கு வழிவகை புரிந்திடுவர் கிரகங்கள்!!
பூர்வீகச் சொத்து சம்பந்தமாக பிரச்னைகளில் பரஸ்பர, சுமுகமான முடிவு ஏற்படும் ஜென்ம ராசியில் அக்னிக் கிரகமான சூரியன் நிலைகொண்டிருப்பதால், உஷ் ண சம்பந்தமானஉபாதைகளும், சரும பாதிப்பும் ஏற்படக்கூடும். கூடியவரையில், வெளியில் செல்வதைக் குறைத்துக் கொள்வது நன்மை செய்யும். திருமணமுயற்சிகளுக்கு ஏற்ற மாதம் இந்தக் கார்த்திகை!! அர்த்தாஷ்டகத்தில்,சனி பகவானும், பூர்வ புண்ணிய, புத்திர ஸ்தானத்தில் ராகுவும் சஞ்சரிப்பதால், குழந்தைகளின் உடல் நலனில் கவனமாக இருத்தல் நன்மை செய்யும்.
பரிகாரம்:
ஸ்ரீவைத்தீஸ்வரன் கோயில் தரிசனம் மிகச் சிறந்த பரிகாரமாகும். உடனுக்குடன் பலன் கிட்டும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் வரை)
சுக்கிரன் மற்றும் சனி பகவான் ஆகிய இருவராலும் நன்மைகள் உண்டு. மற்ற கிரகங்கள் அனுகூலமாக இல்லை. வருமானம் ஓரளவு நல்லபடி இருப்பினும், எதிர்பாராத செலவுகளில் பணம் கரையும். மாதத்தின் மூன்றாவது வாரத்திலிருந்து, நிதிப் பற்றாக்குறை கடுமையாக இருக்கும். சில தருணங்களில், பிறர் உதவியை நாட வேண்டிய கட்டாயம் ஏற்படும். விரயத்தில் சூரியனும், அஷ்டமத்தில் செவ்வாயும், அர்த்தாஷ்டகத்தில் ராகுவும் நிலைகொண்டிருப்பதால், ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் மிகவும் அவசியம்.
தற்போது நடைபெறும் தசா, புக்திகள் அனுகூலமாக இல்லாமலிருப்பின், உடல்நலன் பாதிக்கப்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளது. எத்தகைய தருணங்களிலெல்லாம், நாம் நம் வாழ்க்கையில் எந்தெந்த அம்சங்களில் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை நமக்கு முன்கூட்டியே உணர்த்தி, நம்மைக் காப்பாற்றி உதவும் சக்திவாய்ந்த வானியல் கலையே ஜோதிடம் ஆகும். ஜோதிடக் கலைப் பற்றி ரிக் வேதமும், அதர்வண வேதமும் விவரித்துள்ளன. மனிதப் பிறவியின் உயர்ந்த பாதுகாப்பு அரணாக விளங்குவது ஜோதிடக் கலையாகும். விவாக முயற்சிகளில் வரன் அமைவது சற்று கடினம். நெருங்கிய உறவினர்களிடையே தேவையற்ற வாக்குவாதமும் ஒற்றுமைக் குறைவும் ஏற்பட்டு, மனக் கவலையை அளிக்கும்.
பரிகாரம்
நாகமங்களா, திருக்கொள்ளிக்காடு அபிஷேகம். தரிசனம் மிகச் சிறந்த பரிகாரமாகும்.
மகரம்
(உத்திராடம் 2ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2ம் பாதம் வரை)
ஏழரைச் சனியின் கடைசிப் பகுதியிலுள்ள உங்களுக்கு, மாதம் முழுவதும் பெரும்பான்மையான கிரகங்கள் மிகவும் அனுகூலமாக சஞ்சரிக்கின்றனர். பூர்வ புண்ணிய, புத்திர ஸ்தானத்தில் குரு பகவானும், லாப ஸ்தானத்தில் சூரியனும் அமர்ந்துள்ள இத்தருணத்தில், சுக்கிரனும் சுப பலம் பெற்றுத் திகழ்கிறார். வருமானம் திருப்திகரமாக உள்ளது. செவ்வாய் மற்றும் கேது ஆகியோர் மட்டும் சாதகமாக இல்லை! குடும்பச் சூழ்நிலை நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளிக்கும். திருமணம், குழந்தைப் பாக்கியம் ஆகிய சுப நிகழ்ச்சிகள் மன நிறைவையளிக்கும். நீதிமன்ற வழக்குகள் இருப்பின், சாதகமான தீர்ப்பினை எதிர்பார்க்கலாம். வெளிநாட்டிலுள்ள பெண் அல்லது பிள்ளையின் குடும்பத்திலிருந்து நல்ல செய்தி ஒன்று கிடைக்கும். திருமண முயற்சிகளுக்கு ஆதரவாக உள்ளனர். குருவும் சுக்கிரனும்! பாக்கியஸ்தானத்தில் கேது இருப்பதால் இம்மாத கடைசி வாரத்தில் எதிர்பாராத செலவு ஒன்று ஏற்படக்கூடும்.
பரிகாரம்
செவ்வாய்க்கிழமைகளில் அருகில் உள்ள திருக்கோயில் ஒன்றுக்கு சென்று தீபத்தில் சிறிது நெய் சேர்த்து தரிசித்து விட்டு வந்தால் போதும். ஒவ்வொரு திருக்கோயிலும் மந்திர சக்தி வாய்ந்த எந்திரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
கும்பம்
(அவிட்டம் 3ம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3ம் பாதம் வரை)
சூரியன்,சுக்கிரன் மற்றும் செவ்வாய் ஆகிய மூவரும். அனுகூலமாக உள்ளனர். மற்ற கிரகங்களால், ஓரளவே நன்மைகளை எதிர்பார்க்க முடியும். குறிப்பாக, ஜென்ம ராசியில் சனி சஞ்சரிப்பது, நன்மையைத் தராது. இருப்பினும், கும்பம், அவரது ஆட்சி விடாக இருப்பதால், சிரமங்கள் சற்று குறைவாகவே இருக்கும். (ஆதாரம்: “பிருஹத் ஸம்ஹிதை” மற்றும் “பூர்வ பாராசர்யம்” போன்ற புகழ்பெற்ற மிகப் புராதன ஜோதிட நூல்கள்). கூடியவரையில், கடின உழைப்பையும், தேவையற்ற பிரயாணங்களையும், கற்பனையான கவலைகளையும். இரவு நேரங்களில் வாகனங்கள் ஓட்டுவதையும் தவிர்ப்பது நல்லது.
நண்பர்கள். உறவினர்கள், சக ஊழியர்கள் ஆகியோருடன் வாக்குவாதம் வேண்டாம். திருமண முயற்சிகளில் தீர விசாரித்து, திருப்தியடைந்த பின்னரே, வரனை நிச்சயிக்க வேண்டும். ஏனெனில், ஏழரைச்சனிக் காலத்தில், நமது சிந்தனைத் திறனும் பாதிக்கப்படக்கூடும் என விவரித்துள்ளன. பழைமையான ஜோதிடக் கிரந்தங்கள்.
கைப் பணத்தைச் சிக்கனமாகச் செலவு செய்வதும் அவசியம். வெளியிடங்களிலும், தரக்குறைவான உணவகங்களிலும் சாப்பிடுவதைத் தவிர்த்தல் முக்கியம். ஏனெனில், தொற்று நோய்களால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. சிறு உபாதையானாலும், அலட்சியம் செய்யாமல். மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.
பரிகாரம்
சனிக்கிழமைகளில் காகத்திற்கு சிறிது பருப்பு, நெய், எள் சேர்த்து ஐந்து சாத உருண்டைகளை வைத்து வந்தால் மிக சிறந்த பரிகார பலன் கிட்டும்.
மீனம்
(பூரட்டாதி 4ம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி வரை)
வருமானத்திற்குச் சமமான செலவுகள் ஏற்படும். இம்மாதத்தில்! மாதத்தின் கடைசி வாரத்தில், பணப் பற்றாக்குறை ஏற்படக்கூடும். கார்த்திகை 18- ம் தேதியிலிருந்து, சுக்கிரன் அனுகூலமாக மாறுகிறார். 17- ம் தேதி வரை ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் நல்லது. தேவையற்ற அலைச்சல்களைத் தவிர்ப்பது அவசியம். திரிதியை குரு புதிய கடன்களை ஏற்படுத்தக்கூடும். கையிலுள்ள பணத்தைச் சிக்கனமாகச் செலவு செய்தல் வேண்டும். திருமண முயற்சிகளில் வரன் அமைவது தாமதப்படும்.
புத்திர ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால், குழந்தைகளுக்கு உஷ்ண சம்பந்தமான உடல் பாதிப்பு ஏற்படக்கூடும். களத்திர ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால், கணவர் – மனைவியரிடையே சிறு சிறு கருத்து வேற்றுமைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சூரியனின் சஞ்சார நிலையும் ஆதரவாக இல்லாததால், சரும சம்பந்தமான உபாதைகள் ஏற்பட்டு எளிய மருத்துவ சிகிச்சை மூலம் சரியாகும்.
பரிகாரம் வியாழக்கிழமைகளில் விநாயகர் பெருமானின் திருக்கோயில் ஒன்றுக்குச் சென்று தீபம் ஏற்றி வைத்து தரிசித்து விட்டு வந்தால் போதும் தீபத்தின் பரிகார சக்தி அளவிடற்கரியது.